பத்மஸ்ரீ விருது: பாம்புபிடி வீரர்களுக்கு குவியும் பாராட்டுகள்!

கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம் மற்றும் சமூகப் பணி போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று விருதுகள் அறிவிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு கடந்த மே 1 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை முடிவடைந்த நிலையில், 2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது.

தமிழகத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களும் சமூக ஆர்வலர்களுமான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இருளர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் பாம்பு பிடிப்பது குறித்து உலக அளவில் பயிற்சி அளித்து வருகின்றனர்.

மருத்துவத்துறையில் சிறப்பாக சேவையாற்றியதை கவுரவிக்கும் வகையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மருத்துவர் திலீப் மஹாலனாபிஸ்-க்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இறப்புக்கு பிந்தைய பத்ம விருதாக இது வழங்கப்படுகிறது. ஓஆர்எஸ் கரைசலை கண்டுபிடித்த இவர், உலகம் முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான உயிர்களை காப்பாற்றியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1971-ம் ஆண்டு வங்காளதேசத்தில் நடைபெற்ற விடுதலைப் போரின்போது, அகதிகள் முகாமில் இவர் பணியாற்றி வந்தார்.

அப்பகுதியில் வேகமாகக் காலரா பரவி மக்களை அச்சுறுத்தி வந்தது. அந்நேரம், டாக்டர் திலீப், ஓ.ஆர்.எஸ். கரைசலை கொடுத்து ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்றினார்.

You might also like