முத்துப்பழனியும் செங்கோட்டை ஆவுடையக்காளும்!

வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

***
தஞ்சை தமிழ் மண் களத்தின் காவியமான ‘ராதிகா சாந்தவனமு’ மூலம் தெலுங்கு இலக்கியத்தில் அதிர்வலைகளைக் கிளப்பியவர் முத்துப்பழனி.

பின் நவீனத்துவம் என்பது ஏதோ மேலை நாட்டில் இருந்து வந்ததாக நமது சிந்தனைகள் ஓடுகின்றன.

உண்மையில் ஔவையின் பாக்களிலும், ஆண்டாள், காரைக்கால் அம்மையார், முத்துபழனியின் ராதிகா சந்தாவனம், ஆவுடையக்காள் கவிதைகள், அகநானூறு என்று தமிழில் சொல்லப்பட்ட வரிகளிலும் பின்நவீனத்துவம் இருக்கிறது என்பதை உணரத் தவறுகின்றோம்.

18 – ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னரான பிரதாபசிம்ஹா ராஜா தென்னாட்டு வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வுகளில் சம்பந்தப்பட்டிருந்தார். 1730 முதல் 1763 வரை இவர் தஞ்சையை ஆண்டு வந்தார்.

பிரதாபசிம்ஹா ராஜாவின் அரண்மனையில் பல தேவதாசிகள் உயரிய அந்தஸ்துடன் இருந்து வந்தனர்.

அப்படிப்பட்ட பல தேவதாசிகளில் ‘முத்துப்பழனி’ (1739 -1790) எனும் பெயர் கொண்ட தேவதாசி அவருடைய ஆசை நாயகியாக இருந்தார்.

தஞ்சை நாயகி என்ற கணிகையின் பேத்தி இவர். அரசவை நடன மாதாக இருந்த முத்துப்பழனி, கலைகளில் தேர்ச்சியும் பன்மொழிப் புலமையும் வாய்ந்தவராகவும் இருந்திருக்கிறார். அரசனுக்கே ஆலோசனை சொல்பவராகவும் இருந்திருக்கிறார்.

முத்துபழனி ஆண்டாளின் திருப்பாவையைத் தெலுங்கில் மொழிபெயர்த்தவர். சமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்.

இசை, இலக்கியம், நடனம் அனைத்திலும் கைதேர்ந்தவர். கவிதைகளை எழுதுவதோடு மட்டுமல்லாமல், ஏழு வரி வசனம் என்ற ஒரு புதிய உரைநடை வடிவத்தை அறிமுகம் செய்திருக்கிறார். அதை சப்தபதம் என்று அழைத்தார்.

ஆண்டாளின் திருப்பாவையையொட்டி அதே போல தெலுங்கில் ஒரு காவியத்தை இயற்றினார் முத்துபழனி. அவர் எழுதிய அந்த காவியம்தான் ‘ராதிகா சாந்தவனம்’.

இலாவை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொள்ளும் கிருஷ்ணன் முதல் மனைவியான ராதாவை சமாதானப்படுத்துவது போல அமைந்த பாடல்களைக் கொண்டதால் ‘ராதிகா சாந்தவனம்’ என்று அழைக்கப்பட்டது இந்நூல்.

பெண்ணின் பார்வையில் காமவுணர்வுகளையும் பாலின்ப அனுபவத்தையும் முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட கவிதைகள் கொண்டது இந்நூல். பேச்சுவழக்கில் உள்ள பழமொழிகள், மரபுத் தொடர்கள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன.

தெலுங்கு – ஆங்கில அகராதியை வெளியிட்ட சார்லஸ் பிலிப் ப்ரவுன் என்பவர் கீழ்த்திசை ஓலைச்சுவடி நூலகத்தில் ராதிகா சாந்தவனத்தின் ஓலைச்சுவடியைப் பார்த்திருக்கிறார்.

இந்த ஓலைச்சுவடி 1887- இல் திருக்கடையூர் கிருஷ்ணாராவ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

பின்னர் இது அதிபதி வெங்கட்டன்னராசு என்பவரின் மேற்பார்வையில் 1907- இல் மறு அச்சு செய்யப்பட்டது. காமத்தைத் தூண்டும் பாடல்கள் இருப்பதாகக் கருதப்பட்டதால், அது முழுமையாகப் பதிப்பிக்கப்படவில்லை.

ராதிகா சாந்தவனம் 584 பாடல்களைக் கொண்டது. சந்தியா முல்சந்தானியால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு The Appeasement of Radhika என்னும் நூலாகப் பென்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

பின்னர், தேவதாசி மரபில் வந்த நாகரத்தினம்மா அந்தக் கவிதைகளை முழுமையாகக் கண்டுபிடித்து – தன்னிடம் இருந்த மூல ஓலைச்சுவடிகளின் அடிப்படையில் 1910- இல் பதிப்பித்தார்.

தியாகராஜ பாகவதரின் சிஷ்யையான நாகரத்தினம்மா, திருவையாறில் தியாராஜ பாகவதருக்கு நினைவு மண்டபம் கட்டும் பணிக்கு நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தியாகராஜ பாகவதரின் சமாதிக்கு அருகே அவருக்குக் கோயில் கட்டினார். ஜனவரி மாதத்தில் தியாகராஜரின் நினைவு நாளில் இசைத் திருவிழா ஒன்றை நடத்தினார். அது பின்னர் ஒவ்வோராண்டும் நடைபெறும் வருடாந்திரக் கச்சேரியாக மாறியது.

நாகரத்தினம்மா ராதிகா சாந்தவனத்தை வெளியிட்டதும் அது அப்போது கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது. குறிப்பாக கந்துகுரி வீரசேலிங்கம் பந்துலு என்கிற இலக்கிய விமர்சகர் கடுமையாக எதிர்த்தார்.

ராதிகா சாந்தவனத்தை ஆபாசமான பிரதி எனவும் அதை எழுதியிருப்பவர் ‘தரம் கெட்டவர்’ எனவும் எதிர்ப்பாளர்கள் சொன்னார்கள்.

இசைச் கலைஞர்கள், கோயில் நடனமாதர்கள் ஆகிய இருவரும் பொதுமக்களுடன் பழகினால், கருத்துகளைப் பகிர்ந்து கொண்டால், ஏற்கெனவே உள்ள மக்களின் பண்பாட்டில் அது பாதிப்பை ஏற்படுத்தும் பொது மக்களின் ஒழுக்கத்தை தாக்கி, அதைச் சீரழிக்கும் என்றனர்.

முத்துப்பழனி என்ற தேவதாசியால் எழுதப்பட்டதும், தேவதாசியான நாகரத்தினம்மாவால் பதிப்பிக்கப்பட்டதுமான ராதிகா சாந்தவனம் பொதுமக்களின் பண்பாட்டைச் சீரழிக்கும் என்ற அவர்களின் கருத்துகள் அப்போது வலுவாக இருந்தது.

இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 292 ஆவது பிரிவின் கீழ் முத்துப்பழனியின் படைப்பின் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிராகக் கடுமையாகப் போராடினார் நாகரத்தினம்மா. ஆனால் அதற்கு எந்தப் பலனும் இல்லை.

சென்னை காவல்துறை டெபுடி கமிஷனர் கன்னிங்ஹாம் தலைமையில் ஒரு குழு 1911 மே மாதம் நடத்திய ஆய்வில் மொத்தம் 18 நூல்களை ஆபாசம் என்று முடிவுக்கு வந்து ஒரு பட்டியல் தயாரித்தது. அதில் இரண்டாமிடத்தில் நாகரத்தினம்மா பிரசுரித்த முத்துப்பழனியின் ராதிகா சாந்தவனம் இருந்தது. நூல் தடை செய்யப்பட்டது.

இந்திய விடுதலைக்குப் பின்பு சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த தங்குதுரி பிரகாசம் இந்நூலின் மீதான தடையை நீக்கினார். தடையை நீக்கிய பின்பு அவர் பெருமிதத்தோடு சொன்னார் : “தெலுங்கு இலக்கியத்தின் அணிகலனில் சில முத்துக்களை மீண்டும் பதித்திருக்கிறேன்”.

இன்றும் கூட, பெண் கவிஞர்கள் எழுதத் தயங்கும் பாலியல் இச்சைமிகுந்த சொற்களை 17 – ஆம் நூற்றாண்டிலேயே எழுதியிருக்கிறார் முத்துப்பழனி.

ஒரு பெண்ணின் முதல் பாலியல் அனுபவம், இன்னொரு பெண் மீது கணவன் விருப்பம் கொள்ளும்போது எழும் பொறாமையுணர்வு என்று பெண்ணின் அகவுணர்வுகளை மிகத் துல்லியமாக முன் வைத்த கவிதைகள் முத்துப் பழனியுடையவை.

சங்கப்பாடல்களின் தொடர்ச்சியை முத்துபழனியின் பாடல்களில் பார்க்க முடிகிறது. ஆண்டாள் எழுதிய பதத்தை வேறு வகையான வாக்கிய அமைப்பில் தெலுங்கில் எழுதியிருக்கிறார்.

மிகச் சிக்கலான உளவியலைக் கூட மிக எளிதாக எழுதும் திறன் பெற்ற முத்துபழனி, “ஒருத்தியால் விலையுயர்ந்த ஆபரணங்களை விட்டுக் கொடுக்க முடியும்; உறவுகளையும் மதிப்புமிக்க பொருள்களையும் விட்டுக் கொடுக்கமுடியும்; ஆனால், வாழ்வை விட்டுக்கொடுக்க முடியுமா” எனக் கேட்டிருக்கிறார்.

இந்தக் கேள்வி அவருடைய தனிப்பட்ட வாழ்விலிருந்தும் சூழலிலிருந்தும் பிறந்தவை.

ஆணாதிக்கச் சமூகத்தின் இலக்கணம், கற்பு, ஒழுக்கவாதம் எல்லாவற்றையும் அத்துமீறிய இந்தக் காதலையும் அச்சம், மடம், நாணங்களை உதறித் தள்ளிய பெண்ணுடலையும் படைத்துக் காட்டியவர் முத்துப்பழனி.

ராதிகா சாந்தவனத்தை தமிழில் மொழிபெயர்த்து சகோதரிகள் கவிஞர் அ.வெண்ணிலா, கவிஞர் மதுமிதா நூலாகக் கொண்டு வர இருக்கின்றனர்.

இதை ஏற்கெனவே தில்லி பல்கலைக்கழக தமிழ் பேராசிரியை முனைவர் தி.உமாதேவி மொழிபெயர்த்து காவ்யா பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது.

ஆதிரா முல்லை, ஆர்.ஆர்.சீனிவாசன், கவிஞர் குட்டி ரேவதி ஆகியோரின் முன்னெடுப்பு பணியில் ராதிகா சந்தவனத்தை தமிழில் கொண்டு வர முயன்றேன்.

கவிஞர் வெண்ணிலாவும் கவிஞர் மதுமிதாவும் அதைக் கொண்டு வர இருப்பதால், அதை நிறுத்திவிட்டு, ஆவுடையக்காள் பாக்களை மட்டும் திரும்பவும் நூல் வடிவில் கொண்டு வர பணிகள் நடக்கின்றன.

முத்துப்பழனியைப் போல அல்லாமல், வேறுபட்ட திசையில் அதேசமயம் பெண்ணின் வலிகளையும், உணர்வுகளையும் வெளிப்படுத்திய இன்னொரு பெண் கவிஞர் செங்கோட்டை ஆவுடையக்காள்.

ஆவுடையக்காள் செங்கோட்டை ஆற்றங்கரைத் தெருவில் வசதியான பிராமண குடும்பத்தில் பிறந்தவர். அவர் எப்போது பிறந்தார் என்பதற்கான துல்லியமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. கி.பி. 1655–1695 இடைப்பட்ட காலகட்டத்தில் அவர் பிறந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

அவருக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டது. சிறுவயதிலேயே பருவமடைவதற்கு முன்பே இவர் விதவையானார்.

கணவனை இழந்த கைம்பெண்ணாக வீட்டுக்குள் வளர்ந்து வந்த அவருக்கு ஊராரின் எதிர்ப்பையும் மீறி அவருடைய தாயார், பண்டிதர்களை வீட்டுக்கே வரவழைத்து ஆவுடையக்காளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க ஏற்பாடுகளைச் செய்தார். அதனால் கல்வியறிவும், சிந்தனைத் திறனும் ஆவுடையக்காளுக்கு ஏற்பட்டது.

தற்செயலாக அந்த ஊருக்கு அப்போது வருகை புரிந்த ஸ்ரீவெங்கடேசர் என்னும் துறவி , ஆவுடையக்காளின் அகம் விழிப்புறும் வகையில் ஞானத்தை வழங்கிவிட்டு மறைந்து போனார்.

அத்துறவியை ஆவுடையக்காள் தன் குருவாக ஏற்றுக் கொண்டார். அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது என்று சொல்லிய ஊர்க்காரர்கள் அவரை சாதி நீக்கம் செய்தார்கள்.

சிறிதுநாட்களில் ஆவுடையக்காள் அந்த ஊரைவிட்டு வெளியேறிவிட்டார்.

திருச்சிக்கு அருகே உள்ள ஒரு மடத்தில் மீண்டும் துறவியைச் சந்தித்த ஆவுடையக்காளுக்கு உபதேசமும் ஆசியும் வழங்கிய ஸ்ரீவெங்கடேசர் என்ற அந்த துறவி. ஆவுடையக்காளை செங்கோட்டைக்கே சென்று தங்கியிருக்கும்படி சொல்லி விட்டுச் சென்றார்.

இதற்கிடைப்பட்ட காலத்தில் அத்வைத உண்மைகளை விளக்கும் பாடல்களை ஆவுடையக்காள் பாடினார். அவை எங்கெங்கும் பரவி, அவருக்கு மக்களிடம் மதிப்புமிக்க ஓரிடத்தை உருவாக்கிக் கொடுத்தன.

அவருக்குப் பல சீடர்கள் உருவாகினர். திரும்ப அவர் ஊருக்கு வந்தபோது, அவரை அங்கிருந்தவர்கள் வரவேற்றனர்.

ஆவுடையக்காள் ஆயிரம் பாடல்களுக்கு மேல் இயற்றி உள்ளார். அவரின் பாடல்கள் பல சிறு நூல்களாகவும், திரட்டு நூல்களாகவும் வெளிவந்துள்ளன. அவற்றில் வேதாந்தப் பாடல் திரட்டு, பிரம்ம மேகம் ஆகியன குறிப்பிடத்தக்கன.

ஆவுடையக்காளைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களையும் கிடைத்த பாடல்களையும் முதன்முதலாகத் திரட்டியவர் ஆய்க்குடி வேங்கடராம சாஸ்திரிகள். 1953 – ஆம் ஆண்டில் ஆவுடையக்காள் பாடல்களின் தொகுப்பு வெளி வந்தது.

அத்வைத உண்மையைப் பரப்புவதையே தன் நோக்கமாகக் கொண்டு, மிக எளிய மனிதர்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஏராளமான பாடல்களைப் பாடினார்.

அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த நாட்டுப்புறப் பாடல்களின் எல்லா வடிவங்களிலும் ஆவுடையக்காள் பாடல்களைப் பாடியிருக்கிறார்.

நாட்டுப்புறப் பாடல்களின் சாயலையுடைய பாடல்களைத் தவிர, பல்லவி, அனுபல்லவி, சரணங்களுடன் ராகமும் தாளமும் கூடிய சுவையான கீர்த்தனைகளையும் ஆவுடையக்காள் புனைந்துள்ளார்.

ஏறத்தாழ எழுபத்து நான்கு கீர்த்தனைகள் ஏட்டிலிருந்து எடுத்தெழுதித் தொகுக்கப்பட்டுள்ளன.

தனிப்பாடல்களைத் தவிர ‘சூடாலை கதை’ என்னும் தலைப்பில் ஒரு குறுங்காவியத்தையும் எழுதியுள்ளார் ஆவுடையக்காள். இக்காவியம் ஏறத்தாழ அறுநூறு வரிகளைக் கொண்டது.

‘ஞானக் குறவஞ்சி’ என்பது மற்றொரு குறுங்காவியம். நிகழ்கலைக்கே உரிய பலவிதமான தாளக்கட்டுடைய பாடல்கள் இக்காவியத்தில் உள்ளன.

ஆவுடையக்காளைப் பொருத்தவரை மெய்ஞ்ஞானம் என்பது அத்வைத மெய்ஞ்ஞானம். அந்த மெய்ஞ்ஞானத்தை ஆண்டியாக முன்னிலைப்படுத்தி அவர் பாடல்களை எழுதியுள்ளார்.

இவர் வாழ்ந்த காலத்தில் பெண்கள் அடக்குமுறை, சாதிய சமய ஒடுக்குமுறை உச்சமாக இருந்தது. இவர் சிறு வயதில் விதவை ஆகி, சாதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்தக் கடுமையான வாழ்க்கைச் சூழ்நிலை இவரது பாடல்களின் கருப்பொருட்களில் வெளிப்படுகின்றது.

இவரது பாடல்களில் சாதிய எதிர்ப்பு, பெண்ணுரிமை, சித்த, அத்வைத, வேதாந்த கருத்துகள் பரந்து கிடைக்கின்றன.

தீட்டு என்று மகளிரை விலக்கி வைத்த அந்த மூன்று நாட்களின் வலியைப் பற்றி முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஆவுடையக்காள் பேசியுள்ளார்.

நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் அவருடைய பாடல்கள் வாய்வழக்காகவே பாடப்பட்டு வந்தன. ஆவுடையக்காள் ஒரு வகையில் மகாகவி பாரதியாரின் கவிதைகளைப் பாதித்த ஆளுமைமிக்கவர்.

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற கேட்ட அந்தக் காலத்திலேயே, மிகவும் தீவிரமான சிந்தனைப் போக்குகளுடைய பெண் ஆளுமைகள்தாம் முத்துப்பழனியும், செங்கோட்டை ஆவுடையக்காளும்.

நன்றி: தினமணி

You might also like