என்றும் அதிகாரத்தின் குரல் ஒரே மாதிரி தான்…!

பரண் :

கட்டாய இந்தியை எதிர்த்து 1938 டிசம்பர் 5-ம் தேதி மறியல் செய்தார் லெ.நடராசன்.

கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு 50 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.சிறைக்குச் சென்ற அவரிடம் மன்னிப்புக் கேட்கச் சொன்னார்கள்.

“இறந்தாலும் இறப்பேனே தவிர மன்னிப்புக் கேட்க மாட்டேன்”என்று மறுத்த நடராசனை சென்னை அரசு பொது மருத்துவமனையில் உடல் நலிவுற்ற நிலையில் சேர்த்தார்கள்.

ஜனவரி 15-ம் தேதியன்று உயிரிழந்தார் நடராசன்.

அங்கு மறைந்த நடராசன் பற்றி அன்றைய சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
அப்போது தலைமைப் பொறுப்பில் இருந்த ராஜாஜி சொன்னார்.

“நடராசனுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. கடுமையான வியாதியோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நடராசன் இறந்தார்.”

“இந்தப் பையனுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்றால் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றது எப்படி?” என்று கே.வி.ஆர்.சாமி என்ற உறுப்பினர் கேட்டதற்கு ராஜாஜி சொன்ன பதில்:

“கேள்வி நியாயமானது தான். ஆனால் இதற்குச் சர்க்கார் பதில் சொல்ல முடியாது”.
அதற்குப் பதில் அளிக்கிற விதத்தில் இறந்த நடராசனின் தந்தையான லெட்சுமணன் பத்திரிகையாளரிடம் சொன்னார்.

“முதன்மந்திரி பதவி வகிக்கும் கனம் ஆச்சாரியார் என் மகன் எழுதப் படிக்கத் தெரியாதவன் எனக் கூறி பொது ஜனங்களை ஏய்க்கப் பார்ப்பது வருந்தத் தக்கது”

அதே ராஜாஜி 18.1.1965 ல் திருச்சியில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.

”நாட்டுப்பற்றில் நான் யாருக்கும் தாழ்ந்தவன் அல்ல. வடவரின் கையிலுள்ள மத்திய அரசு இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக்குவதைத் தொடர்ந்து அமல் செய்தால் இந்தியத் துணைக்கண்டம் 15 பகுதிகளாகத் தனித்துப் பிரிந்து விடும்.
இதுவரை எனக்குப் பிரிவினை எண்ணம் துளிர்விடவில்லை. ஆனால் அண்மைக்காலத்தில் அரசு நடவடிக்கைகளால் அப்படியொரு பிரிவினை உணர்வு என் உள்ளத்தில் தோன்றி வளர்ந்து வருகிறது.”

அவர் பேசிய ஒரு வாரத்தில் 25.1.1965 ல் அதே திருச்சியில் தி.மு.க உறுப்பினரான சின்னச்சாமி இந்தியை எதிர்ப்பை வெளிப்படுத்தியபடி தன் உடலில் தீயைக் கொளுத்திய படி இறந்து போனார்

தீ வைக்கப்பட்ட நிலையில் அவர் சொன்ன வாசகங்கள் ;
”என் உயிர் தமிழுக்கு, உடல் மண்ணுக்கு”

அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 158.

You might also like