என் எழுத்து வாழ்வின் 40-ஆம் ஆண்டில்!

மனுஷ்ய புத்திரனின் உருக்கமான பதிவு:

தன் எழுத்து அனுபவங்களை நினைவுகூர்ந்துள்ளார் கவிஞர் மனுஷ்யபுத்திரன். அந்த சமூக வலைதளப்பதிவு இதோ…

இது ஒரு அரிய படம். இந்தப் படத்தில் இருக்கும் லேனா தமிழ்வாணன்தான் என் முதல் புத்தகத்தை பதிப்பித்த பதிப்பாளர். அருகில் இருப்பவர் என் முதல் புத்தகத்திற்கு அட்டைப்படம் வரைந்த ஓவியர் அமுத பாரதி.

கவிக்கோ மன்றத்தில் இன்று சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் நா. ஆண்டியப்பனுக்கு நடந்த பாராட்டு விழாவில் இருவரையும் சந்தித்தேன்.

1983-ல் ‘மனுஷ்ய புத்திரன் கவிதைகள்’ என்ற இந்த என் முதல் புத்தகம் 15 வயதில் மணிமேகலைப் பிரசுர வெளியீடாக வெளிவந்தது.

சச்சின் கிரிக்கெட் ஆட வந்த அதே வயதில்தான் நானும் கவிதைக்குள் வந்தேன். அதன் பின்னால் இருந்தவர்கள் இவர்கள்.

இது என் எழுத்து வாழ்க்கையின் நாற்பதாம் ஆண்டு. இதை தமிழ் சமூகம் ஏன் கொண்டாடவில்லை என்று தெரியவில்லை.

ஆனால், இந்த நாற்பதாம் ஆண்டில் முதல் புத்தகத்தின் பின்னால் இருந்தவர்களை ஒன்றாக காண்பது ஒரு மகிழ்ச்சியான தருணம்.

இந்த அட்டைப்பட டிசைனை லேனா தமிழ்வாணன் என் ஊருக்கே தேடி வந்து என்னிடம் காட்டிய நாளை நான் மறக்கவே இல்லை. நீலக்கடலில் எழும் சூரியன். அது ஒரு நம்பிக்கை. நான் அதை நிறைவேற்றினேன்.

எங்கோ ஒரு கிராமத்தில் ஓர் ஒளியுமற்று இருளில் கிடந்தேன். லேனா தமிழ்வாணன் என்னைக் கண்டுபிடித்து புழுதி நீக்கி ஒரு நட்சத்திரமாய் ஒளிரச் செய்தார். இங்கிருந்துதான் துவங்கின எல்லாமும்.

உயிர்மை கண்டுபிடித்த எழுத்தாளர்கள் யாராவது என்னை இப்படி நினைப்பார்களா தெரியாது.

ஆனால், லேனா தமிழ்வாணனை என்றும் நினைப்பேன். யார் யாரோ கைதூக்கிவிட்டு, யார் யார் கருணையிலோ கிட்டியது இந்த வாழ்க்கை.

You might also like