நூல் வாசிப்பு :
*
‘போட்டோகிராஃபிக் மெமரி’ என்பதன் அர்த்தத்தை மிகச் சரியாக உணர்த்துகிறது திரைப்படக் கலைஞரும், ஓவியருமான சிவகுமார் எழுதியுள்ள ‘சித்திரச் சோலை’ என்கிற விஷூவலான நூல்.
அந்த அளவுக்கு நூல் முழுக்க நிரம்பியிருக்கின்றன சிவகுமாரின் எழுத்தோடு அவருடைய புகைப்படங்களும், அவருடைய ஓவியங்கள் மற்றும் அவருடைய ஓவிய நண்பர்களின் ஓவியங்களும்.
காலத்தில் பின்னகரும் போது பலருக்கு நினைவுகளில் மங்கலான தோற்றம் இதில் இல்லை என்பது தான் நூலின் தனிச்சிறப்பு.
நடிகர் திலகம் சிவாஜியை முதன் முதலில் பவுடர் பூசிய மார்புடன் பார்த்த தருணம் துவங்கி அனைத்திலும் நினைவுகூர்வதில் அவ்வளவு துல்லியம்.
வலது கண்ணுக்கும், இடது கண்ணுக்குமான நுண்ணிய வேறுபாடு, தாடைகளில் தெரியும் வித்தியாசம், அந்தக் காலத்தில் நடிகை வைஜெயந்தி மாலாவிடம் பொருந்தியிருந்த கச்சிதமான தோற்றம் எல்லாவற்றையும் விவரிக்கிறபோது, சிவகுமார் நம்மிடம் நேரில் பேசுவதைப் போலிருக்கிறது.
அவருடைய பேச்சுத் தமிழை அப்படியே எழுத்துக்கு மடை மாற்றினால் வேறு எப்படி இருக்கும்?
சென்னையில் சிவாஜியின் சிபாரிசில் மோகன் ஆர்ட்ஸில் வேலைக்குச் சேர்ந்தபோது, 1957 ஆகஸ்ட் 30-ம் தேதி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணின் மறைவின்போது சென்னையில் பெருங்கூட்டம்.
“ஒரு மனிதனுக்கு இப்படி மரியாதையா? இப்படி ஒரு கூட்டத்தை 17 வயதில் பார்த்து ஆடிப் போய்விட்டேன்” என்று பதிவு செய்திருக்கிறார்.
ஓவியத்தில் இவருக்குக் குருவாக இருந்த நடராஜன் கடைசிக் காலத்தில் சிரமப்பட்டபோது, அவருக்கு உதவி செய்ததை நினைவுகூர்ந்து “இந்தியாவில் ஓவியனாகப் பிறப்பது பாவம், சாபம் என்று அடிக்கடி சொல்வேன்” என்கிறார்.
‘ஆரோக்கிய ரகசியம்’ என்ற நூலைப் படித்துத் தானாகவே யோகாசனங்களைக் கற்றுக் கொண்டவர். சிரசாசனம், சர்வாங்காசனம் போன்ற பயிற்சிகளால் அதிசயக்கும் படி நினைவாற்றல் பெருகியதைப் போகிற போக்கில் சொல்கிறார்.
‘ஸ்பாட் பெயிண்டிங்’கிற்காக செஞ்சிக்கோட்டைக்குச் சென்று அங்குள்ள காவலாளி வீட்டில் தங்கி பெயிண்டிங் பண்ணித் திரும்பியதில் இருந்து, கன்னியாகுமரி, மதுரை, திருப்பதி என்று பல இடங்களுக்குச் சென்று பொறுமையுடன் காத்திருந்து வரைந்த ஓவிய அனுபவங்களுடன், வரைந்த ஓவியங்களையும் அருகில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
சைக்கிளில் போய் அந்தக் கால ஆச்சர்யமான எல்.ஐ.சி கட்டிடத்தை வரைந்த அனுபவத்தை அழகாக வர்ணிக்கிறார் இப்படி. “ஒரு கட்டத்தில் கண்கள் பார்க்கும். கைகள் அனிச்சைச்செயல் போல வண்ணங்களைக் குழைத்து தாளில் விளையாடும். இவற்றின் ஒத்திசைவு மூளை செய்யும் மாயாஜாலம்”.
சென்னைக்கு வந்து ஒண்டுக்குடித்தனத்தில் சிவகுமார் வசித்தபோது, சிறு சண்டை போட்டுவிட்டு, ஊரைச் சுற்றிவிட்டு நள்ளிரவில் வீட்டுக்குத் திரும்பியபோது, வீட்டுக்கு ஓனரான கிறித்துவப் பெண் தனது மகளுக்கான பிறந்த நாளுக்கான கேக்கையும், வடையையும் வைத்தபடி காத்திருந்த அனுபவத்தில் ஒரு சிறுகதைக்கான நெகிழ்விருக்கிறது.
“ஓவியம் படித்தவன் ஓட்டாண்டியாகத் தான் வாழ முடியும்” என்று துறவு மனநிலையில் இருந்தவரை மாற்றித் திரைத்துறைக்கு நுழைய வைக்கிறது காலம்.
ஏ.வி.எம். ஸ்டூடியோவில் இவருக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்து “ஓ.கே” என்றதும் மனதில் உருவான நம்பிக்கை – எல்லாமே சிக்கனமான வரிகளில் பதிவாகி இருக்கின்றன.
தான் படித்த ஓவியக் கல்லூரியைப் பல இடங்களில் லயிப்புடன் வர்ணித்திருக்கிறார். அங்கிருந்த ஆசிரியர்களை வியந்து பாராட்டியிருக்கிறார்.
சந்தானராஜ் மாஸ்டர் போன்ற ஓவிய ஆசிரியர்களின் வாழ்த்துகளோடு சினிமாவுக்குள் நுழைந்து ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கியபோது ஏற்பட்ட பெருமிதம். அடுத்தடுத்துப் பல நடிகர், நடிகைகளுடன் பழகக் கிடைத்த வாய்ப்புகள்.
திரையில் பார்த்து வியந்த ஜெமினி விரும்பிச் சாப்பிடும் அசைவ உணவில் ஒரு கடி கடித்து சிவகுமாருக்கு உரிமையுடன் வாயில் ஊட்டிவிட்ட அனுபவமாகட்டும், நடிகை பத்மினியுடன் நடித்தபோது நிஜமாகவே அவரிடம் ஏழு ரீடேக்குகளில் தொடர்ந்து அடி வாங்கிக் கன்னம் வீங்கிப் போனதைச் சொல்கிறவர்,
அவருடைய இறுதிக்காலத்தில் அவருக்கு வரைந்து கொடுத்த அவருடைய அழகான படத்தை ரசித்தவருடைய மரணத்தின் போது, அவருடைய தலைமாட்டில் அந்த ஓவியம் இருந்ததையும் உருக்கமாகச் சொல்லியிருக்கிறார்.
சிவகுமார் வரைந்து மிகவும் பிரபலமான மகாத்மா காந்தியின் கோட்டோவியத்தை வரைந்த விதம் பற்றி ஒரு ஓவிய மாணவனுக்கு விளக்குகிற மாதிரிச் சொல்லியிருக்கிறார்.
கலைஞரின் இளவயதுத் தோற்றத்தை வரைந்து அவரிடம் கொடுத்தபோது, அவர் முகத்தில் தெரிந்த பரவசம் என்று செழுமையாக எத்தனை அனுபவங்கள்!
இந்த நூலின் சிறப்பான இன்னொரு அம்சம் – தான் மதித்த ஓவியர்களை அவர் அறிமுகப்படுத்தியிருக்கும் விதம்.
கோபுலு, சில்பி, மாருதி, ஜெயராஜ், மனோகர் தேவதாஸ், ஜீவா, பொ.சந்திரசேகரன் போன்றவர்களுடனும், நவீன ஓவியர்களான ஆதிமூலம், பாஸ்கர், டிராட்ஸ்கி மருது, சேனாதிபதி என்று பலருடைய சந்திப்புகளுடன் அவர்களுடைய வண்ண ஓவியங்களும் இடம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலுக்கு ஓவியங்கள் வரைந்த ஓவியர் மணியம் அவர்களின் புதல்வரான மணியம் செல்வனைப் பற்றி இந்நூலில் சக ஓவியராக சிவக்குமார் எழுதியிருக்கும் குறிப்புகள் தனிச் சிறப்பு.
வாழ்வைப் பின்னோக்கிப் பார்த்து எழுதும்போதும் சிவகுமார் என்கிற கலைஞருக்கு நேற்று நடந்ததைப் போன்ற ஞாபகப் பிசகில்லாத நுட்பத்துடன் பலவற்றையும் பதிவு பண்ண முடிந்திருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாகத் தனிப்பட்ட முறையில் – நாட்குறிப்பு (டைரி) எழுதுவதில் இருக்கிற அந்தரங்கத்தன்மை நூல் முழுக்க விரிந்து கிடப்பது, அவருடைய மனசோடு பேசுகிற உணர்வை ஏற்படுத்திவிடுகிறது.
அந்த அனுபவத்திற்காகவே இந்தப் புத்தகத்தை நேசத்தோடு வாசிக்கலாம்.
***
‘சித்திரச் சோலை’
ஆசிரியர் – சிவகுமார்
255 பக்கங்கள்
விலை – ரூ.285
இந்து தமிழ்த்திசை பதிப்பகம்,
860, அண்ணா சாலை, சென்னை – 14.