19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவையும், 2வது போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தையும், 3வது போட்டியில் ஸ்காட்லாந்தையும் வீழ்த்தி இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்ததுடன் அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது.
இதையடுத்து, அடுத்த சுற்றான சூப்பர் சிக்ஸ் பிரிவில் அண்டை நாடான இலங்கை மகளிர் யு19 அணியை இந்திய அணி சந்தித்தது.
இதில், டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது.
20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 59 ரன்களை மட்டுமே அந்த அணி எடுத்தது.
பின்னர் 60 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், வழக்கம்போல கேப்டன் ஷஃபாலி வர்மா – சுவேதா ஷெராவத் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதனால் இந்திய மகளிர் அணி 7.2 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.