மிஷன் மஜ்னு – சாகசக்காரனின் காதல்!

ஒரு நாயகன் அசாதாரணமானவனாக இருப்பதுதான் சாதாரண ரசிகனுக்குப் பிடிக்கும். அவன் செய்ய விரும்புகிற, நடைமுறைக்குச் சாத்தியமற்ற அல்லது செய்ய இயலாத சாகசங்களைத் திரையில் நாயகன் நிகழ்த்திக் காட்டும்போது கொண்டாடத் தூண்டும்.

ஆக்‌ஷன் படங்களுக்கே உரிய இந்த பார்முலாவின் உச்சம் தான் உளவாளிகளை நாயகர்களாகக் கொண்ட கதைகள். உலகம் முழுக்க இந்த வகை திரைப்படங்கள் பிரபலம்.

வரலாற்றின் அத்தியாயங்களில் இடம்பெற்ற சில நிகழ்வுகளோடு அந்த உளவாளிகளைத் தொடர்புபடுத்திக் காட்டுவது அந்த சுவாரஸ்யத்தை ‘கிளாசிக்’ தன்மை கொண்டதாக மாற்றும்.

சித்தார்த் மல்ஹோத்ரா, ராஷ்மிகா மந்தனா, ஜாகீர் கான் உள்ளிட்டோர் நடிப்பில், நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கும் ‘மிஷன் மஜ்னு’வும் அப்படியொரு சாகசக்காரனை கண் முன்னே நிறுத்துகிறது.

காதலும் சாகசமும்!

பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் வசித்து வருபவர் தாரிக் ஹுசைன் (சித்தார்த் மல்ஹோத்ரா). ஒரு தையல்காரராக வாழ்க்கை நடத்துபவர்.

 மசூதியொன்றில் கிடைக்கும் நட்பு மூலமாக, அந்நகரின் புகழ் பெற்ற தையல்கடையில் தாரிக் பணியில் சேர்கிறார்.

முதல் நாளில் இருந்தே, அந்த கடைக்கு வந்த நஸ்ரின் (ராஷ்மிகா மந்தனா) என்ற பெண் மீது காதல் கொள்கிறார். அப்பெண்ணோ பார்வைத்திறன் அற்றவர்.

சிறந்த வேலைக்காரனாக இருப்பதோடு, நல்ல குணங்களும் தாரிக்கிடம் இருப்பதாகக் கருதுகிறார் தையல் கடை உரிமையாளர்.

அதனாலேயே, தன் சகோதரியின் மகளான நஸ்ரினை தாரிக் விரும்புவது தெரிந்ததும் அதற்கு பச்சைக்கொடி காட்டுகிறார். ஆனால் நஸ்ரின் தந்தைக்கு அதில் சம்மதமில்லை.

தந்தையின் விருப்பத்தை மீறி, தாரிக்கை மணந்து கொள்கிறார் நஸ்ரின். பெரிய வசதிகள் இல்லாதபோதும், கணவர் உடனான வாழ்வில் மகிழ்ச்சியை அடைகிறார்; கர்ப்பமாகிறார்.

ஆனால், திடீரென்று தாரிக் செய்கைகளில் மாற்றத்தை உணர்கிறார் நஸ்ரின். அவரது தந்தையும் மகளுக்குத் துரோகம் இழைக்கப்படுவதாக எண்ணுகிறார்.

இந்த சூழலிலேயே, தாரிக் ஒரு ‘ரா’ உளவாளி என்பதும், அவரது உண்மையான பெயர் அமன்தீப் சிங் என்பதும் தெரிய வருகிறது.

பாகிஸ்தான் நிகழ்த்தவிருக்கும் அணுகுண்டு சோதனையைத் தடுத்து நிறுத்தும் ‘மிஷன் மஜ்னு’வின் ஒருபகுதியாகவே, நஸ்ரினைத் திருமணம் செய்திருக்கிறார் தாரிக். ஆனால், தனக்கு கொடுக்கப்பட்ட பணியை மீறி உண்மையாகவே நஸ்ரின் மீது அன்பு கொள்கிறார்.

இதையடுத்து பாகிஸ்தானின் அணுகுண்டு சோதனையை தாரிக் முறியடித்தாரா? அவரைப் பற்றிய உண்மை நஸ்ரினுக்கு தெரிந்ததா?

இது போன்ற கேள்விகளுக்கு வழக்கமான பாணியில் பதிலளிக்கும் ’ஸ்பை ஆக்‌ஷன்’ சித்திரமே ‘மிஷன் மஜ்னு’. ஒரு உளவாளியின் சாகசமும் காதலும் சரிபாதி கலந்தது.

ஏமாற்றிய ராஷ்மிகா!

‘சீதா ராமம்’ படத்திற்குப் பிறகு, ‘மிஷன் மஜ்னு’வில் பாகிஸ்தானிய பெண்ணாக நடித்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.

அவரது குறும்பான நடிப்பை ரசிப்பவர்களுக்கு இப்படம் தருவது ஏமாற்றமே. கண் பார்வைத் திறனற்றவராக நன்றாகவே நடித்துள்ளார் என்றபோதிலும், அவருக்கும் நாயகன் சித்தார்த் மல்ஹோத்ராவுக்குமான காட்சிகளில் காதல் ரசம் பொங்கவில்லை.

‘ஏக் வில்லன்’, ‘ஜென்டில்மேன்’ போன்ற படங்களின் வழியே ஆக்‌ஷன் ஹீரோவாக மக்கள் மத்தியில் அங்கீகரிக்கப்பட்டவர் சித்தார்த் மல்ஹோத்ரா.

இன்றைய தலைமுறை இந்தி நடிகர்களில் முறுக்கேறிய உடலோடு நன்றாக முகபாவனைகளை வெளிப்படுத்த தெரிந்த நாயகன். அதனால், வெகு அனாயாசமாக உளவாளி பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இன்னொரு ‘ரா’ உளவாளியாக வரும் ஷரீப் ஹாஸ்மி, ‘தி பேமிலி மேன்’, ‘அசுர்’ வெப் சீரிஸ்கள் மூலமாக ஏற்கனவே ரசிகர்களுக்கு அறிமுகமானவர். அவரைப் போலவே மௌல்வியாக வரும் குமுத் மிஸ்ராவும் மனதில் நிற்கிறார்.

இவர்கள் தவிர்த்து ‘லீ’ பட வில்லன் ஜாகீர் கான் தொடங்கி ரஜித் கபூர் வரை பல நடிகர், நடிகைகள் வந்து போகின்றனர்.

இவர்கள் ஏற்ற பாத்திரங்கள் இந்தியா, பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட உண்மையான தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஜிதேஷ் தேயின் ஒளிப்பதிவும் நிதின் பைத் மற்றும் சித்தார்த் பாண்டே இணையின் படத்தொகுப்பும் செறிவான கதை சொல்லலுக்கு உதவியிருக்கின்றன.

அதற்கேற்ப காட்சிகளை வடிவமைத்திருக்கிறது அசீம் அரோரா, சுமித் பதிஜா, பர்வேஸ் ஷெய்க் கூட்டணி.

நாற்பதாண்டுகளுக்கு முந்தைய இந்தியா, பாகிஸ்தானை காட்ட முயற்சித்திருக்கிறது ரீடா கோஷின் தயாரிப்பு வடிவமைப்பு.

பழைய மனிதர்களைக் காட்டும் வகையில் ஆடை வடிவமைப்பு இருந்தாலும், ராஷ்மிகாவுக்கென்று தனியாக ஒரு வடிவமைப்பாளரை நியமிப்பதற்கு ‘அவர் வண்ணமயமாகத் தனியே தெரிய வேண்டும்’ என்பதுதான் காரணமாக இருக்க முடியும்.

உண்மையான சில நிகழ்வுகளையும் பாத்திரங்களையும் வைத்துக்கொண்டு கற்பனையாக ஒரு கதையைச் சொல்வதற்கு தனித்திறம் வேண்டும். இயக்குனர் சாந்தனு பக்‌ஷி அந்த வகையில் நம் மனம் கவர்கிறார்.

தகவல்களின் தொகுப்பு!

ஒரு ஆக்‌ஷன் படத்திற்கான த்ரில் கூட்டும் வகையில் காட்சிகளை இறுக்கமாக அடுக்கினாலும், பாகிஸ்தான் தரப்பைச் சொல்லும் பாத்திரங்களையோ, நிகழ்வுகளையோ காட்ட இடம்தரப்படவில்லை. அதனால், வழக்கமான உளவாளியின் சாகசமாக இதனைக் கருத முடியவில்லை.

நாயகியின் காதலையும் தனது உளவுப் பணியையும் சரிசமமாகவே நாயகன் கருதுகிறார் என்பதை விளக்கும் காட்சிகளும் கூட திரைக்கதையில் இல்லை.

ஒருவேளை இலக்கு நோக்கி திரைக்கதை செல்லத் தடையாக இருப்பதாகக் கருதி அவற்றை அகற்றியிருக்கலாம். அவ்வாறிருந்தால், அது தவறான முடிவே!

க்வெட்டா எனுமிடத்தில் பாகிஸ்தான் அணுகுண்டு சோதனை நடத்த தயாராகி வருவதாகவும், அதனை அழிக்க இஸ்ரேல் தயாராவதாகவும் ஒரு காட்சியில் காட்டப்படுகிறது.

அதற்கு மாறாக, ககூட்டா எனும் இடத்திலேயே அணுகுண்டு சோதனை மையம் அமைக்கப்பட்டிருக்கிறது.

வெளியுலகின் பார்வையை மீறி, அந்த உண்மையை அறிவதுதான் ‘மிஷன் மஜ்னு’வின் மையமாகவும் இருக்கிறது.

உண்மையிலேயே பாகிஸ்தான் மேற்கொள்ளவிருந்த அணுகுண்டு சோதனை இந்திய உளவாளிகளால் உலகுக்கு அடையாளம் காட்டப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால் கதை தொடங்கும் முன்பும் முடிந்த பின்னரும் சொல்லப்படும் சில உண்மைத் தகவல்கள் மொத்தக்கதையும் உண்மை என்ற தொனியையே வெளிப்படுத்துகின்றன.

அப்படிப் பார்த்தால், பல தகவல்களின் தொகுப்பாகவே அமைந்திருக்கிறது ‘மிஷன் மஜ்னு’.

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பல தலைவர்கள் இக்கதையில் பாத்திரங்களாக இடம்பிடித்திருக்கின்றனர்.

பாகிஸ்தானின் அசைவுகளில் ஆர்வம் உள்ளவராக இந்திரா காந்தியையும், ஊழல்வாதியாக ஜூபிகர் அலி புட்டோவையும், தந்திரமிக்கவராக ஜியா உல் ஹக்கையும் சித்தரிக்கிறது திரைக்கதை.

அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை, தன் நாட்டு உளவாளிகளைப் பலியிடத் தயாராகும் அளவுக்குப் பக்குவமற்றவராக மொரார்ஜியைக் காட்டியிருக்கிறது.

அதுவே, இப்படம் வரலாற்றுத் தலைவர்களை இனிவரும் தலைமுறையினருக்கு எப்படி அடையாளம் காட்ட விரும்புகிறது எனும் கேள்வியைப் பலமாக எழுப்புகிறது.

கூடவே, சமகால அரசியல் தலைவர்களை இப்படி விமர்சிக்கும் அளவுக்கு படைப்புச் சுதந்திரம் நடப்பில் உள்ளதா என்ற எண்ணம் மனதில் மேலெழ வைக்கிறது.

-உதய் பாடகலிங்கம்

You might also like