முடிவுக்கு வந்தது வீராங்கனைகளின் போராட்டம்!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பிரிஜ் பூஷன் சரண்சிங் கடந்த 2011-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார். அவா், பல ஆண்டுகளாக மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை அளிப்பதாக இந்திய நட்சத்திர வீராங்கனையும், போகத் சகோதரிகளில் ஒருவருமான வினேஷ் போகத் அண்மையில் குற்றம்சாட்டினார்.

இதைத் தொடர்ந்து பிரிஜ் பூஷனுக்கு எதிராக, டெல்லி ஜந்தா் மந்தரில் இந்திய முன்னணி மல்யுத்த வீரா், வீராங்கனைகள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

புகார் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தலைவா் பதவியில் இருந்து பிரிஜ் பூஷன் சரண் விலகும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றும்,

சா்வாதிகாரமாக செயல்படும் அவா் நீக்கப்படும் வரை போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வீரர்கள் திட்டவட்டமாகக் கூறிவருகின்றனர்.

இதனிடையே தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த பிரிஜ் பூஷன், தான் பதவியில் இருந்து விலகப் போவதில்லை எனவும், இதுதொடா்பாக சிபிஐ அல்லது உரிய அமைப்பு விசாரணை நடத்தட்டும் என்றும் கூறினார்.

இந்த நிலையில், வீராங்கனைகளின் குற்றச்சாட்டுகள் குறித்து 72 மணி நேரத்துக்குள் பதிலளிக்குமாறு மல்யுத்த சம்மேளனத்துக்கு விளையாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களுடன் நேற்று நள்ளிரவு விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அளித்த உறுதிமொழியை ஏற்று வீரா்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

You might also like