மாடு வாங்க மானியம்:
தமிழ்நாட்டில் வசிக்கும் ஆதி திராவிடர்களில் சுமார் 7.40 இலட்சம் பேர் விவசாயிகள் ஆவர்.
இவர்களுடைய பொருளாதார மேம்பாட்டிற்காக, பாசனக் கிணறுகள், வெட்டுவதற்காக ரூ.6000, உழவு மாடுகள் வாங்குவதற்காக ரூ.600 மான்யமாக வழங்கப்படுகின்றது.
ஆதிதிராவிடர்கள் கறவை மாடுகள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவதாலும் பாலுக்கு அதிக தேவையிருப்பதாலும், பால் வழங்கு கூட்டுறவுச் சங்கங்கள் இவர்களுக்காக நிறுவப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு கறவை மாடும் ரு.2,500 விலையாகிறது. இதில் ரூ.833 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் மானியமாக வழங்கப்படுகிறது.
எஞ்சிய ரூ.1,667 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளால் கடனாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு உறுப்பினரும் இரண்டு கறவை மாடு வாங்குவதற்கு தகுதியுடையவர் ஆவர்.
அரசு பணிக்கு சிறப்பு பயிற்சி:
தமிழ்நாடு தேர்வாணைக்குழுவால் நடத்தப்படும் தொகுதி -4 பணிக்குரிய போட்டித் தேர்வினை எழுத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி போன்ற அனத்திந்தியப் பணிகளுக்கு முன்பயிற்சி 1966 ஆம் ஆண்டிலிருந்து அளிக்கப்படுகிறது.
வழக்கறிஞர் தொழில் செய்ய விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியைச் சேர்ந்த சட்டப் பட்டதாரிகளுக்குப் பதிவு செய்யும், அறை வாடகை போன்ற செலவனத்திற்குக் கடனாக ஒவ்வொருவருக்கும் ரூ.750, சட்டபுத்தகங்கள், மரச் சாமான்கள் முதலியவை வாங்குவதற்கு ரூ.750 அரசு மானியமாக வழங்குகிறது.
10 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை:
ஒவ்வொரு ஆதிதிராவிடர் குடும்பத்திற்கும் 3 சென்ட் நிலம் வீட்டு மனையாக ஒப்படைப்பு செய்யப்படுகிறது.
இதுவரை 4,58,568 வீட்டு மனைகளுக்கு நில எடுப்பு செய்யப்பட்டுள்ளது. இவற்றைச் சேர்த்து இதுவரை 10 இலட்சத்திற்கும் அதிகமான ஆதிதிராவிடர் குடும்பங்களுக்குப் பல்வேறு திட்டங்களின் கீழ் வீட்டு மனைகள் வழங்கப்படுகின்றன.
ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் 1974ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதுவரை இக்கழகத்தின் மூலம் 57,884 வீடுகள் ஆதிதிராவிடருக்காகக் கட்டப்பட்டுள்ளன.
தொடக்கச் செலவு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பும் தாட்கோவிடமே விடப்பட்டிருந்தது. 1,51,276 ஆதிதிராவிடர்கள் பயன்பெறும் வகையில் தாட்கோ இதுவரை ரூ.662,26 இலட்சம் வழங்கியுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் என்ற பிரிவின் கீழ், ஒரு கிணற்றுக்கு ரூ. 7,500 செலவு என்ற முறையில் குடிநீர் கிணறுகள் அமைக்கப்படுகின்றன.
ரூ.13,000 செலவில் தரைமட்ட சென்டிரிபிகல் குழாய்க் கிணறுகளும் ரூ. 15,000 செலவில் ஆழ்குழாய்க் கிணறுகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த அரசு, மாநிலத்தில் குடியியல் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தைத் தீவிரமாகச் செயல்படுத்திக் கொண்டு வருகிறது.
நடமாடும் காவல் படை பிரிவுகள் 1985 டிசம்பர் முடிய 11,531 வழக்குகளை பதிவு செய்துள்ளன. இவற்றில் 4,134 வழக்குகள் நீதி மன்றங்களால் தண்டனை வழங்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.
கலப்புத் திருமணத்திற்கு உதவி:
குடியியல் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இழைக்கப்படும் குற்றங்களை விசாரிக்க நான்கு தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 ம் தேதி முடிய தீண்டாமைக் கொடுமை ஒழிப்பினைப் பிரச்சாரம் செய்வதற்காக “தீர்த்த யாத்திரை” என்ற செய்தித் திரைப்படம் தயாரிக்கப்பட்டு அதை கிராமங்களில் திரையிட்டுக் காட்ட கூண்டு உந்த வண்டி வாங்கப்பட்டிருக்கிறது.
கலப்பு மணம் புரிந்த தம்பதியருக்குத் தங்கப் பதக்கங்களும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.
இவை தவிர, இத்தகைய தம்பதியரின் இணைந்த ஆண்டு வருமானம் ரூ. 6000 அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் அவர்கள் பெயரில் ரூ. 4,000 தேசிய சேமிப்புப் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது. மேலும் திருமணச் செலவிற்காக ரூ. 300 வழங்கப்படுகிறது.
கலப்புத் திருமணத் தம்பதிகளின் குழந்தைகளுக்கென்று ஒருங்கிணைந்த எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு பட்டப் படிப்பிற்காக 12 இடங்களும், சித்த மருத்துவ கல்லூரியில் 2 இடங்களும் முதலாம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பிற்காக 5 இடங்களும், நாட்டுமுறை மருந்தாக்கப்பட்ட பார்மஸி வகுப்பில் 1 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்குக் கல்வி நிலையங்களில் முறையாகப் பிரதிநிதித்துவம் வழங்கும் பொருட்டு மருத்துவம், பொறியியல் மற்றும் தொழில் கல்வி நிலையங்கள் உட்பட ஒவ்வொரு பிரிவிலும் 19 விழுக்காடு என இட ஒதுக்கீடு தற்பொழுது வழக்கத்தில் உள்ளது.
அரசு பணிகளில் 80 சதவீத இடஒதுக்கீடு:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மாநில அரசுப் பணிகளில் 18 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனைக் கண்காணிக்கப் பல்வேறு குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன.
தமிழ்நாட்டிலுள்ள ஆதிதிராவிடர்களின் மேம் பாட்டைத் துரிதபடுத்துவதற்காக அரசு 1980-81 ஆம் ஆண்டிலிருந்து சிறப்பு உள்ளடக்கத் திட்டத்தினைச் செயல்படத்தி வருகிறது.
ஆதிதிராவிட விவசாயப் பெருங்குடி மக்கள் வாழ்வு வளம்பெற 25 விழுக்காடு மானிய விலையில் விவசாய இடுபொருட்கள் வழங்கப்படுகின்றன. நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ், நிலமில்லாத ஆதிதிராவிடர்களுக்கு நிலங்களும் வழங்கப்படுகிறன.
இந் நிலத்தை பண்படுத்தி சாகுபடிச் செய்ய ஒரு எக்டருக்கு ரூ. 2,500 நிதி உதவி அளிக்கப்படுகிறது. 1985-86-ஆம் ஆண்டில் சிறப்பு மத்திய உதவியாக அரசு ரூ. 13,39 கோடி அளித்துள்ளது. 1985 – 86 ஆம் ஆண்டில் 2 இலட்சம் ஆதிதிராவிடர் குடும்பங்களுக்குப் பொருளாதார மேம்பாட்டிற்காக உதவிகள் நல்கப்பட்டன.
தமிழ்நாட்டில் பழங்குடி மக்கட் தொகை 5.20 இலட்சமாகும். அவை மொத்த மக்கட்தொகையில் 1.07 சதவீதமாகும்.
பழங்குடியினர் அதிகமாக உள்ள ஒன்பது பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. கிட்டத்தட்ட 2,10 இலட்சம் தமிழகப் பழங்குடியினர் இந்த 9 பகுதிகளில் வசிக்கின்றனர்.
இவர்களின் பொருளாதார முன்னேற்றத் திட்டங்களான தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, சிறு பாசனம், மண்வளப் பாதுகாப்பு, சிறு தொழில், தேனீ வளர்த்தல் போன்றவை செயல்படுகின்றன.
மேற்கண்ட தொழிலுக்குத் தேவையான இப்பொருள்கள் தென்னாற்க்காடு மாவட்டத்தில் உள்ள கல்ராயன் மலை தவிர (75 சதவீதம் மானியம் தரப்படுகிறது.) மற்றப்பகுதிகளின் பழங்குடியினருக்கு 50 சதவீதம் மானியமாகக் கொடுக்கப்படுகிறது.
1985-86ல் உயர்ரக விளைச்சல் தரக்கூடிய விதைகள் மற்றும் நாற்றுகள் வினியோகிக்கும் திட்டம் 3000 ஏக்கர் பரப்புள்ள பழங்குடியினர் நிலத்தில் செயல்படுத்தப்பட்டது.
பட்டுப்புழு வளர்க்கும் தொழிலில் 400 பழங்குடியினர் குடும்பங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 50 விழுக்காடு மானிய விலையில் 1332 பழங்குடியினர் குடும்பங்களுக்குக் கறவை மாடுகள் வழங்கப்பட்டன. 331க்கு மேற்பட்ட பழங்குடியினர் குடும்பங்களுக்குத் தேனீ வளர்ப்புக்கூடுகள் வழங்கப்பட்டன.
ஆறாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் பல்வேறு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின் வாயிலாக 28,884 குடும்பங்களுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது.
பழங்குடியினருடைய பொருளாதாரத்திற்குப் பாதிப்பு உண்டாக்கக் கூடிய இடைத் தரகர்களின் நடவடிக்கை களைத் தடுக்கும் பொருட்டு 12 பெரிய அளவிலான பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் (லேம்ப்ஸ்) இப்பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இருபது அம்சத் திட்டத்தில் ஏழாவது அம்சம் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினரின் முன்னேற்றத்தை விரைவு படுத்துவதற்கு வழிவகைச் செய்கிறது.
1980-85 ஆம் ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறியீடான 9 இலட்சம் ஆதிதிராவிடர் குடும்பங்களில் 8.90 இலட்சம் ஆதிதிராவிடர் குடும்பங்கள் பொருளாதார முன்னேற்றத்திட்டங்களினால் பயன் பெற்றுள்ளனர்.
ஆறாவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் 19,999 பழங்குடியின குடும்பங்கள் பயன் பெறும் என்று குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தும் இத்திட்டக்காலத்தில் 28,884 பழங்குடியினர் குடும்பங்கள் பொருளாதார திட்டங்களின் மூலம் பயன் பெற்றுள்ளன.
– நன்றி: முன்னாள் சென்னை மேயர் சைதை சா. துரைசாமியின் ‘புரட்சித் தலைவரின் பொற்கால ஆட்சி சாதனைகள்’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி.