ஜெய ஜெய ஜெய ஜெயஹே – திரைவிமர்சனம்
சில நல்ல திரைப்படங்களைப் பார்த்து முடித்ததும், ‘இதைப் பார்க்காமல் இத்தனை காலம் தாமதித்து விட்டோமே’ என்று தோன்றும். அந்த வகையறா திரைப்படம் தான் ‘ஜெய ஜெய ஜெய ஜெயஹே’.
கடந்த ஆண்டு அக்டோபர் 28-ம் தேதியன்று வெளியான இப்படம், முதலில் சிறு படமாகத்தான் பார்க்கப்பட்டது.
ஆனால் குமாரி, கூமன், முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ், கோல்டு, சவுதி வெள்ளக்கா, காப்பா, மாளிகாபுரம் உள்ளிட்ட மலையாளப் படங்கள் பெற்ற வெற்றிகளைத் தாண்டி மக்கள் மனதில் தடம் பதித்துள்ளது.
ஐந்து கோடியில் தயாரான இப்படம் 50 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டியதாகத் தகவல். இப்படம் டிஸ்னி+ஹாட்ஸ்டார் தளத்தில் தற்போது காணக் கிடைக்கிறது.
குடும்ப வன்முறை!
சொந்தமாக கோழிப்பண்ணை ஒன்றை நடத்தி வரும் இளைஞன் ராஜேஷ் (பசில் ஜோசப்). தங்கையும் தாயும் அவருடன் வசித்து வருகின்றனர். கணவருடன் ஏற்பட்ட மோதலால் பிறந்த வீட்டில் இருக்கிறார் அவரது தங்கை.
பெண் பிள்ளை இன்னொரு வீட்டிற்குத் திருமணமாகிச் செல்பவள் என்று சொல்லியே வளர்க்கப்பட்டவர் ஜெயபாரதி (தர்ஷனா ராஜேந்திரன்).
தந்தையின் மனதில் தான் ஒரு இளவரசி இல்லை என்பது சிறு வயதிலேயே புரிந்துவிடுகிறது.
கல்லூரியில் ஆசிரியராக வரும் கார்த்திகேயன் (அஜு வர்கீஸ்) மீது ஜெயாவுக்குக் காதல் பிறக்கிறது. ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.
அந்த விஷயம் குடும்பத்தினருக்குத் தெரிய வர, என்ன நடந்தது என்று ஜெயாவைக் கேட்காமலேயே திருமண ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்குகின்றனர். ராஜேஷுக்கும் ஜெயாவுக்கும் திருமணம் நடக்கிறது.
வழக்கம்போல, ‘ஆணுக்கு டென்ஷன் அதிகம்’ என்ற போர்வையில் ஜெயாவை அடிக்கத் தொடங்குகிறார் ராஜேஷ். அதனைத் தாங்க முடியாமல் தவிக்கிறார் ஜெயா.
பெற்றோர், சகோதரர் உட்பட யாருமே ஜெயாவின் வார்த்தைகளைக் கேட்கத் தயாராக இல்லை. இந்த நிலையில், ஒருநாள் ஜெயாவை அடிக்க கை ஓங்குகிறார் ராஜேஷ். அவ்வளவுதான்.
ஒரே ஒரு உதை. சில அடிகள் தள்ளிப் போய் விழுகிறார் ராஜேஷ்.
அந்த உதைக்குப் பிறகு, ஜெயாவை அடித்து தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென்று துடிக்கிறார் ராஜேஷ்.
அதேநேரத்தில், இதுவரை ஒரு பெண்ணாகத் தனக்கு மறுக்கப்பட்ட அனைத்தையும் பெற்றே தீர்வது என்று கங்கணம் கட்டிக்கொண்டு வாழ ஆரம்பிக்கிறார் ஜெயா.
யாருக்கு வெற்றி என்பதுதான் ‘ஜெய ஜெய ஜெய ஜெயஹே’ படத்தின் மீதிக்கதை.
ஒப்பனையற்ற ஒளிப்பதிவு!
சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்றபோதும், முழுப்படமும் ஒப்பனையற்ற ஒளிப்பதிவைக் கொண்டிருப்பது அருமை. அதுவே, யதார்த்தமாக ஒரு தம்பதியை, குடும்பத்தினரைக் காணும் உணர்வை ஏற்படுத்துகிறது.
பாப்லு அஜுவின் ஒளிப்பதிவு, தொடக்கத்தில் ஒரு குறும்படம் போல, குறைந்த பட்ஜெட் சீரியல் போலத் தோன்றுவதென்னவோ உண்மை.
ஆனால், அதுவே கதை மாந்தர்களான ஜெயாவையும் ராஜேஷையும் நம்முள் ஒருவராக எண்ண வழியமைத்து தருகிறது.
ராஜேஷ் – ஜெயா சண்டைக் காட்சிகளில் ஜான்குட்டியின் படத்தொகுப்பு அபாரமாக வேலை செய்திருக்கிறது.
மிகச்சிறிய காட்சிகளிலும் கூட பல்வேறு கேமிரா கோணங்கள் இருப்பதைத் துளியும் துருத்தல் இன்றி தொகுத்திருக்கிறது.
அங்கீத் மேனனின் பாடல்கள் வித்தியாசமான ஒலித்தலைக் கொண்டிருக்கின்றன. ஆனால், பின்னணி இசையில் பல தமிழ் பட பாடல்களின் இடையிசையை, பின்னிசையைக் கேட்க முடிகிறது.
ராஜேஷின் குணாதிசயங்களை முன்கூட்டியே வெளிக்காட்ட உதவியிருக்கிறது பாபு பிள்ளையின் கலை வடிவமைப்பு. அஸ்வதி ஜெயகுமாரின் ஆடை வடிவமைப்பு மிகச்சாதாரணமாக ஒரு கேரள குடும்பத்தின் வாழ்க்கை முறையைக் காட்டி விடுகிறது.
அதேபோல சுதி சுரேந்திரனின் மேக்கப்பும் திரைக்கதையில் நிரம்பியிருக்கும் யதார்த்தத்தை மேலும் ஒருபடி அதிகப்படுத்த உதவியிருக்கிறது.
மிக முக்கியமாக, மருத்துவமனையில் இருக்கும் ஜெயா பாத்திரத்தின் உடல்நிலையைக் காட்டிய முக ஒப்பனைக்கு தனியாக ‘சபாஷ்’ சொல்ல வேண்டும்.
நாயகனின் தாய், தங்கை, ஒன்றுவிட்ட அண்ணன், அவரது பண்ணையில் வேலை செய்யும் இளைஞர்கள், நாயகியின் பெற்றோர், தாய்மாமன் உட்படப் பல நடிப்புக் கலைஞர்கள் வெறுமனே பாத்திரங்களாக மட்டுமே நம் கண்களுக்குத் தட்டுப்படுகின்றனர். ஒரு ‘மீட்டர்’ வைத்தது போல அளவாக நடித்திருக்கின்றனர்.
இந்த கதையில் ராஜேஷாக நடித்த பசில் ஜோசப் மற்றும் ஜெயாவாக நடித்த தர்ஷனா ராஜேந்திரனின் நடிப்பு மட்டுமே கொஞ்சம் மிகையாகத் தோன்றும்.
அதேநேரத்தில் இருவரது மிகையான பாவனைகளே ஒருகட்டத்தில் அவல நகைச்சுவையை பார்வையாளர்கள் உணர வகை செய்திருப்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
நிச்சயமாக ஒரு இளம் நடிகர் ஒப்புக்கொள்ளக்கூடிய பாத்திரம் அல்ல இது; பசில் தவிர வேறு எவர் நடித்திருந்தாலும், இதைவிடச் சிறப்பாக நடித்திருக்க முடியும்.
ஆனால், பசில் இருப்பதால் மட்டுமே அப்பாத்திரம் உயிரோட்டமிக்கதாகத் தென்படுகிறது.
கல்லூரி படிக்கையில் திருமணமான ஒரு இளம்பெண் எனும் உணர்வை உடனடியாக ஏற்படுத்துவதே தர்ஷனாவின் இருப்புக்கு நியாயம் சேர்த்திருக்கிறது.
நஷீத் முகமது ஃபாமி உடன் இணைந்து திரைக்கதை வசனத்தை எழுதியுள்ளார் இயக்குனர் விபின் தாஸ்.
சுரேஷ் கோபியின் மகன் கோகுல் அறிமுகமான முதுகாவ் மற்றும் வித்தியாசமான த்ரில்லர் என்று பாராட்டப்பட்ட அந்தாக்ஷரி என்ற இரு படைப்புகளை ஏற்கனவே இவர் தந்துள்ளார்.
திருமணமான ஒரு ஆணையும் பெண்ணையும் குறித்து பொதுப்புத்தியில் என்னென்ன வரையறைகள் இருக்கின்றனவோ அவற்றை கேள்விக்குட்படுத்துகிறது இப்படத்தில் வரும் பாத்திரங்களின் வடிவமைப்பு.
யதார்த்தத்திற்குப் புறம்பான ஒரு கற்பனையை இக்கதையில் புகுத்தியதன் மூலமாக, கேரளத்தை ஆட்டிப்படைக்கும் குடும்ப வன்முறையை, வரதட்சணைக் கொடுமைகளை நகைச்சுவையாகச் சொல்கிறது.
அதற்காகவே எழுத்தாக்கத்தையும் இயக்குனரின் பார்வையையும் பாராட்டலாம்.
எளிமையான சித்திரம்!
சமூகத்தில் உயர் மட்டத்திலும் கீழ்மட்டத்திலும் நிலவும் ஆண் பெண் சமத்துவம் நடுத்தரக் குடும்பங்களில் பரவலாகவில்லை என்பதே உண்மை.
மிகமுக்கியமாக, இந்தியாவில் வளர்ச்சியை அடைந்ததாகக் கருதப்படும் தென்னிந்தியாவில் அந்த சமத்துவம் மிகமிக மெதுவாகவே நிகழ்ந்து வருகிறது.
அதனைச் சுட்டிக்காட்டிய காரணத்தாலேயே ’ஜெய ஜெய ஜெய ஜெயஹே’ தற்போது ஓடிடியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெட்சுமி நடித்த ‘கட்டா குஸ்தி’யும் இப்படமும் அடிப்படையில் ஒரேமாதிரியானவை; குடும்ப அமைப்பில் ஆணின் அடக்குமுறையை ஏற்று அடிமையாக இருப்பதுதான் பெண்ணின் இயல்பா என்ற கேள்வியை எழுப்புபவை.
‘ஜெய ஜெய ஜெய ஜெயஹே’வில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே மோதல் நடக்கிறது; ஆனால், ‘கட்டாகுஸ்தி’யில் அது நிகழ்வதற்கு முன்னதாகவே மனைவியின் அருமையைப் புரிந்துகொள்கிறார் கணவர். இதுதான் வித்தியாசம்.
பசில் – தர்ஷனா இயல்பான மனிதர்களாகத் தோன்றுவதும், முழுக்க சினிமாத்தனமான தம்பதியாக விஷ்ணு – ஐஸ்வர்யா லெட்சுமி காட்சியளிப்பதும் இன்னொரு வித்தியாசம்.
மிக முக்கியமாக, சண்டைக்காட்சிகளில் தர்ஷனாவிடம் தென்படும் யதார்த்தம் நிச்சயமாக ஐஸ்வர்யாவிடம் இல்லவே இல்லை.
‘கட்டா குஸ்தி’யில் விஷ்ணுவின் பாத்திரம் மனம் திருந்துகிறது என்றால், அது திருந்தவே இல்லை என்றால் எப்படியிருக்கும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது பசில் நடித்த பாத்திரம்.
இந்த வித்தியாசங்கள்தான், இந்த சமூகத்தில் ஒரு புதுமணத் தம்பதியின் வாழ்க்கை எப்படியிருக்கிறது என்பதைக் காட்டும் எளிய சித்திரமாக ‘ஜெய ஜெய ஜெய ஜெயஹே’வை மாற்றியிருக்கிறது. ‘சாண் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை’ எனும் கற்பிதங்களையும் உடைத்திருக்கிறது.
– உதய் பாடகலிங்கம்