சென்னையில் 3 நாட்களில் 235 டன் குப்பைகள் அகற்றம்!

கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் திரும்பி செல்லும்போது குப்பைகளை அங்கேயே விட்டுச்சென்று இருந்தனர்.

நீச்சல் குளம் அருகே குப்பைகள் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து லாரிகள் மூலம் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

காணும் பொங்கல் விழா நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொதுமக்கள் பொழுதுபோக்கு பூங்கா, கடற்கரை, சுற்றுலா தலங்களில் காலை முதலே குவிந்தனர்.

மெரினா கடற்கரையில் காலை முதலே சாரை சாரையாக மக்கள் வரத் தொடங்கினர். மாலையில் மணல் பகுதியே தெரியாத அளவுக்கு குடும்பத்துடன் மக்கள் குவிந்தனர்.

அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த கரும்பு பல்வேறு திண்பண்டங்கள் மற்றும் சமைத்து கொண்டு வந்திருந்த உணவை மணலில் அமர்ந்து சாப்பிட்டும், விளையாடியும் பொழுதை உற்சாகமாக கழித்தனர்.

சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெரினாவில் குவிந்து இருந்ததால் காணும் பொங்கல் விழா களை கட்டி இருந்தது. தீவுத்திடல் பொருட்காட்சியை பார்க்கவும் கூட்டம் அலைமோதியது.

இந்த நிலையில் கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் திரும்பி செல்லும்போது குப்பைகளை அங்கேயே விட்டுச்சென்று இருந்தனர். இதனால் கடற்கரை முழுவதும் குப்பைகளாக காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று இரவு முதலே மெரினா கடற்கரையில் குவிந்து இருந்த குப்பைகளை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விடிய விடிய குப்பைகளை அகற்றினர். வழக்கமாக சாதாரண நாட்களில் மெரினா கடற்கரையில் 10 டன் குப்பைகள் சேரும்.

ஆனால் காணும் பொங்கலையொட்டி இது 5 மடங்காக அதிகரித்து ஒரே நாளில் 50 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு உள்ளது.

நீச்சல் குளம் அருகே குப்பைகள் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து லாரிகள் மூலம் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. குப்பைகள் உடனடியாக அகற்றப்பட்டதால் மெரினா கடற்கரை பளிச்சென்று காணப்பட்டது.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘மெரினா கடற்கரையில் குப்பைகள் அகற்றும் பணி நேற்று இரவே தொடங்கப்பட்டது.

வழக்கமான நாளை விட 5 மடங்கு குப்பை அதிகமாக சேகரிக்கப்பட்டு உள்ளது. சுமார் 50 டன் குப்பைகளை வீசி சென்று உள்ளனர்’ என்றார்.

இதேபோல் பெசன்ட்நகர், கிழக்கு கடற்கரை சாலை கடற்கரையோரங்களிலும் நேற்று காணும் பொங்கலையொட்டி பொதுமக்கள் அதிக அளவில் குவிந்து இருந்தனர். அந்த பகுதியிலும் வழக்கத்தை விட கூடுதலாக குப்பைகள் அகற்றப்பட்டன.

You might also like