அன்புக்கு முதலிடம் தந்த எம்.ஜி.ஆர்.!

மக்கள் திலகம் டாக்டா்.எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாளை இன்று நாடு முழுவதும் அவரது தொண்டா்கள், ரசிகா்கள் உட்பட பலரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனா்.

இந்நிலையில் புரட்சித் தலைவரை நினைவுகூறும் விதமாக அவா் குறித்து சிறு மீள் பதிவு…

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆருக்கும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் இருந்த பரஸ்பர மதிப்பு பலர் அறியாதது.

1955-ல் தமிழகத்தில் வெள்ளப் பாதிப்பு வந்த சமயத்தில் நிவாரண நிதி திரட்டப்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்கத்தினரும் அதில் பங்கேற்றார்கள்.

நடிகர்கள், நடிகைகள் என்று பலரும் நிதியை அளித்தபோது, நிதியளித்தவர்களின் பட்டியல் எம்.ஜி.ஆர் பதிப்பாசிரியராக இருந்த ‘நடிகன் குரல்’ பத்திரிகை 1956 பிப்ரவரி மாத இதழில் வெளியிடப்பட்டது.

அந்தப் பட்டியலைப் பாருங்கள்.

சிவாஜி கணேசனுக்கு முன்னுரிமை கொடுத்து அவருடைய பெயரையும், அவர் கொடுத்த ஆயிரத்து ஒரு ரூபாயையும் பட்டியலில் முதலில் இடம் பெற வைத்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

ஒரு ரூபாய் குறைத்து ஆயிரம் ரூபாய் வழங்கிய எம்.ஜி.ஆரின் பெயர் இரண்டாவது இடத்தில் வெளியாகி இருக்கிறது.

கூடுதலாக ஒரு ரூபாய் சேர்த்துக் கொடுத்து பட்டியலில் முதலிடத்தில் தன்னுடைய பெயரை எம்.ஜி.ஆர் இடம் பெற வைத்திருக்கலாம்.

இருந்தும் சிவாஜிக்கே முன்னுரிமையும், முதலிடமும் கொடுத்திருக்கிறார்.
அவர்களுக்கிடையே இருந்த புரிதலையும், நட்பின் நெகிழ்வையும் காட்டுகிறது இந்தக் குறிப்பு.

அது மட்டுமல்ல, இதே நிதியளிப்போர் வரிசையில் டி.கே.எஸ்.சகோதரர்கள், டி.ஆர்.ராஜகுமாரி, என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் தம்பதி உட்படப் பலர் 1001 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள்.

ஜெமினி கணேசன் அப்போதே 2002 ரூபாய் நிதியளித்திருக்கிறார். பத்மினியும், லலிதாவும் 1001 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள் என்பதும் விசேஷம்.

You might also like