ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் சென்னைக்கு மாறியது. பிறகு கோவையில் தனக்குத் தெரிந்தவருக்கு எம்.ஜி.ஆர். போன் செய்து அவர் மூலம் என்னை சென்னைக்கு வரச் சொன்னார். நானும் சென்னை சென்றேன். அவரது ஏற்பாட்டின் பேரில் மயிலாப்பூர் லஸ் கார்னரில் ஜூபிடர் பிக்சர்ஸ் கலைஞர்கள் தங்கியிருந்த இடத்தில் நானும் தங்கினேன். அங்குள்ள தையல் கலைஞர் லட்சுமண ராவிடம் எனக்கு தையல் கற்றுக் கொடுக்கச் சொன்னார்.
சிறிது காலத்தில் எம்.ஜி.ஆர், கருணாநிதி, நடிகர் பி.எஸ்.வீரப்பா, டைரக்டர் காசிலிங்கம் ஆகியோர் சேர்ந்து மேகலா பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி ‘நாம்’ படத்தை தயாரித்தனர். ஜூபிடரில் இருந்து என்னை எம்.ஜி.ஆர். அழைத்துக் கொண்டு தனது ஏற்பாட்டில் தங்கவைத்தார். அப்போது முதல் அவருக்கு நான்தான் உடை வடிவமைப்பாளர்.
கிராமத்தில் வறுமையான குடும்பத்தில் சாதாரணமாக இருந்த சிறுவனான என்னை இப்படித்தான் எம்.ஜி.ஆர். உயர்த்திவிட்டார். உடை எப்படி இருந்தால் அழகாக இருக்கும் என்று யோசனை சொல்வார். நானும் புதுமையாக சிந்தித்து விதவிதமாக அதுவரை யாரும் போடாத வகையில் உடைகளை அவருக்காக தைத்து வடிவமைப்பேன். அதுவே ஃபேஷனாகி விடும். அவருக்கு கழுத்தில் குண்டடிபட்டு அறுவை சிகிச்சைசெய்த தழும்பு இருக்கும். படங்களில் அதை மறைப்பதற்காக சட்டைக் காலரை சற்று உயரமாக தூக்கிவைப்பேன். அதுவே அப்போது ஒரு ஃபேஷனாகி விட்டது.
திரையுலகை விட்டு எம்.ஜி.ஆர். விலகியபின், வேறு எந்த நடிகருக்கும் ஆடைகள் தைப்பதற்கோ வடிவமைப்பதற்கோ எனக்கு விருப்பம் இல்லை. என்னை விட்டுவிடாமல் தனது செயலாளர் போலவே கடைசிவரை கூடவே வைத்துக் கொண்டார்.
– உடை வடிவமைப்பாளர் முத்து
– நன்றி இந்து தமிழ் திசை