– இலக்குவனார் திருவள்ளுவன்
இந்த ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் கடந்த மார்கழி 25, 2053 / 09.01.2023 அன்று கூடியது.
மரபிற்கிணங்க ஆளுநர் உரையும் இக்கூட்டத் தொடர் தொடங்கியது. ஆனால், ஒன்றிய ஆள்வோரின் கைப்பாவையாகச் செயற்படும் ஆளுநரால் இந்நாள் கறுப்பு நாளாக மாறிவிட்டது.
பா.ச.க. ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களின் அத்து மீறல் நடப்பது வழக்கமாகி விட்டது. அதுபோல் இங்கும் ஆளுநரின் அத்துமீறல் நடந்துள்ளது.
கூட்டத் தொடரின் முதல் நாள் ஆளுநர் அரசின் உரையை வாசிப்பது மரபு. இது முழுக்க முழுக்க அரசு தரும் உரைதான். இதில் எதையும் சேர்க்கவோ நீக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது.
ஆனால், தமிழ்நாட்டு ஆளுநர் இந்த உண்மையை அறிந்தும் சில பகுதிகளை வாசிக்கவில்லை தானாகச் சிலவற்றைச் சேர்த்து வாசித்துள்ளார்.
கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் தமிழ்நாட்டு ஆளுநர் இர.நா.இரவி பேசுகையில் ஆளுநர் ஒன்றும் தொய்வ முத்திரை (Rubber Stamp) அல்ல என்று பேசியுள்ளார்.
உண்மையிலேயே சட்டப்பேரவையில் ஆளுநர் ஒரு வாயில்லாப் பூச்சிதான். அரசு சொல்வதைச் சொல்லும் கிளிப்பிள்ளைதான். எனவே, ஆளுநர் என்பவர் அதிகாரமற்ற மாநிலத் தலைமை அதிகாரி.
அரசியல் யாப்பு விதிகள் 160, 356, 357 ஆகியவற்றின்படிக் குடியரசுத் தலைவர் இசைந்தால் அன்றிச் சிக்கலான சூழல்களில் கூட ஆளுநருக்கு என எந்தவகையான அதிகாரமும் இல்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சியில் இருக்கும் பொழுது அமைச்சுக் குழுவின் அறிவுரையின்றி எந்த முடிவும் எடுக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.
அரசியல் யாப்பில் ஆளுநருக்குச் சில அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் அமைச்சுக் குழுவின் அறிவுரைப்படியே செயற்பட வேண்டும் என்ற விதி எல்லா அதிகாரங்களையும் செல்லாததாக்குகிறது.
சட்டப்பேரவையைக் கூட்டும் அதிகாரமும் முடித்து வைக்கும் அதிகாரமும்கூட அவரால் தன்னியல்பில் செய்ய முடியாது. அரசின்/பேரவைத் தலைவரின் நெறியுரைக்கிணங்கவே செயற்படுத்த இயலும்.
அரசியல் யாப்பு இவற்றைத் தெளிவாக வரையறுத்திருக்கும் பொழுது, ஆளுநர் தான்தோன்றித்தனமாகச் செயற்படுவதும் தன் விருப்பில் உரையாற்றுவதும் கண்டனைக்குரியதே யன்றி வேறில்லை.
ஆனால் தமிழ்நாட்டு ஆளுநர் தன்னால் ஒப்புதலளிக்கப்பட்ட அரசு உரையில் சில பகுதிகளை வேண்டுமென்றே அறிந்து வாசிக்காமல் ஒதுக்கியுள்ளார். சிலவற்றைச் சேர்த்து வாசித்துள்ளார்.
அண்ணல் அம்பேத்துகார், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திராவிட மாதிரி ஆட்சி, தமிழ்நாடு அமைதிப்பூங்கா, சமூக நீதி, சுயமரியாதை, பெண்ணுரிமை, பெரியார், மத நல்லிணக்கம், சமத்துவம் போன்ற சொற்களைச் சொல்லாமல் தவிர்த்து விட்டார்.
இதன் மூலம் பா.ச.க. மதநல்லிணக்கம், சமத்துவம், பெண்ணுரிமை, சமூகநீதி முதலியவற்றிற்கு எல்லாம் எதிரானது என்பதை ஒப்புக்கொண்டார்.
இது போல் பிற மாநிலங்களில் ஒன்றிய அரசின் கைப்பாவையாகச் செயற்படும் வேறு சில ஆளுநர்களும் நடந்துள்ளனர்.
கேரளாவில் 1969, 2001, 2018 ஆம் ஆண்டுகளிலும் மேற்கு வங்காளத்தில் 1969 ஆம் ஆண்டிலும் திரிபுராவில் 2017 இலிலும் இதுபோல் ஆளுநர்கள் அவைமரபை மீறியும் அரசியல் யாப்பிற்கு மதிப்பளிக்காமலும் ஏற்கப்பெற்ற உரைப்பகுதியை வாசிக்காமலும் தன் விருப்பிலான பகுதியைச் சேர்த்தும் வாசித்துள்ளனர்.
அப்பொழுது முதல்வர்கள் அவ்வாறு உரையில் இல்லாததைப் பேசும் பொழுதே அப்பகுதி உரையில் இல்லை என்பதைத் தெரிவித்துள்ளனர். அல்லது கடுமையாக எதிர்த்துள்ளனர்.
ஆனால், நம் முதல்வர் மு.க.தாலின் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. அதே நேரம் சட்டப்பேரவையின் கண்ணியத்தையும் காத்துள்ளார்.
ஆளுநர் உரையாற்றும் வரை காத்திருந்து அதன் பின்னரே ஆளுநர் தானாகக் கூறிய உரைகளை நீக்கிவிட்டு ஒப்புதல் பெற்ற உரையையே சட்டப்பேரவைக் குறிப்பில் சேர்க்கத் தீர்மானம் கொணர்ந்து நிறைவேற்றியுள்ளார்.
அவ்வாறு முதல்வர் தீர்மானத்தை வாசிக்கும் பொழுதே ஆளுநர் வெளிநடப்பு செய்துள்ளார். சட்டப்படி அரசின் தலைவர் ஆளுநர்தான். அவர்தான் சட்டப்பேரவையையும் கூட்டியுள்ளார்.
அவ்வாறிருக்க எதிர்க்கட்சியாள்போல் வெளிநடப்பு செய்தது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவையை அவமதிப்பதாகும்.
இந்த அவமதிப்புச் செயல் குறித்துச் சட்டப் பேரைவத்தலைவர் மாண்புமிகு அப்பாவு அவர்களும் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும் சிறப்பாகப் பேசியுள்ளனர்.
பாசக, அக்கட்சியின் தோழமைத் தலைவர்கள் சிலர் தவிர அனைவரும் ஆளுநரின் இப்போக்குகளைக் கண்டித்து வருகின்றனர். ஆளுநரைத் திரும்ப அழைக்க வேண்டும் என்றும் ஆளுநரே வெளியே போ என்றும் முழங்கி வருகின்றனர்.
பா.ச.கவின் கைப்பாவையாக உச்சத்தலைவர்கள் அறிவுரைகளுக்கிணங்கவேவ ஆளுநர்கள் செயற்படுவதால் ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும எடுக்காது.
தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழ்நாட்டுத்தலைவர்கள் பெயரைக்கூட உச்சரிக்க மறுக்கும் ஆளுநர் தானாகவே தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதுதான் அவருக்கு மரியாதையாகும்.
முதல்வரின் தீர்மானத்தை ஒன்றிய ஆட்கள் தவறாகச் சித்திரிக்கின்றனர். பொதுவாக ஆளுநர் உரையை வாசிக்காமல் அவ்வுரை ஆளுநரால் வாசிக்கப்பட்டதாகப் பேரவைத்தலைவர் அறிவிப்பதே பெரும்பாலும் மரபாக உள்ளது.
தமிழ் உரையை மட்டும் பேரவைத் தலைவர் வாசிப்பார். முழு உரையையே வாசித்ததாகக் கருதும் மரபு இருக்கும் பொழுது ஆளுநரால் விடுபட்ட, சேர்க்கப்பட்டவற்றைப் புறந்தள்ளி ஆளுநரால் ஏற்கப்பெற்ற உரையை வாசித்ததாகக் கருதிச் சட்டப்பேரவை ஏற்பது மிகச்சரியே ஆகும்.
எனவே, முதல்வரின் செயற்பாடு மூத்த தலைவர்களுடன் கலந்து பேசி விரைந்து எடுத்த சிறந்த முடிவாகும். இதன் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுமை மிக்கவராக ஒளி விடுவார்.
இங்கே மற்றொன்றையும் நினைவில் காெள்ள வேண்டும். பதவி யேற்புநிகழ்வுகளின்பொழுது ஆளுநர் முழுமையாக வாசிக்க மாட்டார்.
பதவியேற்பவர் ஆளுநர் முழுமையாகச் சென்னதாகக் கருதித் தானாகவே உறுதிமொழியை வாசிப்பார்.
எனவே, ஆளுநர் உரையின் சிலப் பகுதிகளை வாசிக்காத பொழுதும் ஏற்கப்பெற்ற முழு உரையையும வாசித்ததாகக் கருதிச் சட்டப்பேரவைக் குறிப்பில் இடம் பெறுவதும் மரபாகக் கொள்ளலாம்.
ஆளுநருக்குக் கட்சி உணர்வும் ஆர்.எஸ்.எஸ் பற்றும் இருப்பின் மிக்கிருப்பின் மாநிலத்தின் தலைமைப் பதவியை அதற்குப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். அல்லது பதவியைத் துறந்து முழுநேர ஆர்.எஸ்.எஸ் ஊழியராகச் செயற்பட வேண்டும்.
மனச் சான்றுக்கு விடை கொடுக்காமல் பதவிக்கு விடை கொடுத்துத் தானாகவே தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இதுவே தமிழ்நாட்டு மக்களின் விழைவாகும்.
விரைந்து வெளியேறுவாரா?
பயனற்ற சொற்களை விரித்துப் பேசுவது பேசுவோன் நன்மை செய்பவன் இல்லை என்பதை உணர்த்தி விடும் என்பதை நாம் பின்வரும் குறட்பா மூலம் அறியலாம்.
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
(திருவள்ளுவர்,திருக்குறள் 193)