நடிகர் விஜய் படங்கள் என்றாலே குடும்பங்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு வரும். ஆனாலும், அவர் அதிகமாக ‘பேமிலி எண்டர்டெயினர்’ கதைகளில் நடிக்கவில்லை.
என்றென்றும் காதல் தொடங்கி பிரியமானவளே, ப்ரெண்ட்ஸ், வசீகரா, சச்சின், காவலன் என்று அவர் நடித்த குடும்பப்பாங்கான சித்திரங்களின் பட்டியல் மிகச்சிறியது.
‘வாரிசு’ திரைப்படம் தொடங்கிய நாள் முதலே அப்படம் பெரியவர் முதல் குழந்தைகள் முதல் அனைவருக்குமான படமாக இருக்கும் என்றே விளம்பரப்படுத்தப்பட்டு வந்தது.
வாரிசு பார்த்து முடித்தபிறகு அப்படியொரு அனுபவம் கிடைக்கிறதா?
அடுத்த வாரிசு!
வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வருபவர் ராஜேந்திரன் பழனிச்சாமி (சரத்குமார்). அவருக்கு ஜெய் (ஸ்ரீகாந்த்), அஜய் (ஷாம்), விஜய் (விஜய்) என்று மூன்று மகன்கள்.
ஜெய்யும் அஜய்யும் ராஜேந்திரனின் வர்த்தகத்தைக் கவனித்துக் கொள்கின்றனர். தந்தையின் நிறுவனத்தில் பணியாற்ற தனக்கு விருப்பமில்லை என்று விஜய் சொல்லியதால், அவரை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறுகிறார் ராஜேந்திரன்.
மும்பை சென்று தனியாக ‘ஸ்டார்ட்அப்’ தொடங்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் விஜய்.
திடீரென்று ஒருநாள், தங்களது அறுபதாம் கல்யாணத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்று அவரது தாய் (ஜெயசுதா) அழைப்பு விடுக்கிறார்.
ஏழு ஆண்டுகள் கழித்து வீடு திரும்பும் விஜய்க்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. மூத்தமகன் ஜெய் ஒரு திசையில் இயங்கினால், எதிர்திசையில் நிற்கிறார் அஜய். அலுவலகத்தில்தான் இப்படி என்றால், வீட்டில் நிலைமை இன்னும் மோசம்.
இந்த நிலையில் ஜெய்யும் அஜய்யும் செய்யும் தவறுகள், ராஜேந்திரன் வீட்டு விழாவில் அம்பலமாகின்றன. குடும்பம் ஆளுக்கொரு பக்கமாகப் பிரிய, பணி நிமித்தம் மும்பை கிளம்புகிறார் விஜய்.
சிறிது நேரத்தில் குடும்ப மருத்துவரோடு வீடு திரும்புகிறார் விஜய். அவர் வந்த காரணம் ஏன் என்று தாய்க்குத் தெரியவில்லை. இத்தனை நாள் விஜய்யை வெறுத்த தந்தையோ, ‘இனி தன் நிறுவனத்திற்கு அவரே வாரிசு’ என்று அறிவிக்கிறார்.
இது ஜெய், அஜய்யை எதிரணியில் நிற்கச் செய்கிறது. ராஜேந்திரனின் தொழில் போட்டியாளரான ஜெயபிரகாஷ் (பிரகாஷ்ராஜ்) உடன் கூட்டு சேர வைக்கிறது. இது ராஜேந்திரன் மனதை நோகச் செய்கிறது.
தந்தையின் நிறுவனத்தில் விஜய் தலைவர் ஆக காரணம் என்ன, விஜய் மனம் மாறும் அளவுக்கு மருத்துவர் என்ன ரகசியம் சொன்னார், எதிரியுடன் சேர்ந்த சகோதரர்களை விஜய் தன் பக்கம் இழுத்தாரா, சிதறிய ராஜேந்திரன் குடும்பம் ஒன்றிணைந்ததா என்று சொல்கிறது ’வாரிசு’வின் மீதி.
ஒரு நிறுவனத்தின் அடுத்த வாரிசு என்று சொல்வதனால், திரைக்கதை பெரும்பாலும் தொழில்மயமாகவே காட்சியளிக்கிறது. அதுவே சாதாரண ரசிகர்களைத் திரையுடன் ஒன்றவிடாமல் தடுக்கிறது.
தி பாஸ் ரிட்டர்ன்ஸ்!
‘தி பாஸ் ரிட்டர்ன்ஸ்’ என்ற டேக்லைனை டைட்டிலில் மட்டுமல்லாமல் பின்பாதி திரைக்கதையிலும் பயன்படுத்தியிருக்கின்றனர்.
முன்பாதி முழுக்க டிசைனர் வடிவமைத்த வண்ணமயமான ஆடைகளில் வலம் வரும் விஜய், பின்பாதியில் ஸ்டைலிஷாக கோட் சூட் அணிந்து ’பாஸ்’ ஆகவே தோற்றம் தருகிறார்.
காமெடி, ரொமான்ஸ் குறைவாக இருந்தாலும், சென்டிமெண்ட் மற்றும் வழக்கமான ஆக்ஷன் கலந்த நடிப்பால் ரசிகர்களை ஈர்க்கிறார் விஜய்.
குரலை ஏற்ற இறக்கத்துடன் பேசுவது சிரிக்க வைத்தாலும், முழுக்க முழுக்க ‘ரெடின் கிங்ஸ்லி’யை இமிடேட் செய்திருப்பது ஏன் என்று தெரியவில்லை.
ராஷ்மிகா மந்தனாவுக்கு இதில் பெரிதாக வேலையில்லை. காதல், சென்டிமெண்ட், ரொமான்ஸ் அனைத்தும் கலந்த ஐந்தாறு காட்சிகளில் தலைகாட்டிவிட்டுச் சென்றுவிடுகிறார்.
‘ரஞ்சிதமே’, ‘ஜிமிக்கி பொண்ணு’ பாடல்கள் மட்டுமே தொடர்ந்தாற்போல அவரைத் திரையில் காட்டுகின்றன.
ஆதிக்கம் என்பதனை தன் உடல்மொழியில் சரத் வெளிப்படுத்தியிருப்பது அழகு. ஜெயசுதாவுக்கு விஜய் பரிமாறும் காட்சி தாய்மார்களைக் கண்ணீர் மழையில் நனைக்கும்.
ஸ்ரீகாந்த், ஷாம், பிரகாஷ்ராஜ், யோகிபாபு ஆகியோரின் நடிப்பு அருமை என்று சொல்லும் அளவுக்கு அவர்களுக்குத் திரைக்கதையில் இடம் தரப்பட்டிருக்கிறது.
எஸ்.ஜே.சூர்யாவின் வரவும் கூட திரையரங்கில் விசில் அள்ளுகிறது. விடிவி கணேஷ், ஸ்ரீமன் இருவரும் ஒருகாட்சியில் வந்தாலும் மனதில் நிற்கின்றனர்.
சங்கீதா கிரிஷ் அளவுக்குக் கூட சம்யுக்தா சண்முகத்துக்கு இடமளிக்கப்படவில்லை. ஸ்ரீகாந்தின் காதலியாக வரும் நந்தினிக்கும் அதே நிலைமை.
வம்சியின் முந்தைய படங்களில் பெண் பாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு என்ற நிலையில், இது ஏமாற்றம் தருவதாக உள்ளது.
கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு அனைத்து பிரேம்களுக்கும் திருஷ்டி சுற்றிப் போடும் வகையில் அமைந்திருக்கிறது.
ஒரேயொரு நபர் திரையில் வருவார் என்றபோதும் கூட, பிரேமை பிரமாண்டமாக காண்பித்தாக வேண்டுமென்று மெனக்கெட்டிருக்கிறார்.
பிரவீன் கேஎல் படத்தொகுப்பு, பல்வேறு அடுக்குகளில் நகரும் காட்சிகளை அடுத்தடுத்து கோர்த்திருக்கிறது. ஆனாலும், குஷ்புவை திரையில் காட்டாமல் ஏமாற்றிவிட்டார்.
ரசிகர்கள் திரைக்கு ஆரத்தி எடுக்கும் அளவுக்கு பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் தமன்.
‘தீ தளபதி’, ‘ரஞ்சிதமே’, ’வா தலைவா’ பாடல்களுக்கு ரசிகர்கள் போடும் ஆட்டத்தில் திரையரங்கமே அதிர்கிறது.
பாடல்கள், வசனம் மட்டுமல்லாமல் கூடுதலாகத் திரைக்கதையிலும் பங்களிப்பைத் தந்திருக்கிறார் பாடலாசிரியர் விவேக்.
சமகால நாயகர்களை வம்புக்கு இழுப்பதில் தொடங்கி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனைத் தொடர்புபடுத்துவது வரை ’பஞ்ச்’ வசனங்களில் ‘கொக்கி’ வைத்திருக்கிறார் விவேக்.
நிறுவனத்தின் இயக்குனர் குழு கூடி முடிவெடுக்கும் காட்சியில், விஜய்யின் பழைய திரைப்படங்களின் பின்னணி இசையைப் பயன்படுத்தியிருப்பது ரசிகர்களை நிச்சயம் ஈர்க்கும்.
ஆனால், அது ‘அலா வைகுண்டபுரம்லோ’ தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜுன் செய்த அட்ராசிட்டியின் தழுவல் என்று யாராவது சொன்னால் நன்றாக இருக்கும்.
என்னதான் படம் முழுக்க ஸ்டைலிஷாக விஜய் வந்தாலும், ஆக்ஷன் காட்சிகளில் பொறி பறந்தாலும், கண்ணீர் விடும் அளவுக்கு சென்டிமெண்ட் தூக்கலாக தெரிந்தாலும், ரசிகர்கள் அல்லாத சாதாரண மக்களை இந்த படம் முழுதாக ஈர்ப்பது கேள்விக்குறி. காரணம், பல திசைகளில் பாய்ந்து பரவியோடும் திரைக்கதை.
சீரியலா இது?
படம் முழுக்கவே ரசிகர்களுக்கானது, குடும்பங்களுக்கானது என்று பிரித்துப் பிரித்து காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர் வம்சி பைடிபல்லி.
முழுக்கவே ஒரு குடும்பம் சார்ந்த கதை என்பதால் ‘சீரியல்’ என்று சொல்லிவிடும் அளவுக்குக் கணிசமான காட்சிகள் அமைந்திருக்கின்றன.
இயக்குனர் வம்சி பைடிபல்லி, ஹரி, அசிஷோர் சாலமோன் மூவரும் இணைந்து ‘வாரிசு’வின் கதையை எழுடியிருக்கின்றனர்.
முன்பாதி குடும்பத்தின் பிரிவைச் சொல்வதாகவும், பின்பாதி முழுக்க அதனைச் சரி செய்வதாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது.
அதனால், பின்பாதியில் ஹீரோயிசம், பில்டப், ஆக்ஷன் காட்சிகள் எல்லாமே அதிகம்.
ஆனால், முன்பாதியில் இடைவேளை எப்போது வரும் என்று கேட்கும் அளவுக்குத் தொடர்ச்சியாக பல காட்சிகள் திருப்பங்களுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன.
காமெடி, ரொமான்ஸ், சென்டிமெண்ட், ஆக்ஷன் என்று தனித்தனியாக அமைந்த காட்சிகளோடு ‘நிறுவன நிர்வாகம்’ சம்பந்தப்பட்ட காட்சிகள் சேரும்போது திரைக்கதை ஒரு கதம்பமாகவே காட்சியளிக்கிறது.
பாத்திரங்களின் நேர்த்தி, திரைக்கதை ஓட்டம், ஒட்டுமொத்தமாக பார்வையாளர் பெறும் திரைப்பட வடிவம் என்று பலவற்றில் அக்கறை காட்டும் வம்சி, இதில் கொஞ்சம் தவறவிட்டிருக்கிறார்.
தமிழில் முதல் படம் என்பதோடு விஜய் உடன் பணியாற்றுவதும் கூட அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
ஆனாலும், ‘குடும்பம் ரொம்ப முக்கியம்’ என்ற மைய இழையின் வழியே அனைத்தையும் ஒன்றாக இணைக்க முயற்சித்திருக்கிறார் வம்சி.
சண்டை மற்றும் பாடல் காட்சிகள் தவிர்த்து, மீதமுள்ள காட்சிகளில் வீடு சார்ந்தவை அனைத்தும் சீரியல் போன்றே தெரிகின்றன. அக்காட்சிகளைப் பார்த்துவிட்டு விஜய் ரசிகர்கள் ‘நல்லாயிருக்கு’, ‘இல்லை’ என்று கலந்து கட்டி தலையாட்டுவது உறுதி.
அதனை மீறி, அடுத்தடுத்த நாட்களில் திரையரங்குகள் குடும்பங்களால் நிரம்பி வழிவது உறுதி. அதனை மட்டும் நம்பியே ‘வாரிசு’ களமிறங்கியிருக்கிறது.
-உதய் பாடகலிங்கம்