வடகிழக்குப் பருவமழை நாளை விலக வாய்ப்பு!

– சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். ஆனால், கடந்த ஆண்டு சற்றுத் தாமதமாக, அக்டோபர் 29-ம் தேதி தொடங்கியது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை நாளையுடன் விலகுவதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் அதை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளப் பகுதிகளிலிருந்து ஜனவரி 12-ம் தேதி விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகக் கூறியுள்ளார்.

அதேபோல், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்துக்கு வாய்ப்புள்ளது எனவும்,

உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் எனவும் கூறியுள்ள அவர்,

நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரம் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது எனவும், சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று  வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறியுள்ளார்.

You might also like