நல்ல நோக்கங்களோடு மேற்கொள்ளப்படும் காரியங்கள், அடிப்படை அம்சங்களைத் தகர்க்கும் வகையில் இருந்தால் நன்றாகவா இருக்கும். பொதுவெளியில் நிகழும் சில விஷயங்கள் இந்த கேள்வியை எழுப்பியிருக்கின்றன.
சிறப்பான கருத்துகளை வெளிப்படுத்தும் திரைப்படங்கள் அதற்கு எதிரான காட்சியாக்கத்தைக் கொண்டிருப்பதும் அது போன்றதே. வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கும் ‘V3’ அப்படியொரு எண்ணத்தை நம்முள் ஏற்படுத்துகிறது.
அத்துமீறலுக்கு ஆளாகும் பெண்
விந்தியா (பாவனா) என்ற பெண் ஒரு தேர்வில் பங்கேற்றுவிட்டு இரவில் புறநகரில் இருக்கும் ரயில்நிலையத்தில் இறங்குகிறார். தன் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு வீட்டுக்குக் கிளம்புகிறார்.
செல்லும் வழியில் அவரது ஸ்கூட்டர் ரிப்பேர் ஆகிறது. அப்போது, முன்பின் அறிமுகமில்லாத 5 நபர்கள் அவர் எதிரே வருகின்றனர். அதன்பின், அவர் வீடு திரும்பவில்லை.
விந்தியாவுக்காக காத்திருக்கும் தங்கை விஜியும் (எஸ்தர் அனில்) அவரது தந்தையும் (ஆடுகளம் நரேன்) காத்திருந்து சோர்ந்து போகின்றனர்.
சாலையில் விந்தியாவின் ஸ்கூட்டர் மட்டும் இருப்பதைக் கண்டு பயந்துபோய், போலீசை நாடுகின்றனர்.
தகவல்களைப் பெற்றுக்கொண்டு விசாரிப்பதாகச் சொல்கின்றனர் போலீசார். சில மணி நேரங்கள் கழித்து, ஒரு பாலத்தின் அடியில் எரிந்த நிலையில் ஒரு பெண் பிணம் கிடப்பதாக போலீஸுக்கு தகவல் வருகிறது. அருகே விந்தியா பயன்படுத்திய வாட்ச் கிடைக்கிறது.
உடற்கூறாய்வுக்குப் பிறகு, அப்பெண் ஐந்து நபர்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டது தெரிய வருகிறது.
இரண்டொரு நாட்களில் விந்தியா வழக்கு பூதாகரமாகிறது; குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று பொதுமக்களே போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதையடுத்து, உடனடியாக வழக்கை முடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர் போலீசார். அப்போது, குற்றம் நடந்த பகுதியில் இருந்த நபர்களின் இருப்பு கண்காணிக்கப்படுகிறது.
5 இளைஞர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு போலீசாரால் கைது செய்யப்படுகின்றனர்.
குற்றவாளிகள் பிடிபட்டதாகச் செய்திகள் வரும் முன்னரே, விசாரணை அதிகாரியால் அவர்கள் என்கவுண்டர் செய்யப்படுகின்றனர். அதன்பிறகு மனித உரிமை ஆணையம் அந்த என்கவுண்டர் பற்றி விசாரணை நடத்துகிறது.
நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்ற சிவகாமி (வரலட்சுமி), விந்தியா குடும்பத்தினரிடமும் என்கவுண்டரில் பலியானவர்களைச் சார்ந்தோரிடமும் போலீசாரிடமும் தகவல்களைப் பெறுகிறார்.
அதன் முடிவில், நடந்தது போலி என்கவுண்டர் என்ற உண்மையை அறிந்ததும் அதிர்ச்சி அடைகிறார்.
அப்படியானால், உண்மையில் என்ன நடந்தது என்பதே ‘V3’யின் மீதிக்கதை.
எது தேவையில்லை!
‘விந்தியா விக்சிம் வெர்டிக்ட்’ (Vindhya Victim Verdict) என்ற ஆங்கிலப் பெயர்களின் சுருக்கமே V3.
படத்தில் விந்தியாவின் வாழ்வைப் பெயரளவுக்கு காட்டிவிட்டு, அப்பெண் முன்வைக்கும் தீர்ப்பை வசனங்களில் வெளிப்படுத்திவிட்டு, அவர் பாதிப்புக்குள்ளாகும் பகுதியை மட்டும் ‘விலாவாரியாக’ விளக்கியிருக்கின்றனர். அது, கதையின் அடிப்படைக் கருவையே ஆட்டம் காண வைக்கிறது.
தெலங்கானாவில் நடந்த என்கவுண்டர் போலியானது என்று விசாரணை கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதே போன்றதொரு விஷயம் இதில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
சில மாதங்களுக்கு முன் வெளியான ‘ஜனகணமண’ எனும் மலையாளப் படத்திலும் கூட இதே போன்றதொரு விஷயம் கையாளப்பட்டிருந்தது.
ஆனால், ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த அத்துமீறலை மையப்படுத்தியிருக்கும் ‘வி3’, அதனைச் சரிவரக் கையாளவில்லை என்பதில் வருத்தம் அதிகம்.
பாலியல் அத்துமீறலுக்கு எதிரான கருத்தை முன்வைக்கையில் அது தொடர்பான அருவெருப்புகளைத் திரையில் காட்டியிருக்கிறார்கள்.
கைது செய்யப்பட்டவர்களை குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று, எவ்வாறு சம்பவம் நடந்தது என்று விவரிக்குமாறு அமைக்கப்பட்ட அக்காட்சி நிறைய நேரத்தை விழுங்கியிருக்கிறது.
அதேபோல, இப்படம் முன்வைக்கும் தீர்வுகளும் கூடத் தனியாக விவாதிக்கப்பட வேண்டியவை. அவற்றுக்கும் திரைக்கதைக்கும் சம்பந்தமில்லை என்பதுதான் முக்கியமான விஷயம்.
இயக்குனர் அமுதவாணன் பெண்கள் பாதுகாப்பாக இச்சமூகத்தில் நடமாட, விபச்சாரத் தொழிலை சட்டத்திற்கு உட்பட்டதாக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார்.
ஆனால், பெண்களை வெறுமனே பாலியல் எண்ணத்தோடு நோக்குவதைத் தவிர்க்கப் பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு முறைகளில் மாற்றம் வேண்டுமென்பதைச் சொல்ல மறந்திருக்கிறார்.
மொபைல் வழியே உலகைக் காணும் இன்றைய சூழலில், அது பற்றிப் படம் பேசவே இல்லை.
கொஞ்சம் பெரிய குறும்படமாக அமைந்திருக்க வேண்டிய கதை. ஆனால், தேவையான இடங்களைச் சுருக்கி தேவையற்ற இடங்களைப் பெருக்கியிருப்பதன் மூலம் எரிச்சலூட்டியிருக்கிறது திரைக்கதை.
ஒரு திரைக்கதைக்கு என்னவெல்லாம் தேவை என்பதைவிட, என்னவெல்லாம் தேவையில்லை என்று முடிவு செய்வது மிக முக்கியம். அவ்வாறு இருந்திருந்தால், V3 ஒரு மனதில் சோகம் கசியச் செய்யும் படமாக இருந்திருக்கும்.
இப்போது, ஒரு விபரீதம் நிகழ்ந்தது குறித்து திரைக்கதை முன்வைக்கும் விளக்கம் ஒரு விஷமாக மட்டுமே நோக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
முயற்சி மட்டுமே!
சிவகாமி எனும் அரசு அதிகாரியாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், நம் மனதில் பதிகிறார். அவர் விசாரணை மேற்கொள்ளும் காட்சிகளில் பெரிதாக வசனங்களே இல்லை.
விந்தியாவாக வரும் பாவனா, நன்றாகவே திரையில் தோன்றியிருக்கிறார். ஆனால், அவரது முகம் பதியும்படியான காட்சிகளே படத்தில் இல்லை. அவரது பாத்திரம் எப்படியெல்லாம் சிந்திக்கும், செயல்படும் என்பதை இன்னும் விளக்கியிருக்கலாம்.
பாவனா காணாமல் போன பதைபதைப்பை வெளிப்படுத்தும் காட்சிகளில் நரேனும் எஸ்தரும் இயல்பான நடிப்பைக் காட்டியிருக்கின்றனர்.
போலீஸ் அதிகாரியாக வருபவரும் சரி, இன்ஸ்பெக்டராக வருபவரும் சரி, பெரிதாகத் திரையில் முக்கியத்துவத்தைப் பெறவில்லை.
அதேபோல, என்கவுண்டரில் பலியாகும் இளைஞர்கள் பற்றிய காட்சி விவரணைகளும் கூட அரைகுறையாகவே சொல்லப்பட்டிருக்கின்றன.
ஆலன் செபஸ்டியன் பின்னணி இசை சில இடங்களில் பரபரப்பைக் கூட்ட உதவியிருக்கிறது. நாகூரான் படத்தொகுப்பு தேவையற்ற இடங்களை மிகுதியாக்கி தேவையான காட்சிகளைக் கத்தரித்து அகற்றியிருக்கிறது.
பாவனா, நரேன் மற்றும் எஸ்தரின் வாழ்வை விளக்க ஒரு பாடல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அந்த பாடல் கேட்க இனிமையாக உள்ளது. ஆனால், அது மட்டுமே இக்கதைக்கு போதுமென்று நாகூரான் நினைத்திருந்தால் ‘சாரி’ என்றே சொல்லத் தோன்றுகிறது.
சிவா பிரபுவின் ஒளிப்பதிவு, இரவு நேரக் காட்சிகளை அற்புதமாகப் படம்பிடித்திருக்கிறது.
தினசரிகளில் வெளியாகும் ‘பாலியல் கொலைகள்’ தொடர்பான செய்திகளில் இருந்து ஒரு கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் அமுதவாணன். அதனுடன் ஒரு போலி என்கவுண்டரையும் இணைத்திருக்கிறார். அதில் தவறேதுமில்லை.
ஆனால், இக்கதையில் அவர் எந்த பாத்திரத்தை நியாயப்படுத்துகிறார் என்றுதான் தெரியவில்லை.
அனைவருக்கும் நியாயம் உண்டு என்று கருதுவார் என்றால், அதற்கேற்றவாறு திரைக்கதை கொஞ்சம் கூட செதுக்கப்படவில்லை என்பதைப் பட்டவர்த்தனமாகச் சொல்லியாக வேண்டும்.
ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் ஒரு படம், பெண்களின் பாதுகாப்பையும் பாலின சமத்துவத்தையும் பேசியிருப்பது நல்ல விஷயம். நல்ல முயற்சியும் கூட.
ஆனால், அது முற்றுப்பெறாமல் நின்றிருப்பதுடன் மோசமான காட்சியனுபவத்தையும் தருகிறது.
குறைந்தபட்சமாக, படக்குழுவில் இருந்தவர்களின் குடும்பத்துப் பெண்களை அழைத்து ‘அபிப்ராயம்’ கேட்டிருந்தால், அந்த குறைகள் களையப்பட்டு இக்கதையும் அதற்கான நியாயத்தை நோக்கிப் பயணித்திருக்கும்!
-உதய் பாடகலிங்கம்