இந்திய வானிலை ஆய்வு மையம்
கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் கடுமையான பனி பொழிந்து வருகிறது. இதனால் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வட மாநிலங்களில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதோடு ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. வடமாநிலங்களில் நாளை முதல் குளிர் குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடும் குளிர் காரணமாக டெல்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 15-ம் தேதி வரை விடுமுறை அளிக்க மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே கடும் பனி மூட்டம் நிலவுவதால் நேற்று மட்டும் 480 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதில் 335 ரயில்கள் தாமதமாக சென்றுள்ளதாகவும், 88 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் 31 ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதே போல் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.