– முனைவர் குமார் ராஜேந்திரன்
மீள் பதிவு
‘கன்னடத்து பைங்கிளி’ என்றார்கள் அவரை. ‘அபிநய சரஸ்வதி’ என்றழைத்தார்கள்.
அறுபதுகளுக்குப் பிறகு கருப்பு, வெள்ளை மற்றும் வண்ணப் படங்களில் கதாநாயகியாகப் பல மொழிகளில் நடித்த சரோஜாதேவியை அவ்வளவு சுலபமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மறந்துவிட முடியாது.
அவர் தமிழைக் கொஞ்சிக் கொஞ்சித் திரையில் பேசினால் அதையும் ஏற்றுக் கொண்டார்கள் தமிழ் ரசிகர்கள். தமிழ்த் திரையில் தன்னுடைய உடம்பைக் கவனமாகப் பேணி, தன்னுடைய தோற்றத்தை எழிலாக வைத்துக் கொண்டவர்கள் அவரும் ஒருவர். கேமராவுக்கான களையான முகம் அவருடையது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1938 ஆம் ஆண்டு, ஜனவரி 7 ஆம் தேதி பிறந்தவர் சரோஜாதேவி. தந்தை பைரப்பா காவல்துறை அதிகாரி. தாயார் ருத்ரம்மாள்.
1955-ல் நடிகரும், தயாரிப்பாளருமான ஹொன்னப்ப பாகவதரின் தயாரிப்பில் கன்னடத்தில் வெளியான ‘மகாகவி காளிதாசா’ படத்தில் அறிமுகமானவர் சரோஜாதேவி. அவருடைய முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.
தமிழில் பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் 1957-ல் வெளிவந்த ‘தங்கமலை ரகசியம்’ படத்தில் நடனப் பெண்மணிகளில் ஒருவராக நடித்தார். அதைத் தொடர்ந்து வெளிவந்த ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ படத்தில் நாயகியாக நடித்தார்.
அப்பொழுது இயக்குநர் கே.சுப்ரமணியமும், நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் சரோஜாதேவியின் தோற்றத்தைக் கண்டு அவரை தமிழ் சினிமாத்துறையைச் சேர்ந்த சிலரிடம் அறிமுகம் செய்து வைத்தனர்.
தயாரிப்பாளர் சின்ன அண்ணாமலையும், இயக்குநர் ப.நீலகண்டனும் அறிமுகமானார்கள். குறிப்பாக எம்.ஜி.ஆரின் அறிமுகம் கிடைத்தது.
1958–ல் எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்து, இயக்கித் தயாரித்த ‘நாடோடி மன்னன்’ படத்தில் இறுதிப்பகுதி வண்ணத்தில் படமாக்கப்பட்டிருக்கும். அந்தப் படத்தில் ஏற்கனவே பானுமதி கதாநாயகியாக இருந்தும், பின்பகுதியில் ரத்னபுரி இளவரசியாக நடித்துப் பெயர் வாங்கியவர் சரோஜாதேவி.
எம்.ஜி.ஆருடன் தனிக் கதாநாயகியாக அவர் நடித்த படம் ‘திருடாதே’. அந்தப் படத்தில் எம்.ஜி.ஆருடன் முதல் காட்சியில் அவர் நடித்தபோது கீழே கிடந்த கண்ணாடித் துகள் அவர் காலில் குத்தி ரத்தம் வந்து விட்டது.
பதறிப்போய்த் தனது கர்சீஃப்பை எடுத்து நீரில் நனைத்து எம்.ஜி.ஆர் சரோஜாதேவியின் காலில் கட்டுப்போட்டதும் அருகில் அதைப் பார்த்துக் கொண்டிருந்த ருத்ரம்மா மகளிடம் நெகிழ்ச்சியுடன் சொன்னார். “இனி உன்னுடைய அண்ணன் எம்.ஜி.ஆர் உன்னைக் கவனித்துக் கொள்வார்”
ஜெமினியுடன் ‘கல்யாணப் பரிசு’, சிவாஜியுடன் ‘பாகப் பிரிவினை’, ‘கைராசி’ என்று சரோஜாதேவி நடித்த படங்கள் எல்லாமே நல்ல ஹிட்.
சின்னப்பா தேவர் தயாரித்த ‘தாய் சொல்லைத் தட்டாதே’ துவங்கி எம்.ஜி.ஆருடன் நடித்த பல படங்கள் ஹிட். ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த ‘தெய்வத்தாய்’, வேலுமணி தயாரித்த ‘பணத்தோட்டம்’, ‘படகோட்டி’, நாகிரெட்டி தயாரித்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ஏ.வி.எம்.மின் ‘அன்பே வா’ என்று தொடர்ந்து வெற்றிப் படங்கள்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திரைமுகமாகி விட்டார் சரோஜாதேவி. அவருடைய பல்வேறு முகபாவம் காட்டும் முகம், கட்டுக்கோப்பான உடலுடன் அவர் ஆடிய நடனம், அவருடைய புன்சிரிப்பு, உருக்கம், குதூகலம் எல்லாமே தமிழ் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டன.
கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு அவருக்குத் தொடர்ச்சியான படப்பிடிப்புகள். பெண்களின் மானசீக மாடலைப் போலவும், அந்தக் கால இளைஞர்களின் கனவுக் கன்னியாகவும் ஆனார் சரோஜாதேவி.
1960-களில் எம்.ஜி.ஆர் இலங்கைக்குச் சென்றபோது, தனது தாயாருடன் உடன்சென்றவர் சரோஜாதேவி. பெரும் வரவேற்பு அவர்களுக்கு. அங்கு சரோஜாதேவிக்குக் கொடுக்கப்பட்ட பட்டம் ‘நிருத்திய லட்சுமி’.
துவக்கத்தில் தமிழில் பேசுவதில் அவருக்குச் சிரமம் இருந்தாலும், படிப்படியாகத் தன்னை உயர்த்திக்கொண்டு நீண்ட வசனங்களைச் சரளமாகப் பேசும் அளவுக்குப் போனார்.
சிவாஜியுடன் இணைந்து அவர் நடித்த ‘புதிய பறவை’, ‘பாலும் பழமும்’, ‘இருவர் உள்ளம்’, ‘ஆலயமணி’ என்று பல படங்கள் அவருக்குப் பெரும் பெயரை வாங்கித் தந்தன.
பெரும்பாலும் தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்கள், முன்னணி நடிகர்கள் என்று அனைவருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். 2009-ல் நடிகர் சூர்யாவுடன் ‘ஆதவன்’ படத்திலும் நடித்திருக்கிறார்.
1967-ஆம் ஆண்டு பொறியாளரான ஸ்ரீஹர்ஷா என்பவரைத் திருமணம் செய்து கொண்ட சரோஜாதேவிக்குப் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன.
மத்திய அரசின் பத்ம பூஷன், பத்மஸ்ரீ விருது, வாழ்நாள் சாதனையாளருக்கான மத்திய அரசின் தேசிய விருது, தமிழக அரசின் எம்.ஜி.ஆர் விருது மற்றும் கர்நாடக, ஆந்திர அரசின் விருதுகளும், கௌரவ டாக்டர் பட்டமும் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன.
தமிழ்த் திரையுலகம் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருக்கிற அவர் அளிக்கிற பேட்டிகளில் அதைத் தொடர்ந்து வெளிப்படுத்தியிருக்கிறார்.
“தமிழில் ‘நாடோடி மன்னன்’ படத்தில் தான் நான் அறிமுகமானேன். படத்தில் நான் வரும் காட்சியிலிருந்து தான் வண்ணம் ஆரம்பமாகும்.
தான் அறிமுகப்படுத்திய நாயகிக்கு நல்ல முறையில் அறிமுகம் கிடைக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனமாக இருந்தவர் திரு.எம்.ஜி.ஆர். என்னுடைய பிறந்த நாள் அன்று வழக்கமாக அவரிடமிருந்து போன் வரும். அழைத்து வாழ்த்துவார்.
ஒரு முறை பிறந்த நாள் அன்று காலையில் ஜானகி அம்மாவுடன் நேரில் என் வீட்டுக்கு வந்து வாழ்த்திவிட்டுச் சென்றதை மறக்க முடியாது.
என்னைப் பொருத்தவரை சொந்தத் தாயை விட, அன்பைப் பொழிபவர் அவர். முதலமைச்சராக அவர் ஆனபிறகும் கூட, தொலைபேசியில் அழைத்தால் பேசுவார்.
இன்றல்ல, என்றும் என்னை வாழ வைக்கும் தெய்வம் எம்.ஜி.ஆர்’’ என்று உணர்ச்சிபூர்வமாக மூன்றாண்டுகளுக்கு முன்பு பேட்டி ஒன்றில் தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருந்தார் சரோஜாதேவி.
பெங்களூருவில் தற்போதும் தன்னுடைய உடல் நலனில் அக்கறை காட்டி, தோற்றத்திலும் இளமையாக வாழ்ந்து வரும் சரோஜாதேவிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தமிழ் ரசிகர்கள் சார்பில்.