வியாபாரமாகாமல் கிடந்த படங்களின் விசுவரூப வெற்றி!

சினிமா சந்தையில் எப்போதுமே, நமக்கு ஏற்கனவே அறிமுகமான சரக்குகளுக்கு மட்டுமே கிராக்கி உண்டு; நல்ல விலையும் கிடைக்கும். புதிய வரவுகள் தேங்கியே கிடக்கும்.

அப்படி வதங்கி கிடந்த படங்களையும், சந்தையில் அவை புதிய உச்சத்தை எட்டிய வரலாற்றையும் சுருக்கமாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பதினாறு வயதினிலே!

அப்போது பாரதிராஜாவை, சினிமா உலகுக்கு யார் என்றே தெரியாது. புட்டண்ணா கனகலிடம் உதவியாளராக வேலை பார்த்த அவர், ராஜ்கண்ணு தயாரிக்க பதினாறு வயதினிலே படத்தை இயக்கி முடித்திருந்தார். கமலும், ரஜினியும், ஸ்ரீதேவியும் ஓரளவு அறியப்பட்டவர்கள்.

தமிழ்த்திரை உலகில் பின்னாட்களில் பிரளயத்தை உருவாக்கிய அந்த படத்தை, ஆரம்பத்தில் விலைக்கு வாங்க யாரும் முன்வரவில்லை.

ஒரு பெரிய இயக்குநர் பெயரை ‘டைரக்ஷன்’ என டைட்டிலில் போட்டு படத்தை விற்க முயற்சி நடந்தது.

படத்தை பார்த்து மிரண்டு போன அந்த டைரக்டர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், “இந்தப் படம் தமிழ் சினிமாவை வேறு இடத்தில் அமர வைக்கப்போகிறது’’ என கணித்தார்.

பெரும் போராட்டத்துக்கு பின் வெளிவந்த பதினாறு வயதினிலே, அந்த இயக்குநரின் கணிப்பை மெய்யாக்கியது. நான்காவது படத்திலேயே, பாரதிராஜாவை தயாரிப்பாளராக்கியது.

ராதிகா, ரதி, ராதா, ரஞ்சனி, ரேகா என ‘ஆர்’ இனிஷியல் நடிகைகள், தமிழ் சினிமாவில் முளைவிட வித்தானது.

ஒருதலை ராகம்!

பாரதிராஜா படத்திலாவது இளையராஜா, கமல், ரஜினி, ஸ்ரீதேவி என கொஞ்சமாக தெரிந்த முகங்கள் இருந்தன. அப்படி எந்த முகமும் ஒருதலை ராகத்தில் இல்லை.
தயாரிப்பாளர், இயக்குநர், இசை அமைப்பாளர், ஹீரோ, ஹீரோயின், வில்லன் என அனைவருமே அறிமுகங்கள்.

விநியோகஸ்தர்களுக்கு படத்தைப் போட்டுக் காட்டி தயாரிப்பாளர் நொந்து போனார். ரயில் பயணக் கதையை சொன்ன இந்தப்படம், எப்படியோ சிக்னல் கிடைத்து பாசஞ்சர் போல் ஓட ஆரம்பித்து, பின்னர் புயல் வேகமெடுத்து. தமிழ் சினிமாவில் சுனாமியையே ஏற்படுத்தியது.

அன்னக்கிளி!

வண்ணப்படங்கள் மட்டுமே திரையிடப்பட்ட காலகட்டத்தில், தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் முகத்துக்காக, விநியோகஸ்தர்கள் தயக்கத்துடன் வாங்கி வெளியிட்ட கருப்பு – வெள்ளை படம் ‘அன்னக்கிளி’.

நெல்லை போன்ற ஊர்களில் இரண்டாவது, மூன்றாவது நாளே தியேட்டர்களில் இருந்து தூக்கி விட்டார்கள்.

அதன்பிறகு ஹிட்டான “மச்சான பாத்தீங்களா?’’ பாடல், அன்னக்கிளி மீண்டும் திரை அரங்குகளில் ரீ – ரிலீஸ் ஆக காரணமானது.

அந்தப் பாடலே “அன்னக்கிளி பாத்தீங்களா?’’ என ஒவ்வொருவரையும் கேட்க வைத்தது.

இளையராஜா எனும் ராகதேவன் தமிழ் சினிமாவை 30 ஆண்டுகாலம், தனது கைப்பிடிக்குள் வைத்திருக்க விசிட்டிங் கார்டு – ஆனது.

சேது!

தியாகராய நகர் சென்னையின் இதயம். ஆனால் அங்குள்ள கிருஷ்ணவேனி தியேட்டரை – ‘A’ சென்டர் என சினிமாக்காரர்கள் சொல்வதில்லை.

பிற தியேட்டர்களில் ஓடி முடிந்த படங்களே அங்கு திரையிடப்படுவது வழக்கம்.
அந்த தியேட்டரில் வெளியான திரைப்படம்தான் சேது. இத்தனைக்கும் அந்த படத்தின் ஹீரோ விக்ரம், தயாரிப்பாளர் அமிதாப் (உல்லாசம்), ஸ்ரீதர், ஸ்ரீராம் போன்ற ஜாம்பவான்களின் படத்தில் நடித்தவர்.

ராசி இல்லாதவர் என அவர் கருதப்பட்டதாலும், பாலாவை யாரும் அறியாததாலும் சேதுவை திரையிட யாரும் தயாராக இல்லை.

சிக்கல்களை சந்தித்து, சேது வெளியான பிறகே ராகு – கேது எல்லாம் சேர்ந்து பாலாவையும்,  விக்ரமையும் உச்சிக்குக் கொண்டு சென்றன.

மேற்சொன்ன படங்களில் பங்களிப்பு செய்த படைப்பாளிகளும், அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட கலைஞர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோரும்,  பின்னாட்களில், டெல்லியில் இருந்து குவியல் குவியலாக தேசிய விருதுகளை அள்ளிக்கொண்டு வந்தவர்கள் என்பதை இங்கே நினைவு கூற வேண்டும்.

பி.எம்.எம்.

You might also like