நாயகன் மட்டுமல்ல, நாயகியாலும் ஒரு திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் ஈர்ப்பை அதிகப்படுத்த முடியும்.
முழுக்க நாயகியை மையமாக கொண்ட கதையில் நடித்து, அப்படைப்பை வெற்றி பெற வைக்க முடியும். சமகாலத்தில் அப்படியொரு நாயகியாகத் திகழ்பவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.
கால் டாக்சி ஓட்டுநர் வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் படம் தான் ‘டிரைவர் ஜமுனா’. கடந்த அக்டோபர் மாதமே வெளியாகியிருக்க வேண்டிய இப்படம், கொஞ்சம் தாமதமாகத் தற்போது வெளியாகியிருக்கிறது.
‘வத்திக்குச்சி’யின் மூலமாக அறிமுகமான இயக்குனர் கின்ஸ்லின் இதனை இயக்கியுள்ளார்.
பயணமே பிரதானம்!
கால் டாக்சி ஓட்டுநரான ஜமுனா (ஐஸ்வர்யா ராஜேஷ்) ஒருநாள் பயணத்திற்காகக் காத்திருக்கிறார். அப்போது ஒரு அழைப்பு வருகிறது. அந்த இடத்திற்குச் செல்கிறார்.
அங்கு 3 ஆண்கள் காத்திருக்கின்றனர். முரட்டுத்தனமான தோற்றத்துடன் அவர்கள் இருப்பதைக் கண்டு கொஞ்சம் பயமுறுகிறார் ஜமுனா. அவசரமாக ஒரு இடத்திற்குப் போக வேண்டியிருப்பதாகச் சொல்ல, அவர்களுடன் கிளம்புகிறார்.
போகும் வழியில், இசையமைப்பாளர் கனவுடன் இருக்கும் ஒருவர் (அபிஷேக்) ஏறுகிறார்.
பாதி வழியிலேயே, அந்த மூன்று பேரும் கூலிப்படை கொலையாளிகள் என்று ஜமுனாவுக்குத் தெரிய வருகிறது.
மூவருமே முன்னாள் எம்.எல்.ஏ. மரகத வேலை (நரேன்) கொலை செய்யப் புறப்பட்டிருக்கின்றனர். அந்த விஷயம் போலீசாருக்கு தெரிய வருகிறது. ஜமுனாவின் கால் டாக்சியை அவர்கள் கண்காணிக்கின்றனர்.
அதையும் மீறி, கூலிப்படையைச் சேர்ந்த பெல்சாத்தும் நாகுவும் மரகதவேல் இருக்குமிடத்திற்குச் செல்லுமாறு ஜமுனாவை மிரட்டுகின்றனர்.
மரகதவேல் மீது கூலிப்படையை ஏவியது யார்? போலீசாரின் கண்காணிப்பை மீறி கூலிப்படை ஆட்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் சென்றனரா? தன் மீதிருக்கும் கோரப்பிடியில் இருந்து ஜமுனா தப்பித்தாரா என்று சொல்கிறது ‘டிரைவர் ஜமுனா’.
கிட்டத்தட்ட முக்கால்வாசி படம் கார் பயணத்தையே பிரதானமாகக் கொண்டிருக்கிறது. ஒரு பார்வையாளர் படத்தை மிகவும் விரும்புவதற்கும் அல்லது வெறுப்பதற்கும் அது மட்டுமே காரணமாக இருக்கிறது.
‘வாவ்’ ஐஸ்வர்யா!
படம் முழுக்க ஐஸ்வர்யா ராஜேஷ் வருகிறார். அதேநேரத்தில், முழுப்பொறுப்பையும் தன் தோளில் தாங்கி பார்வையாளர்கள் அலுப்புறாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்.
அவரது பாத்திரம் தைரியசாலியா அல்லது சாகசக்காரியா என்பதை நாம் தெரிந்துகொள்ளும் முன்பே ‘கிளைமேக்ஸ்’ வந்துவிடுகிறது.
அதன்பிறகு, நமது கேள்வியும் மறந்துபோய் விடுகிறது. அதனாலேயே, ஐஸ்வர்யாவின் இருப்பு ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.
ஐஸ்வர்யாவின் தாயாக வரும் ஸ்ரீரஞ்சனியும், தந்தை மற்றும் சகோதரராக வருபவர்களும் நம் கவனத்தை ஈர்க்கின்றனர். இசையமைப்பாளராக வரும் அபிஷேக், கொஞ்சமாக நம்மைச் சிரிக்க வைக்கிறார்.
ஆடுகளம் நரேன் மற்றும் அவரது மகனாக வரும் மணிகண்டன் இருவரும் கதாபத்திரங்களாக மட்டுமே தென்படுகின்றனர். அவர்கள் இருவரது பாத்திரங்களும் வடிவமைக்கப்பட்ட விதம் அழகோ அழகு.
கூலிப்படையினராக வருபவர்களை வெவ்வேறு குணாதிசயங்கள் உள்ளவர்களாக காட்டியிருப்பது அருமையான உத்தி. அதேபோல, போலீஸ் துறை அதிகாரிகளாக வருபவர்களும் வெகுநேர்த்தியான உடல்மொழியை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
அரசியல்வாதிகளாக வரும் கவிதா பாரதி, இளைய பாண்டி இருவரும் இரண்டொரு காட்சிகளில் வந்தாலும் ரசிக்கும் வகையில் நடித்திருக்கின்றனர்.
கோகுல் பினோயின் ஒளிப்பதிவு இயல்பாக நாமே காருக்குள் இருக்கும் உணர்வைத் தருகிறது. ராமரின் படத்தொகுப்பு முன்பாதி முழுக்க அசத்தல் ரகம்.
பின்பாதியில் இடைவெளியே இல்லாமல் காட்சிக்கு காட்சி நிரம்பித் ததும்புகிறது கிப்ரானின் பின்னணி இசை.
படம் முடியும் தருவாயில் ஒலிக்கும் மெலடி காதுகளை நிறைக்கிறது.
ஒரு இயக்குனராக கின்ஸ்லின் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஒரு நடுத்தர பட்ஜெட்டில் சொல்லிக் கொள்ளும்படியான த்ரில்லர் ஆக அமைந்திருக்கிறது ‘டிரைவர் ஜமுனா’.
சில கேள்விகள்!
தொடக்கத்திலேயே கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றின் குணாதிசயங்களையும் புட்டு புட்டு வைத்துவிடுகிறார் இயக்குனர். அதுவே, மொத்த திரைக்கதையின் நகர்வையும் கூர்ந்து கவனிக்க வைக்கிறது.
நிச்சயமாக, கிளைமேக்ஸில் வரும் ‘ட்விஸ்ட்’ ஆச்சர்யம் தரும் ஒன்று. அதேநேரத்தில், அதற்கேற்றவாறு மொத்த திரைக்கதையும் அமைந்திருக்கிறதா என்றால் ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டும்.
சில கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் தவிர்த்திருப்பதையும் குறிப்பிட வேண்டும்.
இசையமைப்பாளர் என்ற போர்வையில் அபிஷேக் குமாரை இத்திரைக்கதையில் பயன்படுத்தியிருக்கத் தேவையே இல்லை. வெறுமனே கிச்சுகிச்சு மூட்டவே அப்பாத்திரம் வந்து போயிருக்கிறது.
ஒரு பெண் மூன்று குற்றவாளிகளுடன் பயணிக்கிறார் எனும்போது, அப்பாத்திரத்தைவிட பார்வையாளர்களுக்கு கொஞ்சம் பதைபதைப்பு இருக்கும். அதற்கு மதிப்பளிக்கத் தவறியிருக்கிறார் இயக்குனர்.
கதையில் காட்டப்படும் அனைத்து பாத்திரங்களையும் ஏதோ ஒரு இழையில் திரைக்கதை இணைத்தாலும், அவற்றை அவ்வளவு அவசர அவசரமாகச் சொல்லியிருக்க வேண்டியதில்லை.
இப்படத்தின் மையமே ‘கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான்’ என்பதுதான்.
அதனை நியாயப்படுத்த கூலிப்படையினர் குறித்த சித்திரம் இன்னும் முழுமையாக இருந்திருக்கலாம்.
இது போன்ற வருத்தங்களை, சில சந்தேகங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டால், ஒரு நல்ல ‘த்ரில்லர்’ பார்த்த திருப்தியை ‘டிரைவர் ஜமுனா’ தருவது நிச்சயம்.
வழக்கமான தமிழ் சினிமா பார்முலாவில் இருந்து விலகியிருக்கும் படங்களைக் காண விரும்புபவர்களும் இதனை தாராளமாகப் பார்க்கலாம்!
– உதய் பாடகலிங்கம்