ராங்கி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் திரிஷா
லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் எம். சரவணன் இயக்கத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் ‘ராங்கி’.
இந்தத் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இசையமைப்பாளர் சி. சத்யா, ’எங்கேயும் எப்போதும்’ படத்தில் மாசமா, ஆறு மாசமா பாடலுக்கு முதலில் ட்யூன் கேட்டார் சரவணன்.
ஆனால், நான் பாடல் வரிகளுக்கு ஏற்ப இசையமைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி இருந்தேன். அது நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் நன்றாகவே வந்தது.
பாடல் வரிகளுக்காக நா. முத்துக்குமாரிடம் போனபோது, இதுவே நன்றாக இருக்கிறதே எதற்காக புது வரிகள் என்று சொன்னபோதுதான் தன் வரிகள் மீதே சரவணனுக்கு நம்பிக்கை வந்தது.
அதனால், எப்போது நான் பாடலுக்கு இசையமைத்தாலும் இயக்குநரை டம்மியாக வரிகள் எழுத வைப்பேன்.
அப்படிதான் ‘பனித்துளி’ பாடலையும் எழுத வைத்து பின்பு கபிலன் சார் எழுதினார்.
இந்தப் படத்தைப் பொருத்தவரைக்கும் எனக்கு நிஜமாகவே சவாலான ஒன்று.
இசையில் படத்திற்காக வழக்கமாக ஒன்று செய்வது என்பதைத் தாண்டி, படத்தின் திரைக்கதைதான் இன்னும் சிறப்பான இசையை கொண்டு வரும்.
அந்த வகையில், இந்த கதையில் பல புது முயற்சிகள் நான் செய்து பார்க்க முடிந்தது. அரேபியாவில் இருந்து இரண்டு இசைக்கலைஞர்கள் வந்து வாசித்து இருக்கிறார்கள். அந்த அரபி பாடல் படத்தின் க்ளைமாக்ஸில் வரும்.
நடிகை த்ரிஷா பேசும்போது, “ஒரு படத்தில் நடிகையாக என்னுடைய வேலையை நான் செய்து முடித்து விடுவேன். ஆனால் அந்த படத்தின் இசை, படத்தொகுப்பு இதெல்லாம் தான் எந்த ஒரு படத்தையும் இன்னும் மேம்படுத்த உதவும்.
போன வாரம் தான் முழு படத்தையும் பார்த்தேன்.
இசை, படத்தொகுப்பு என அனைத்து பணிகளும் சிறப்பாக வந்து ஒரு நம்பிக்கை கொடுத்தது.
இதற்கு மேல் இந்த படத்தை பார்வையாளர்கள் தான் பார்த்து எப்படி இருக்கிறது என்று முடிவு செய்ய வேண்டும்.
இந்தப் படத்தில் சண்டைக் காட்சிகளை பொறுத்தவரை சூப்பர் வுமன் படம் அளவிற்கு இல்லை.
மிக இயல்பாக அந்த சூழ்நிலைக்கு என்ன தேவையோ அது மட்டும் தான் கொடுத்திருப்பேன்.
உஸ்பெகிஸ்தானில் முதல் முறையாக ஒரு படத்தின் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். மிகவும் சவாலான விஷயம் அது.
இதுவே யூரோப், அமெரிக்கா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்துவது என்பது மிகவும் எளிது. ஏனென்றால் அங்கு இதற்கு முன்பே நிறைய படங்களின் படப்பிடிப்பு நடந்ததும் ஒரு காரணம்.
ஆனால், உஸ்பெகிஸ்தானில் எங்கள் மொழி அவர்களுக்கு புரியவில்லை, அவர்களது மொழி எங்களுக்கு புரியவில்லை.
மேலும் அங்கு நாளே கொஞ்சம் மெதுவாக தான் தொடங்கும். மிலிட்டரியை அடிப்படையாகக் கொண்ட படம் என்பதால் அது சார்ந்த எக்யூப்மென்ட்ஸ் எல்லாம் உண்மையாக வேண்டும் என்று சரவணன் எதிர்பார்த்தார்.
அதையெல்லாம் உஸ்பெகிஸ்தானில் இருந்த மிலிட்டரி தான் எங்களுக்கு கொண்டுவந்து கொடுத்தது.
நானும் உஸ்பெகிஸ்தானுக்கு செல்வது இதுதான் முதல்முறை. அந்த ஊரின் அழகை எந்த ஒரு சமரசமும் இல்லாமல் சக்தி சார் படத்தில் அழகாக கொடுத்துள்ளார்.
மொத்த படக் குழுவுக்கும் நன்றி. என்னதான் கதாநாயகியை மையப்படுத்திய படம் என்று சொன்னாலும் அந்த படக்குழு சரியாக இல்லை என்றால் படம் ஓகேவா தான் வரும்.
ஆனால் இந்த படம் பொருத்தவரைக்கும் எல்லாமே மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது.
வருகிற டிசம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாக இருக்கிறது.
ஆடியன்ஸ் நீங்கள் பார்த்துவிட்டு படம் எப்படி இருக்கிறது என்பதை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
இந்த வருடம் எனக்கு மிகவும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. குறிப்பாக கடந்த சில மாதங்கள் மகிழ்ச்சியாகவே இருந்தேன். உங்களுக்கும் இனிவரும் நாட்கள் அப்படியாக இருக்க என்னுடைய வாழ்த்துகள்” என்றார்.