மத்திய அரசு எச்சரிக்கை
சீனா, தென் கொரியா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதையடுத்து, நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவுக்கு வரும் சா்வதேச விமானப் பயணிகளில் 2 சதவீதத்தினரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டது.
அதோடு சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங், பாங்காங் மற்றும் சிங்கப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் சா்வதேச பயணிகளுக்கு ‘ஏா் சுவிதா’ விண்ணப்பத்தை நிரப்புவதும், 72 மணி நேரத்துக்கு முன்பாக கொரோனா பரிசோதனை மேற்கொள்வதும் அடுத்த வாரம் முதல் கட்டாயமாக்கப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே கொரோனா குறித்து விளக்கமளித்துள்ள ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா,
“கடந்த இரண்டு நாட்களில் 6,000 சா்வதேச விமானப் பயணிகளில் 39 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தொற்றுப் பரவல்கள் அதிகரிக்கும்போது அவற்றை எதிர்கொள்ளும் வகையில் நாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்து வருகிறது” என்றுக் கூறினார்.