கதவைத் திறக்கும் கவிதைகள்!

கவிஞர் கரிகாலனின் கவிதை குறிப்புகள்: 

சென்னைக்கு வந்த நினைவுகளை ஒரு கவிதை நூலுடன் இணைத்து சுவையாக எழுதியிருக்கிறார் கவிஞர் கரிகாலன். அந்த எழுத்தைப் படித்துப் பாருங்கள்…

நேற்று லார்க்கை பார்க்கப்போயிருந்தேன். எனது கிரின்ஞ் தொகுப்பை செப்பனிடும் பணி. வேலை முடிந்தது. வேரல் கொண்டு வந்துள்ள தொகுப்புகள் சிலவற்றை எடுத்துக்காட்டினார்.

அவற்றுள் ஒன்று ஜூடாஸ் மரம். புரட்டி ஆங்காங்கே சிலவரிகள் படித்துப் பார்த்தேன். ‘மலர்விழி நல்லா எழுதுறாங்க அண்ணா!’ – பாராட்டினார் லார்க் பாஸ்கரன்.

மலர்விழி அழைத்தார். சில சமயங்களில் இப்படியெல்லாம் நடக்கிறது.

‘நான் மலர்விழி. ஜூடாஸ் மரம் தொகுப்பு வெளியிட்டிருக்கிறேன். பூவிதழ் உமேஷிடம் எண் வாங்கினேன். உங்கள் அபிப்ராயம் வேண்டும். நூல் அனுப்புகிறேன்!’ – மென்மையான தொனியில் கேட்டார்.

‘நிச்சயமாக…, நாளை புவனேஷ்வர் போகிறேன். ஜனவரி 1 வாக்கில்தான் ஊர் திரும்ப முடியும். பெங்களூரு விமான நிலையத்தில் 5 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். Pdf அனுப்புங்க, படிக்கிறேன்!’ அவரது இயக்கத்தை உற்சாகப்படுத்த விரும்பினேன்.

மதியம் பெங்களூரு விமானநிலையம்.

மலர்விழி கவிதைகளுக்கு நேரம் இருந்தது. கிறிஸ்துமஸ் தினம். ஜூடாஸ் மரம். Cercis siliquastrumஐ தான் ஜூடாஸ் மரம் என்கிறார்கள்.

ஏசுநாதரை காட்டிக்கொடுத்த யூதாஸ், இந்த மரத்தில்தான் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறுகிறார்கள். இலைகளைவிடவும் பூக்களை அதிகமாகக் கொண்ட மரம். எரியும் அழகில் தேனீக்களை ஈர்க்கும் மரம்.

இதன் தேன் தேனீக்களை கொல்லுமாம். முத்தம் கொடுத்து யூதாஸால் துரோகம் செய்ய முடிகிறபோது, பூக்களால் தேனீக்களைக் கொல்ல முடியாதா?

மலர்விழி என்ன சொல்ல வருகிறார்?

பெரும்பாலும் கவிதைகளை நான் புரிந்துகொள்ள முயற்சி செய்வதில்லை. அனுபவிக்கத் தொடங்கிவிடுவேன்.

மலர்விழியின் சின்னச் சின்ன கற்பனைகளில் மில்லியன் கணக்கான எனது யாதார்த்தங்கள் மறந்துபோயின.

‘மலைமுகட்டின் உச்சியில்
தெரிகிறது ஒளி
ஒரு கண்ணை அருகிலும்
ஒரு கண்ணை தூரத்திலும்
வைத்து நடக்கிறேன்’

கவிதை வாசிப்பது குளிப்பதற்கு முன் ஆடைகளை அவிழ்ப்பது போன்றது. உங்கள் உடைகள் ஈரமாகிவிடும் என்ற பயத்தில் நீங்கள் ஆடைகளை அவிழ்க்கவில்லை.
தண்ணீர் உங்களைத் தொட வேண்டும் என்பதற்காகவே நீங்கள் ஆடைகளை அவிழ்த்து விடுகிறீர்கள் என்பார் கமந்த் கோஜூரி.

கவிதை வாசிக்கும்போது நம் சிந்தனைகளில் அணிவிக்கப் பட்டிருக்கும் உடுப்புகளை அவிழ்த்துவிட வேண்டும்.

ஒரு கண்ணை அருகிலும் ஒரு கண்ணை தூரத்திலும் வைத்து நடக்கும் மனிதர்கள் நம் அருகே இருக்கிறார்கள்.

3 அயர்ன் என்றொரு படம். கிம் கி டெக்கின் படைப்பு. இந்த வாழ்வு உண்மையும் கனவுமாக இருக்கிற எனும் கிம்கிடக்கின் வாசகத்தோடு முடியும் படம். இத்தொகுப்பும் அப்படிதான். உண்மையாலும் கனவாலும் நிரம்பிக்கிடக்கிறது.

மலர் விழியின் கவிதைகள், உலகின் மறைக்கப்பட்ட அழகை மூடியிருக்கும் திரைகளை திடீரென விலக்குகிறது. பழக்கமானவற்றை, அவை நமக்கு அறிமுகமில்லாததுபோல் ஆக்கிவிடுகின்றன இக்கவிதைகள்.

ஒரு கவிதையில் தொடர்பே இல்லாததுபோல் பலவற்றைக் காட்சிப்படுத்தும் மலர்விழி சடாரென ஒரு சரடில் எல்லாவற்றையும் இணைத்துக் காட்டுகிறார். நிறைய இவரைப்பற்றி பேசலாம். பேசுவதைவிட இவரது கவிதைகளை வாசிப்பதே நல்லது என்கிறார்.

You might also like