காவல் நிலையங்களை கணிவோடு அணுகும் நிலை வர வேண்டும்!

குடியரசுத் தலைவர் வேண்டுகோள்

தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஐதராபாதில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய அகாடமியில், காவல்பணி பயிற்சி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாப்பதில் காவல்துறை முக்கிய பங்காற்றி வருவதாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “தேசத்தின் உள்நாட்டு பாதுகாப்பை நிலைநாட்டும் பணியின்போது ஆயிரக்கணக்கான காவல் துறையினர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.

காவல்துறை மக்களின் நம்பிக்கையை பெறும் போது அரசின் மீதான நன்மதிப்பு அதிகரிக்கும். கடைநிலையில் உள்ள காவலர் வரை அனைவரும் பொறுப்புணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் செயலாற்ற வேண்டும்.

ஐ.பி.எஸ் பயிற்சி அதிகாரிகள் பணி துவங்கும் போதிலிருந்தே தலைமைப் பண்புடன் திகழ வேண்டும்.

ஒருமைப்பாடு, பாரபட்சமற்ற தன்மை, துணிவு, திறமை மற்றும் உணர்திறன் ஆகிய 5 அடிப்படை பண்புகளை மனதில் வைத்து காவல் துறை அதிகாரிகள் தங்களது திறனை நிரூபிக்க வேண்டும்.

தொலைதூர பகுதிகளில் வசிக்கும் ஏழை கிராமவாசிகளை உள்ளூர் காவல் நிலையங்கள் கருணையுடன் அணுகுவதை காவல் துறை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும்.

குற்றவாளிகள் காவல் துறையினரைப் பார்த்து அச்சம் அடைய வேண்டும், அதே நேரம் சாதாரண மனிதர்கள் காவல் துறையினரை நண்பராகவும் தங்களை காப்பாற்றுபவராகவும் கருத வேண்டும்.

அந்த வகையில் காவலர்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும். பாதிக்கப்படும் பெண்களுக்கு பெண் காவல் அதிகாரிகள் அதிக அளவில் உதவ வேண்டும்” என வலியுறுத்தினார்.

You might also like