எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் பெற்ற பெரு வெற்றியைத் தொடர்ந்து எம்ஜியார் பிக்சர்ஸ்ஸாரின் அடுத்த தயாரிப்பாக, பேராசிரியர் கல்கியின் மகோன்னத சரித்திரக் காவியமான பொன்னியின் செல்வனைப் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப் போவதாகச் செய்திகள் வெளிவந்தன.
பொன்னியின் செல்வனில், பேராசிரியர் கல்கியின் கற்பனையில் உருவாக்கப்பட்ட வந்தியத் தேவன் கதையின் உயிர்நாடியான பாத்திரம். அவன் அழகிலே மன்மதன் – ஆற்றலிலே அர்ச்சுனன் – வீரத்திலே ராமன் – விவேகத்திலே விக்கிரமாதித்தன் – காதலிலே காமன் – இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்திய மண்ணின் புராண, இதிகாச, காவிய நாயகர்களின் அருங்குணங்களையெல்லாம் வடித்தெடுத்து அற்புதமானதொரு பாத்திரமாக அவனைப் படைத்திருந்தார் கல்கி.
அந்த வந்தியத்தேவன் பாத்திரமேற்று வெண்திரையில் வளைய வர விரும்பினார் எம்.ஜி.ஆர். அவருக்குத் திரையில் ஜோடியாக வைஜயந்திமாலா., சரோஜாதேவி இருவரது பெயர்களும் அடிபட்டன.
எம்.ஜி.ஆர். ஜெமினி கணேசனோடு இணைந்து நடிக்கப்போகும் முதல் படம் இது என்றும் அறிவிக்கப்பட்டது. பொன்னியின் செல்வன் அருள்மொழி வர்மனாக ஜெமினி கணேசன், குந்தவியாக வைஜயந்திமாலா,
நந்தினியாக எம்.என். ராஜம், மணிமேகலையாக சரோஜாதேவி, வானதியாக பத்மினி, ஆழ்வார்க்கடியானாக டி.எஸ். பாலையா, சுந்தர சோழராக வி. நாகையா, சின்னப் பழவேட்டரையராக எம்.என். நம்பியார்,
ஆதித்த கரிகாலனாக ஓ.ஏ.கே. தேவர் – இப்படியாக அன்றைய தமிழ் சினிமாவின் பெரியதொரு நட்சத்திரக் கூட்டமே இப்படத்தில் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன.
கதைக்கான உரிமை பெறப்பட்டு, திரைக்கதை எழுதும் வேலைகளும், ஆரம்ப ஆயத்தங்களும் நடைபெறுவதாக சினிமாப் பத்திரிகைகள் எழுதின.
இத்தனை ஆரவாரங்களுக்கும், எதிர்பார்ப்புக்களுக்கும் பின்னர் இக்கதையைப் படமாக்கும் திட்டம் கைவிடப்பட்டது.
இதற்கான சரியான காரணம் தெரியாத போதிலும், வதந்திகளாகப் பல காரணங்கள் முன் வைக்கப்பட்டன.
பொன்னியின் செல்வன் 34 முக்கியமான கதாபாத்திரங்களைக் கொண்ட மிக மிக நீண்ட கதை. இந்தக் கதையை மூன்று மணி நேரத்திற்குள் திரையில் சொல்ல முடியாது என்பது முக்கிய காரணம்.
மேலும், தமிழ்நாட்டு வாசகர்கள் இக்கதையில் வரும் சம்பவங்களுக்கும், பாத்திரங்களுக்கும் தங்கள் கற்பனையில் உருவங்கள் கொடுத்திருப்பார்கள் என்றும் – அவர்களது கற்பனைக்கேற்ப திரைப்படம் அமையாவிட்டால், படம் வெற்றி பெறாது என்பதும் இன்னொரு காரணமாக முன் வைக்கப்பட்டது.
இதற்கு உதாரணமாக கல்கி கதையெழுதிய பார்த்திபன் கனவு திரைப்படம் கூறப்பட்டது.
வெற்றிப் படமான வஞ்சிக்கோட்டை வாலிபனில் நடித்த ஜெமினி கணேசன் – வைஜயந்திமாலா ஜோடியே பார்த்திபன் கனவில் நடித்திருந்தபோதிலும், வாலிபனுக்குக் கிடைத்த வெற்றியில் பாதி பார்த்திபன் கூட பார்த்திபன் கனவுக்குக் கிடைக்கவில்லை.
மணியத்தின் பிரம்மாண்டமான கலையமைப்பும், வேதாவின் இனிமையான இசையும், விந்தனின் வசனங்களும், குமாரி கமலாவின் பிரமாதமான நடனங்களும் இருந்தும் கூட பார்த்திபன் கனவு எடுபடவில்லை.
இதற்கு முக்கிய காரணம் திரைக்கதையமைப்பில் இடம்பெற்ற குளறுபடிகளும், நடிகர்களின் தேர்வுமேயாகும்.
பார்த்திபன் கனவு கதையில் வரும் சிவனடியாரின் பாத்திரத்தை மிகவும் சஸ்பென்ஸாகக் கொண்டு போயிருந்தார் கல்கி.
கதையின் இறுதியில் சிவனடியார் தனது ஜடாமுடியைக் களைந்தபோது அங்கே நரசிம்ம பல்லவரைக் கண்ட சபையினர்
‘ஆஹா’ என்று ஆச்சரியப்படுவது போன்று சினிமா ரசிகர்களால் ஆச்சரியப்படமுடியவில்லை.
சிவனடியாரின் ஜடாமுடிக்குள் ஒளிந்திருக்கும் எஸ்.வி. ரங்காராவைச் சிறுபிள்ளை கூட இனம் கண்டு கொள்வதால் இயக்குநரால் எந்தவிதமான திகிலையும் தரமுடியவில்லை. பார்த்திபன் கனவு திரைப்படத்தின் முக்கியமான தவறு இதுதான்.
இதன் பின்னர் எம்.ஜி.ஆர். காஞ்சித் தலைவன், அரச கட்டளை, அடிமைப் பெண், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகிய அரச படங்களில் நடித்த போதிலும் பொன்னியின் செல்வனைப் பற்றிப் பிரஸ்தாபிக்கவில்லை. அந்த ஆசை அவரது ஆழ்மனதில் உறங்கிப் போயிருந்தது.
இப்போது ஏறக்குறைய அரை நூற்றாண்டுகளின் பின்னர் அமரர் எம்.ஜி.ஆர். கண்ட காவியக் கனவை நனவாக்கும் விதமாக இரண்டு பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பொன்னியின் செல்வனை சின்னத் திரைக்காக ஒரே சமயத்தில் ‘மெகா சீரியலாக’த் தயாரித்து வருகின்றன.
சிங்கப்பூரைச் சேர்ந்த ஹெப்ரான் இமேஜ் மேக்கர்ஸ் சென்னையைச் சேர்ந்த பாக்ஸ் ஆபீஸ் டி.வி. நெட் ஓர்க்குடன் இணைக்கும் தயாரிக்கும் பொன்னியின் செல்வனுக்கு அரவிந்தராஜ் இயக்குநராகப் பணியாற்றுகிறார்.
வெள்ளித்திரையில் ‘ஊமை விழிகள்’ ‘உழவர் மகன்’ போன்ற திரைப்படங்களையும், சின்னத் திரையில் ‘திருவள்ளுவர்’ ‘திருவிளையாடல்’ போன்ற வரலாற்றுக் காவியங்களையும் சிறப்பாக இயக்குவித்த அனுபவம் அரவிந்தராஜுக்கு உண்டு.
கடந்த இருபது ஆண்டுகளாக சினிமாவில் பணியாற்றிவரும் தலைசிறந்த ஆர்ட் டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி அரவிந்தராஜ் யூனிட்டில் பணிபுரிகிறார். நடிகர்களின் தேர்வு மர்மமாக இருக்கிறது. ஹாலிவுட்டில் பயிற்சி பெற்ற ஓர் இளைஞர் வந்தியத்தேவன் பாத்திரத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.
கோல்ட் டெலிவிஷன் நெட்வார்க் தயாரிக்கும் பொன்னியின் செல்வனை பழம்பெரும் டைரக்டர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கி வருகிறார்.
“இக் கதையை இன்னொரு நிறுவனமும் எடுப்பது பற்றி நான் கவலைப்படவில்லை; போட்டியிருந்தால் தான் என் தயாரிப்பில் ஆழமும், அழகும் இருக்கும்.” என்கிறார் கே.எஸ்.ஜி.
எம்.ஜி.ஆர் படங்கள் பலவற்றை உருவாக்குவதில் உறுதுணையாக இருந்த மா. லட்சுமணன் கே.எஸ். ஜி படத்தின் திரைக்கதை வசனத்தை உருவாக்கியிருக்கிறார். கலை வித்தகர் தோட்டாதரணி ஆர்ட் டைரக்ஷனையும், பிரபல ஓவியர் மணியம் செல்வன் ஆடை அலங்காரங்களையும் (காஸ்டியூம்) கவனித்துக் கொள்கிறார்கள்.
கோடிக் கணக்கான செலவில் தயாராகி வரும் இந்த மெகா சீரியல்கள் தமிழ்நாட்டு ரசிகர்களுக்குக்’ ‘கொள்ளை விருந்தாக’ அமையப் போகிறது என்று நம்பப்பட்டாலும் உண்மையிலேயே ஒன்றாவது வெளிவகுமா என்பது சந்தேகத்திற்குரிய விஷயம் ஆகும்!
அமர காவியமான பொன்னியின் செல்வன் சின்னத்திரையிலும் அமரத்துவம் அடையவேண்டும் என்ற ஆசிகள் அமரரான எம்.ஜி.ஆரிடமிருந்து நிச்சயம் கிடைக்கும் என்று நம்புவோம்!
10.06.2002 இக்கட்டுரை எழுதி மூன்று மாதங்களின் பின்பு இந்த இரு நிறுவனங்களும் ஆரம்ப ஆயத்தங்களைச் செய்த பின்னர் ‘பொன்னியின் செல்வன்’ தயாரிப்பை நிறுத்திவிட்டதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
– 2002-ல் வெளி வந்த டாக்டர்.எஸ். தியாகராஜா நூலில் இருந்து.