அழகு என்பது பெரும்பாலும் முகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
ஃபேசியல், மேக்கப் என்று ஆரம்பித்து தொடர்ந்து கொண்டே இருக்கும். இது முகத்தில் இருக்கும் அழுக்கு மற்றும் தோளின் நிறத்தை சீராகப் பாதுகாத்து முகத்தை பளிச்சென்று மாற்றுகிறது.
ஆனால், நாம் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கை, கால்களுக்கு கொடுக்கப்பதில்லை. உண்மையில் அழகு மற்றும் ஆரோக்கியம் என்பது கை, கால் சுத்தம் மற்றும் நகங்களில் தான் இருக்கிறது.
நம் பாதங்களை பெரும்பாலோனோர் கவனிக்க மறந்து விடுகிறோம்.
கையில் உள்ள நகங்களை பராமரிக்க தவறிவிடுகிறோம்.
இதன் மூலம் பெரும்பாலான உடல் பாதைகளுக்கு ஆளாகிறோம். சரி… அதில் இருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும். பெடிக்யூர் மற்றும் மெனிக்யூர் எப்படி பயனளிக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
மெனிகியூர்:
கையில் இருக்கும் நகங்கள் மற்றும் கைகளை சுத்தம் செய்யும் முறையாகும். அழகு நிலையங்களுக்கு சென்று அதிக பணம் செலவாகாமல் வீட்டில் இருந்தபடியே எளிமையாக எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
முதலில் கை விரல் நகங்களில் இருக்கும் நெயில் பாலிஷ் இருந்தால் ரிமூவர் கொண்டு நீக்கிவிடவேண்டும். நகங்கள், கை இடுக்கில் தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் கொடுக்க வேண்டும்.
அப்படியே 10 நிமிடம் விட்டுவிடுங்கள். வாய் அகண்ட பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி அதில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா, ஒரு ஸ்பூன் ஷாம்பு மற்றும் ஒரு கைப்பிடியளவு ரோஜா இதழ்கள் சேர்த்து கலந்து விட வேண்டும்.
இதில் உங்கள் இரண்டு கைகளையும் நனைத்து அப்படியே 10 நிமிடம் ஊறவிடவும். அதன் பின் ஊறியதும் கை விரல் நகங்களை பிரஷ் கொண்டு சுத்தம் செய்யவும்.
இதனால் கை விரல் நகங்களில் தங்கியிருக்கும் இறந்த செல்கள், அழுக்குகள் நீங்கி விடும். மேலும் மெனிக்யூர் செய்யும்போது ரத்தம் ஓட்டம் சீராகி தசை வலி மற்றும் பதற்றத்தை குறைக்க உதவுகிறது.
இது நகத்தை உடையாமல் பாதுகாத்து, சருமத்தின் தோலின் வறட்சியை நீக்குகிறது.
அடிக்கடி பண்ணும் போது விரலில் இருக்கும் கருமை, நகத்தில் இருக்கும் பழுப்பு நிறம் நீக்கப்பட்டு நகத்திற்கு பளபளப்பை கொடுக்கிறது.
பெடிக்யூர்:
பாதங்களின் பராமரிப்புக்கு பெரும் உதவியாக இருப்பது. வீட்டு வேலை, அலுவலகம் என்று இல்லாமல் ஓய்வு நேரத்தில் செல்போன் ஓரம் கட்டிவிட்டு 20 நிமிடங்கள் ஒதுக்கினால் போதுமானது.
உங்கள் பாதம் வெடிப்பு இல்லாமல், ஆரோக்கியமாகவும், மென்மையாக அழகாகவும் இருக்கும்.
வீட்டிலேயே எளிய முறையில் பெடிக்யூர் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
ஸ்டெப் 1:
முதலில் நகத்தில் உள்ள நெயில் பாலிஷ் ரிமூவர் மூலம் அகற்றிவிடவும். பின் நகத்தை உங்களுக்கு பிடித்த வடிவில் வெட்டிக் கொள்ளுங்கள்.
ஸ்டெப் 2 :
வெதுவெதுப்பான நீரை பாதம் மூழ்கும் அளவுக்கு டப்பில் ஊற்றிக் கொள்ளுங்கள்.
தண்ணீரில் ஒரு ஸ்பூன் குளியல் உப்பு, எலுமிச்சை , ஷாம்பு, மலர் எண்ணெய், ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன், ஆப்பிள் சீடர் வினிகர் சேர்க்கவும்.
கால்களை இந்த தண்ணீரில் 15-20 நிமிடம் அப்படியே ஊறவிடவும்.
ஸ்டெப் 3:
நகத்தின் ஓரங்களில் இருக்கும் அழுக்குகள், இறந்த செல்களை நீக்க வேண்டும். கடைகளில் பெடிக்யூர் கிட் கிடைக்கிறது அதன் டூல்கள் கொண்டு சுத்தம் செய்யவும்.
பாதத்தின் அடியில் உள்ள அழுக்குகளை நீக்குவதற்கு ஃபுட் ஸ்கிரப் பயன்படுத்தி தேய்த்து எடுக்க இறந்த செல்கள் நீங்குவதுடன் பாதம் மிருதுவாக மாறும்.
ஒரு 5 நிமிடம் பாதங்களுக்கு மசாஜ் கொடுத்த பின் சுத்தமான தண்ணீரில் கால்களை கழுவி விடவும். உங்களுக்கு பிடித்த மாய்ஸ்சரைசர் அப்ளை செய்து மீண்டும் ஒரு மசாஜ் கொடுக்கவும்.
இது ரத்த ஓட்டத்தை சீர் செய்து மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. மேலும் பாத சருமத்தை மென்மையாக்கும், ஈரப்பதத்தை கொடுப்பதால் பாத வெடிப்பு வராமல் தடுக்கப்படுகிறது.
நகசொத்தை வராமல் தடுக்கப்படுதல், நோய்த் தொற்றில் இருந்து பாதுகாக்கிறது. மன அழுத்தம் குறைக்கப் படுதல், வறட்சி, பூஞ்சை தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.
நகத்திற்கு பளபளப்பையும் ஆரோக்கியத்தை கொடுக்கிறது. அகத்தின் அழகு நகத்தில் அறிந்து கொள்ள முடியும் என்கிறது மருத்துவம்.
ஆகையால் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கொஞ்சம் கைகள் மற்றும் கால்களுக்கும் கொடுத்து வந்தால் அழகுடன் சேர்த்து ஆரோக்கியம் மேம்படும்.
-யாழினி சோமு