நல்லகண்ணுவின் எளிமை லட்சியங்களால் உருவானவை!

நல்லகண்ணு, அவர் மனைவி ரஞ்சிதம் அம்மா இருவரும் அறிவுபூர்வமான லட்சியத் தம்பதி. ஆசிரியர் தொழில் செய்து, பொருளாதாரச் சுமைகள் அனைத்தையும் ரஞ்சிதம் அம்மாதான் சுமந்துகொண்டிருந்தார்.

ஆசிரியர் பணியில் அடிக்கடி ஊர்விட்டு ஊர் மாற்றிவிடுவார்கள். புதிய ஊர் ஒன்றில், புதிய வீடொன்றில் குடியேறியிருந்த நேரம்.

அந்த வீட்டில் கொல்லைப்புற வழியாகவும் முக்கிய சாலைக்குச் செல்ல முடியும். இரவு நேரம் கழித்து வீடு வந்துசேர்ந்த நல்லகண்ணு, கட்சிப் பணிக்காக முதல் பஸ்ஸில் புறப்படுவதற்காக அவசரமாகக் கொல்லைப்புறத்தின் வழியாக வெளியேறியுள்ளார்.

அப்போது ரஞ்சிதம் அம்மா தன்னிடம் கேட்ட கேள்வி, பெண்களின் பிரச்சினை என்ன என்பதைத் தனக்குப் புரியவைத்ததாகச் சொல்கிறார் நல்லகண்ணு;  “காலை இருள் அகல்வதற்கு முன் நீங்கள் கொல்லைப் புறத்தின் வழியாகச் சென்றால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள்?”

நல்லகண்ணு தன் வாழ்க்கையில் சந்தித்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்று இது. சீர்காழிக்கு அருகில் ஒரு கம்யூனிஸ்ட் தலைவர், தன் மகள் திருமணத்தை அவரது தலைமையில் நடத்தியுள்ளார்.

‘எத்தனையோ தலைவர்கள் இருக்கும்போது, என்னை நீங்கள் அழைத்ததற்குக் காரணம் என்ன?’ என்று நல்லகண்ணு கேட்டபோது, ‘ஒடுக்கப்பட்டவர்களுக்காக நீங்கள் தொடர்ந்து குரல் கொடுத்துவருபவர் என்பதால் அழைத்தேன்’ என்று அந்தத் தலைவர் பதிலளித்துள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து தனியாகப் பிரித்தறிய முடியாதபடி நல்லகண்ணுவின் வாழ்க்கை அமைந்திருந்தது.

தோற்றத்தில் ஆடம்பரமற்று எளியவராகக் காட்சி தரும் நல்லகண்ணு, இன்டர்மீடியட் வரை பயின்றவர். அவரது அண்ணன் சுங்க இலாகாவில் துணை ஆட்சியராகப் பணியாற்றியவர்.

நல்லகண்ணுவின் எளிமை, இல்லாமையால் வந்த எளிமை அல்ல. லட்சியம் தந்த எளிமை. எளிமை சார்ந்த சித்தாந்தம் இல்லாமல் சமூக மாற்றங்கள் நிகழாது என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவர் அவர். இதனால்தான் இன்றைய கார்ப்பரேட் உலகில் ஓர் அதிசய மனிதராக நிற்கிறார்.

-சி.மகேந்திரன், மூத்த தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. 

– நன்றி: இந்து தமிழ் திசை.

You might also like