– முனைவர் குமார் ராஜேந்திரன்
மீள் பதிவு
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும்போது பலரும் எம்.ஜி.ஆர் பெயரைப் பயன்படுத்துகிறார்கள். தேசியக் கட்சியிலிருந்து, துவங்கிய கட்சி, இனித் துவக்கப்பட இருக்கிற கட்சி வரை அதில் அடக்கம்.
காங்கிரஸ் கட்சியினர் அடிக்கடி ‘காமராஜர் ஆட்சி’ என்று பேசுவது மாதிரியே பலரும் ‘எம்.ஜி.ஆர் ஆட்சி’ பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
சட்டென்று ரசாயன மாற்றம் போல நிகழ்ந்துவிடவில்லை எம்.ஜி.ஆரின் அரசியல் களம்.
தொடக்கத்தில் காங்கிரஸ் ஈடுபாட்டுடன் கதராடை அணிந்திருந்த அவர் பிறகு திராவிட இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டு அதன் ஆதரவாளராகிறார்.
அண்ணாவுடன், கலைஞர் கருணாநிதி, பெரியாருடன் பழக்கமாகிறார். திராவிட இயக்கக் கருத்துக்களை தான் நடித்த படங்களில், தடைகளை மீறிக் கொண்டு வந்தார்.
அவர் இயக்கிய ‘நாடோடி மன்னன்’ படத்தில் கழகக் கொடியைக் காட்டினார். நாடகங்களிலும் அதை மையமாக வைத்து நடித்தார். அண்ணாவைத் திரைப்படங்களில் நினைவூட்டிக் கொண்டே இருந்தார். அவருடைய ரசிகர் மன்றங்கள் தமிழகம் தாண்டியும் துடிப்புடன் இருந்தன. அவருடைய திரைப்பட வெளியீடு திருவிழாவைப் போல ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
‘மதுரைவீரன்’ திரைப்படம் துவங்கி அவருடைய படங்களுக்குப் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. கடல் கடந்தும் ரசிகர் கூட்டம் இருந்தது. அவர்கள் தி.மு.க.வைப் பலப்படுத்திய சக்தியாக இருந்தார்கள்.
ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்.
தன்னுடைய இயக்கச் சார்பை வெளிப்படையாகவே காட்டிக் கொண்டார் எம்.ஜி.ஆர். அப்போதைய ஆளும்கட்சியை எதிர்க்க அவர் தயங்கவில்லை.
1957 ஆம் ஆண்டு, காஞ்சிபுரத்தில் வேட்பாளராகப் போட்டியிட்ட அண்ணாவுக்காகப் பிரச்சாரம் செய்தார். 1962 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலிலும் தி.மு.க.வுக்காகப் பிரச்சாரம் செய்தார்.
தி.மு.க.வுக்காக அவர் எவ்வளவோ நிதியளித்திருந்த போதும், “அவர் முகத்தைக் காட்டினால் போதும்” என்று அண்ணா எம்.ஜி.ஆரிடம் விடுத்த வேண்டுகோள் ஒரு எடுத்துக்காட்டு. இவ்வளவுக்கும் காமராஜர், வாக்குகளை வேட்டையாட வரும் வேட்டைக்காரனாக எம்.ஜி.ஆரைச் சித்தரித்துப் பேசியபோதும், தி.மு.க.வின் பிரச்சார பீரங்கியாக இருந்தார் எம்.ஜி.ஆர்.
தி.மு.க.வில் முதலில் மேலவை உறுப்பினராக்கப்பட்டார். பிறகு சிறு சேமிப்புத் துணைத் தலைவராக்கப்பபட்டார். 1967-ல் துப்பாக்கியால் சுடப்பட்ட பிறகு பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
முதல் தேர்தலிலேயே அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான ரகுபதியை விட, 27,674 வாக்குகள் கூடுதலாகப் பெற்று அனைவருடைய கவனத்தையும் தன் பக்கம் திரும்ப வைத்தார் எம்.ஜி.ஆர். தி.மு.க.வுக்கு 179 தொகுதிகள் கிடைத்தன. 41 சதவிகித அளவுக்கு வாக்குகள் கிடைத்தன.
தி.மு.க.வின் பொருளாளராக இருந்தவர் 1971 ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் அதே பரங்கிமலை தொகுதியில் போட்டியிட்டு, 24,632 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தி.மு.க கூட்டணி 184 தொகுதிகளைப் பெற்றது. அந்தக் கூட்டணிக்கு பிரமாண்டமாக 48 சதவிகித வாக்குகள் கிடைத்தன.
மகத்தான அந்த வெற்றிக்கு அடித்தளமாக எம்.ஜி.ஆரின் கடும் உழைப்பு இருந்தாலும், அவர் புறக்கணிப்புக்கு ஆளானார். அவர் தி.மு.க.வினரிடம் கணக்குக் கேட்டார். அது பெரும் சலசலப்பை உருவாக்கி 15.10.1972 அன்று கூடிய தி.மு.க பொதுக்குழு எம்.ஜி.ஆரை தி.மு.க.வை விட்டு நீக்கியதை அங்கீகரித்தது.
அதன்பிறகு நடந்தவை எல்லாம் தி.மு.க.வினர் சற்றும் எதிர்பாராத மாற்றங்கள். எம்.ஜி.ஆர் மன்றங்கள் தி.மு.க சார்பைக் கைவிட்டன. ரசிகர்கள் சுறுசுறுப்பானார்கள்.
1972, அக்டோபர் 17 ஆம் தேதி ரசிகர்களான தொண்டர்கள் ஆதரவுடன் ‘அண்ணா தி.மு.க’ துவங்கப்பட்டது. அண்ணாவின் பெயர் கட்சியிலும், அவருடைய தோற்றம் கட்சிக் கொடியிலும் இணைந்தது.
கட்சி துவங்கிய அடுத்த ஆண்டு மே 21 ஆம் தேதி நடந்த திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் முதலில் களம் கண்டார். அ.தி.மு.க வேட்பாளரை இரட்டை இலைச் சின்னத்துடன் போட்டியிட வைத்து, கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டார். இரண்டு லட்சத்து 60 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று அ.தி.மு.க. வேட்பாளரான மாயத்தேவர் வெற்றி பெற்றார். தி.மு.க மூன்றாம் இடத்திற்குப் போனது.
அ.தி.மு.க.வின் முதல் வெற்றி பிரமிப்புடன் பார்க்கப்பட்டது. அடுத்தடுத்த இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று, புதுச்சேரியில் அ.தி.மு.க வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.
1977 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல் தமிழக அரசியல் திசையை மாற்றியது. அருப்புக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர் 29 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழகத்தின் 16 ஆவது முதல்வர் ஆனார். 130 தொகுதிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க பெற்ற வாக்குச் சதவிகிதம் 30 சதவிகிதத்திற்கு மேல். அதுவே 1980-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 129 தொகுதிகளில் வென்று 38 சதவிகிதத்திற்கு மேல் வாக்குச் சதவிகிதம் உயர்ந்தது. 1984-ல் 133 தொகுதிகளுடன் சட்டமன்றத் தேர்தலில் வாக்குச் சதவிகிதம் 37 சதவிகிதமானது.
மூன்று முறை ஏகோபித்த ஆதரவுடன் பத்தாண்டுகள் தமிழக முதல்வராக நீடித்த எம்.ஜி.ஆர் அந்த ஆதரவைப் பெறுவதற்கு என்ன காரணம்?
உடல்நலம் பாதிக்கப்பட்டுத் தமிழகத்திற்குத் திரும்பிய நிலையிலும், எம்.ஜி.ஆருக்கான பொதுமக்கள் ஆதரவு அலையின் வேகம் குறையவில்லை. மருத்துவமனையில் இருந்தவாறே ஆண்டிப்பட்டித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற அவரால் முடிந்தது.
தமிழகத்தில் உள்ள அடித்தட்டு மக்களின் உணர்வுகளையும், தேவைகளையும் அவரால் உணர்ந்து கொள்ள முடிந்தது. 1982-ல் அவர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டம் அவரை தமிழகம் எங்கும் பேச வைத்தது. பல மாணவர்கள் கூடுதலாகப் படிக்க காரணமாகியது.
மாணவர்களுக்கு இலவச செருப்புகளைக் கொடுப்பது விமர்சிக்கப்பட்டாலும், கிராமப் புற மாணவர்களுக்குத் தான் வெயில் சூடு தெரியும் என்பதால் அதுவும் வரவேற்பைப் பெற்றது. தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் ஏராளமாகத் திறக்கப்பட்டுக் கல்வித்தகுதி பெருகியது. பொருளாதாரத்திலும் முன்னேறியது.
கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக உயர்த்தினார். தெருக்களில் இருந்த சாதிப்பெயர்களை நீக்கினார்.
தமிழுக்காகத் தனிப் பல்கலைக் கழகத்தை தஞ்சையில் உருவாக்கினார். பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தினார். தமிழில் கையெழுத்திடுவதை ஆணையாக்கினார்.
கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்களை நியமித்தார். எளிய மக்கள் சைக்கிளில் ‘டபுள்ஸ்’ செல்வதில் இருந்த தடைகளை நீக்கினார். நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தில் கவனம் செலுத்தினார்.
தென் தமிழகத்தில் பரந்து விரிந்திருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை, நிர்வாக வசதிக்காக விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களாக உருவக்கினார். தமிழகம் முழுக்க ஏராளமான கோயில்களில் குடமுழுக்கும் எம்.ஜி.ஆர் ஆட்சியில் நடந்தேறியது.
பேரிடர்க் காலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று களத்தில் இறங்கி நிவாரணம் வழங்குவதில் அக்கறை காட்டினார். மத்திய அரசு பாராமுகமாக இருந்தபோது, உண்ணாவிரதம் இருந்தார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு நேரடியாக உதவினார். ஈழத்தமிழர் நலனுக்காகக் குரல் கொடுத்தார். அண்டை மாநிலங்களுடன் நதிநீர்ப் பிரச்சினைக்காக முதல்வர்களுடன் பேசினார்.
மதம், சாதி போன்ற பேதங்களுக்கும், எந்த மொழி, இன பேதங்களுக்கும் அவர் இடம் கொடுத்ததில்லை. அதை எப்போதும் விவாதப் பொருளாக்கியதும் இல்லை. தனிப்பட்ட வழிபாட்டைக் கூடப், பொதுப் பிரச்சினையாக அவர் மாற்றிக் குழப்பிக் கொண்டதில்லை.
தமிழ், தமிழ்ப் பண்பாடு, அதன் தொன்மை குறித்த ஈடுபாட்டை வெளிப்படுத்தும் விதத்திலேயே அமைந்திருக்கிறது அவருடைய வாழ்க்கை. அதே சமயம் தேசிய உணர்வைப் புறக்கணித்ததும் இல்லை.
அ.தி.மு.க என்ற கட்சியைத் துவக்கி ஐந்தாண்டுகளில் அதை ஆட்சியில் அமர்த்தியதை மட்டும் கவனிக்கிறவர்கள், அதற்குப் பின்புலமாக எவ்வளவு காலம் இடைவிடாமல் அரசியல், சமூகத் தளத்திலும், திரைப்படத் துறையிலும் கூடப் பங்காற்றியிருக்கிறார் என்பதை நினைவுகூர வேண்டும்.
அப்படி அவரை நினைவுகூர்ந்தால், அரசியல்ரீதியான அவருடைய வளர்ச்சி சட்டென்று நிகழ்ந்த ரசாயன மாற்றம் அல்ல என்பதை உணர்ந்து கொள்ள முடியும். எளிய மக்களின் தேவைகள், உணர்வுகளையும், மாநிலத்திற்கான தேவையையும், அதற்காகப் போராட்டக் குரல் எழுப்ப வேண்டிய நியாயத்தையும் அவருடைய அரசியல் வாழ்வில் பிரதிபலித்தார் எம்.ஜி.ஆர்.
வெறுமனே திரையுலகப் பிரபலத்தை மட்டுமே அவர் நம்பியிருக்கவில்லை. பொதுவாழ்விலும் தன் முகம் எப்படி வெளிப்பட வேண்டும் என்கிற கவனத்தோடும், அதில் இயல்பாக ஒன்றியபடியும் இருந்தார். அவர்களுக்கான குரலைப் போலிருந்தார்.
இன்றைக்கு எம்.ஜி.ஆரைப் பற்றித் தேர்தல் நேரத்தில் பேசும் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் இது தான்.
கட்டுரையாளர்: வழக்கறிஞர் ,முனைவர் குமார் ராஜேந்திரன்.
27.12.2020 அன்று தினத்தந்தியில் வெளிவந்த கட்டுரை
- நன்றி: தினத்தந்தி