பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் சேர்ப்பு!

– மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றம்

தமிழகத்தில் குருவிக்காரர், நரிக்குறவர் உள்ளிட்ட சில சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றனர்.

இதுதொடர்பாக அரசுக்கும், முதல்வருக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

அதில், நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை தமிழகத்தின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி, அதற்கான பல்வேறு காரணங்களையும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செப்டம்பர் 14-ம் தேதி நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நரிக்குறவர், குருவிக்காரர் என அழைக்கப்படுவோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கும், பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மாநிலங்களவையில் நேற்று இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டது. விவாதத்திற்குப் பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து குடியரசுத் தலைவருக்கு மசோதா அனுப்பி வைக்கப்படும். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததும், அரசாணை வெளியிடப்பட்டு இந்தச் சட்டம் அமலுக்கு வரும். 

You might also like