– சோ
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனியிடத்தைப் பிடித்திருக்கிற டைரக்டரான கே.பாலசந்தர் அப்போது சென்னை ஏ.ஜி.எஸ். ஆபீஸில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது “டாக்டர் வேஷதாரி” என்று நான் முதலில் ஒரு நாடகத்தை எழுதி இருந்தேன். அந்த நாடகத்தை கே.பாலசந்தர் இயக்கி அவர் பணியாற்றிய அலுவலகத்தில் மேடையேற்றினார்கள்.
என்னுடைய நண்பன் விச்சு தான் அந்த நாடக ஸ்கிரிப்டை என்னிடமிருந்து வாங்கி, அந்த நாடகத்தில் முக்கிய வேஷத்திலும் நடித்தான். அப்போதிருந்து பாலசந்தரைத் தெரியும்.
பிறகு நாங்கள் விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் குழுவில் நாடகம் போட்டோம். இரண்டு நாடகங்களைப் போட்டபிறகு ‘ஒய் நாட்’, ‘வெயிட் அண்ட் சீ’, ‘வாட் பார்’ என்று மூன்று நாடகங்களை எழுதியிருந்தேன்.
எங்கள் குழுவில் இருந்த அனைவருக்கும் கே.பாலசந்தர் மீது உயர்ந்த அபிப்ராயம் அவர் அவ்வப்போது ஒருமணி நேர நாடகங்களை நடத்தி நல்ல பெயரை வாங்கியிருந்தார்.
எங்கள் குழுவில் கே.பாலசந்தரை டைரக்ட் பண்ணச் சொல்லலாம் என்றார்கள். அவரை அழைத்தோம். அவரும் ஒப்புக்கொண்டார்.
பாலசந்தரைப் பொறுத்தவரை நாடகத்தை டைரக்ட் பண்ண வந்தால் அப்படியொரு கண்டிப்பு. பள்ளிக்கூட வாத்தியார் எல்லாம் தோற்க வேண்டும். பெஞ்ச் மேல் ஏறி நில் என்றுதான் சொல்லவில்லை.
தான் நினைக்கிறபடி நாடகத்தில் காட்சிகள் சரியாக வர வேண்டும் என்று நினைப்பார். மேடையில் அவர் குறிப்பிட்டுச் சொல்லும் இடத்தில்தான் நடிப்பவர்கள் நிற்கவேண்டும். சொன்னபடி நடிக்க வேண்டும்.
அப்போது கே.பாலசந்தர் நாடகத்தின் ஸ்கிரிப்ட்டை எழுதினால் குழுவில் உள்ள மற்றவர்களுடன் உட்கார்ந்து டிஸ்கஸ் பண்ணுவார். பிறகுதான் எழுதுவார். நான் அதற்கு நேர் எதிர்.
யாருடனும் டிஸ்கஸ் பண்ணாமல் ஸ்கிரிப்டை எழுதிக் கொடுத்து விடுவேன். இப்படி நான் எழுதுகிற விதம் பாலசந்தருக்குச் சுத்தமாகப் பிடிக்காது.
“இது பொறுப்பற்ற தனம்” என்பது அவருடைய அபிப்பிராயம்.
ரிகர்சலின்போது நான் இடையிடையே ஏதாவது வசனத்தை ஜோக்காகச் சேர்த்துக் கொண்டிருப்பேன். அதுவும் அவருக்குப் பிடிக்காது.
நாடகத்தின் சீரியஸான தன்மையை அது குலைத்துவிடும் என்று அந்த வசனத்தை கட் பண்ணச் சொல்லி ‘ஒன்ஸ் எகெய்ன்’ என்று கத்தி முதலிலிருந்து பண்ணச் சொல்வார்.
எங்களுக்கெல்லாம் அப்போது பயமூட்டிய அவருடைய வார்த்தை “ஒன்ஸ் எகெய்ன்” தான்.
அதைப்போல ரிகர்சலுக்குச் சரியானபடி குறிப்பிட்ட நேரத்திற்கு அனைவரும் வந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் கடுமையாகக் கோபப்படுவார் பாலசந்தர்.
நடிக்கிறவர்களிடம் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எப்படிப் பண்ணவேண்டும் என்று அவ்வளவு அருமையாகச் சொல்லிக் கொடுப்பார் பாருங்கள். அவரே பிரமாதமாக நடித்துக் காண்பிப்பார்.
அற்புதமான நடிகர் அவர். குணச்சித்திர ரோலா, காமெடியா, சீரியஸ் ரோலா எல்லாமே அவரால் பண்ண முடியும். அப்போது நாடகங்களில் சின்னச்சின்ன ரோல்களில் அவர் நடித்துக் கொண்டிருந்தார்.
“எழுதுகிறவன் நடிக்கக் கூடாது” என்பது அவருடைய கொள்கை. எழுதுகிறவனே நடித்தால், தான் நடிக்கிற ரோலுக்கு மட்டும் நன்றாக எழுத வேண்டிவரும் என்பதால் அதைத் தவிர்த்தார்.
ரிகர்சலின்போது சில ஜோக்குகளை எல்லாம் கட் பண்ணிவிடுவார் பாலசந்தர். சரி என்று நான் ஒப்புக்கொண்டு அதே ஜோக்கை மேடையில் போய்ச்சொல்லி விடுவேன். பாலசந்தருக்குச் சரியான கோபம் வந்துவிடும்.
அப்புறம் குழுவினர் எல்லோரும்போய் “சாரி… பாலு…” என்று அவரைச் சமாதானப்படுத்துவார்கள். திருப்பி அதையே பண்ணுவேன், திரும்பவும் “சாரி” கேட்போம். பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார் பாலசந்தர்.
“இந்தப் பசங்களோட நம்மால் தாக்குப் பிடிக்க முடியாது” என்பதை உணர்ந்து அதை எங்களிடமும் சொல்லிவிட்டார்.
மூன்றாவது நாடகத்தில் “இது தாம்பா லாஸ்ட், உங்களோட நம்மால் முடியாது பா, எல்லோரும் பொறுப்பத்த பசங்களா இருக்கீங்க. இவன் (என்னை காட்டி) என்னடான்னா கட் பண்ணின வசனத்தை எல்லாம் போய் ஸ்டேஜில் சொல்லிட்டிருக்கான்.
ஒவ்வொரு தடவையும் தப்புப் பண்ணிட்டு “சாரி பாலு”ன்னா தீர்ந்து போய்விடுமா?” என்று சொல்லிவிட்டு அடுத்து எங்களுடைய நாடகங்களை டைரக்ட் பண்ண முடியாது என்று சொல்லிவிட்டார்.
ஆனால் அவர் டைரக்ட் பண்ணிய அந்த மூன்று நாடகங்களையும் பார்த்தால் நல்ல முழுமையான பர்ஃபெக்ஷன் உள்ள நாடகங்கள் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். அந்த அளவுக்கு நாடக உருவாக்கத்தில் பர்ஃபெக்ஷனைக் காட்டியவர் பாலசந்தர்.
லைட்டிங், செட், யார் யார் எங்கே நிற்கவேண்டும் என்று எல்லாவற்றிலும் அவருடைய முழுமையான ஈடுபாடு தெரியும். ஏனோ தானோ என்று ஒரு செயலைப் பண்ணுகிற காரியம் அவரிடம் இல்லை. கிட்டத்தட்ட ராணுவ கமாண்டர் மாதிரிதான் இருப்பார்.
குறிப்பிட்ட நாடகத்தில் இதற்கு மேல் அதில் செய்வதற்கு எதுவும் இல்லை என்கிற அளவுக்கு அவர் இயக்கும் நாடகங்கள் இருக்கும்.
ராகினி ரிக் கிரியேஷன்ஸ் என்று பாலசந்தரின் நாடகக் குழுவும் பிறகு இயங்க ஆரம்பித்துவிட்டது. “நாணல், எதிர்நீச்சல், மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம், மெழுகுவர்த்தி என்று பல நாடகங்களை இயக்கினார்.
நாகேஷ், சவுகார் ஜானகி, சுந்தர்ராஜன் என்று பலரும் அவற்றில் நடித்திருக்கிறார்கள். அவருடைய நாடகத்தைப் பார்த்தால் சினிமாவைப் பார்க்கிற மாதிரியே இருக்கும். மேடையில் நடிக்கிறவர்களை நிற்க வைத்து இருப்பதிலேயே ஒருவித அழகு இருக்கும்.
அந்த ஃபெர்பக்ஷனைப் பார்த்துவிட்டு பாலசந்தரிடம் “சினிமாவில் ஸ்ரீதர் மாதிரி நீ வரப் போறே” என்று பலமுறை சொல்லியிருக்கிறேன்.
“போடா… போடா…” என்று அவர் மறுத்துவிடுவார். பிறகு அவர் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனரானதும் “சோ அப்பவே சொல்லி இருக்கான்” என்று ஒரு மேடையில் சொல்லியிருக்கிறார்.
நாடகத்திலோ, சினிமாவிலோ தனக்கு முன்னால் நடிக்கிறவர்களிடம் எதை வரவழைக்க வேண்டும் என்கிற நுணுக்கத்தைத் தெரிந்து வைத்திருப்பார்.
அதை எப்பாடுபட்டாவது அவர்களிடமிருந்து வரவழைக்கவும் செய்வார். காமெடி ரோலில் அவர் நடிக்கும்போது கூட மிகை நடிப்பே இல்லாமல் அழகாகப் பண்ணுவார்.
அவருடைய நாடகங்களில் வசனமும் ரொம்ப ஷார்ப்பாக இருக்கும். அவருடைய படங்களிலும் இந்த அம்சத்தைப் பார்க்கலாம். நீர்குமிழி, பாமா விஜயம் என்று சில படங்களை இயக்கிய பிறகு தமிழ் சினிமாவின் முக்கியமான இடத்திற்குப் போய் விட்டார் பாலசந்தர்.
அவருடைய சில படங்கள் பரீட்சார்த்த முறையில் தோல்வி அடைந்திருக்கின்றன. ஆனால் எதற்கும் பாலசந்தர் கலங்குகிற ஆள் இல்லை.
சினிமாவில் சிலர் தாங்கள் எடுத்த படங்கள் அடுத்தடுத்து வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றால் நேராக எம்.ஜி.ஆர் இடமோ அல்லது சிவாஜி இடமோ சக்சஸ் கொடுத்தாக வேண்டுமே என்று போய்விடுவார்கள்.
பாலசந்தரின் இரண்டு படங்கள் தோல்வி அடைந்தபோதும் அசரவில்லை. மூன்றாவதாக புதுமுகங்களை வைத்து அரங்கேற்றம் படத்தைத் துணிந்து பண்ணினார். அது பெரிய ஹிட். அந்த அளவுக்கு தன் மீது நம்பிக்கை உள்ளவர் அவர். தன்னுடைய தொழில் மீது, திறமை மீது ஆழ்ந்த நம்பிக்கை.
தமிழ் சினிமாவை எடுத்துக்கொண்டால், ஸ்ரீதர் சகாப்தம், பீம்சிங் சகாப்தம் என்று சில சகாப்தங்களைச் சொல்லலாம். அது மாதிரி தனக்கென்று தனி சகாப்தத்தை உருவாக்கியவர் பாலசந்தர். அவருடைய தனித்துவமான முத்திரை அதில் இருக்கும்.
யார் ஹீரோ, ஹீரோயின் என்றெல்லாம் பார்க்காமல் பாலசந்தர் படம், அதனால் பார்க்கலாம்” என்று பலரும் நினைக்கிற அளவுக்கு ஒரு பாப்புலாரிட்டியைத் தன்னுடைய திறமையினால் சம்பாதித்திருக்கிறார்.
சினிமாவில் மட்டுமல்ல, டெலிவிஷன் சீரியலிலும் முன்மாதிரியாக சில சீரியல்களையும் பண்ணியிருக்கிறார் பாலசந்தர். எந்தச் செயலில் ஈடுபட்டாலும் சிரத்தையும் மனம் ஒன்றிப் பண்ணுவதும் ஒரு கிப்ட் அது பாலசந்தருக்கு வாய்த்திருக்கிறது.
நான் நடித்த நாடகங்களை அவர் இயக்கி இருக்கிறார். ஆனால் அவர் இயக்கிய படங்கள் எதிலும் நான் நடித்ததில்லை. அவர் தயாரித்த படங்களில் மற்ற டைரக்டர்களின் இயக்கத்தில் நான் நடித்திருக்கிறேன். எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடித்திருக்கிறேன்.
இருந்தாலும் பாலசந்தரின் படங்களில் நான் நடித்ததில்லையே ஏன் என்று கேட்டால், நான் ஒரு நல்ல நடிகன் இல்லை என்பது அவருடைய தீர்மானமான அபிப்ராயம். அவர் ஒரு நல்ல நண்பர். அது வேறு, ஆனால் அவருக்கு அந்த அபிப்பிராயம் இருந்திருக்கலாம். அதில் தப்பும் இல்லை.
பாலசந்தருடைய நாடகங்களிலோ, சினிமாவிலோ நடித்தவர்களுக்கு அந்தச் சமயத்தில் அவருடைய கண்டிப்பும், எதிர்பார்ப்பும் சிரமமாக கூட இருந்திருக்கும்.
“என்ன இப்படி நம்ம பெண்ட்டை நிமிர்த்துகிறாரே” என்றுகூட மனதில் தோன்றியிருக்கும். ஏனென்றால் அந்த அளவுக்கு தான் எதிர்பார்த்தது கிடைக்கும் வரை பாலசந்தர் நடிப்பவர்களை விட மாட்டார்.
ஆனால் அந்த அனுபவம் சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகளுக்கு எதிர்காலத்தில் நடிப்பதற்கு ரொம்பவும் சுலபமாக இருக்கும். அந்த அளவுக்கு நடிப்பில் ஒரு பாடத்தை பாலசந்தரிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும். அவருடைய படங்களில் நடிப்பது ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் போய் படிப்பதை விட உயர்ந்த விஷயம்.
தாதா சாகிப் பால்கே விருது இவருக்குக் கொடுத்தபோது… மிகப் பொருத்தமான இயக்குனருக்குக் கிடைத்திருக்கிறது என்று எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
எத்தனை நடிகர்களைத் திரைக்குக் கொண்டு வந்திருக்கிற, தமிழ் சினிமாவை நவீனப்படுத்தியிருக்கிற பாலசந்தருக்கு எவ்வளவு விருதுகள் கொடுத்தாலும் தகும். அதற்கான தகுதி அவருக்கு இருக்கிறது.