மிகக்குறைவான பாத்திரங்கள் கொண்ட கதைகள் திரைப்படமாகும்போது, திரைக்கதையைச் செப்பனிடுவதில் மிகுந்த கவனம் வேண்டும். சின்னச் சின்ன தவறுகள் கூட, சில நேரங்களில் பெருங்கப்பலில் விழுந்து பொத்தலாக மாறிவிடும்.
அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா, சத்யராஜ், வினய், அனுபம் கெர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கனெக்ட்’ படம் பார்த்தபோது, கிட்டத்தட்ட அப்படியொரு எண்ணம் மனதில் அலையடித்தது.
அதேநேரத்தில், ஏற்கனவே இதே இயக்குனருடன் இணைந்து ‘மாயா’ என்ற திகில் அனுபவத்தை நயன்தாரா தந்ததும் நினவில் வந்து சென்றது.
அலையற்ற கடல்!
கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் தொடங்குகிறது ‘கனெக்ட்’ படத்தின் கதை.
மருத்துவர் ஜோசப் பினோய் (வினய்), தனது மனைவி சூசன் (நயன் தாரா), மகள் அன்னா (ஹனியா நபீஸா) உடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
சூசனின் தந்தை ஆர்தர் (சத்யராஜ்) வெளியூரில் வசிக்கிறார். லண்டன் சென்று இசை பயில வேண்டும் என்பது அன்னாவின் ஆசை.
ஜோசப் அதற்கு ஒப்புதல் தர, சூசன் எதிர்ப்பு தெரிவிக்க, சரியாக அதே நேரத்தில் கொரோனா ஊரடங்கு தொடங்குகிறது.
இடைவிடாமல் மருத்துவமனையில் கோவிட் -19 நோயாளிகளுக்குச் சேவை செய்துவரும் ஜோசப், ஒருகட்டத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளாகிப் பலியாகிறார்.
சூசனும் அன்னாவும் அவரது சடலத்தைக் கூட காண முடியாத நிலைமைக்கு ஆளாகின்றனர். யாரும் எவரையும் வெளியே சென்று பார்க்க முடியாத நிலையில், அந்த சோகம் அவர்களது வாழ்வையே வெறுமையாக்குகிறது.
ஜோசப்பின் பிரிவை சூசன் தாங்கிக்கொண்டாலும், அன்னாவால் அதைச் சீரணிக்க முடியவில்லை. அதனால், தந்தையின் ஆன்மா உடன் பேசும் முயற்சியில் இறங்குகிறார்.
ஆன்மாவுடன் பேசுபவர்களை ஆன்லைனில் தொடர்பு கொள்கிறார் அன்னா. அப்போது, அவரையும் அறியாமல் ஒரு சதியில் சிக்கிக் கொள்கிறார். அதன் காரணமாக, வீட்டுக்குள் புகும் ஒரு கெட்ட ஆன்மா அன்னாவை படாத பாடு படுத்துகிறது.
கடவுள் நம்பிக்கையில் ஆர்வம் காட்டாத சூசன், அன்னாவின் பாதிப்பைக் கண்டறிந்தாரா, அந்த ஆவியை வீட்டை விட்டு துரத்தினாரா என்று சொல்கிறது ‘கனெக்ட்’.
வழக்கமாக உலகின் எந்த பகுதியில் வெளியான பேய்படமாக இருந்தாலும், அதன் சாராம்சம் இப்படத்திலும் காணலாம்.
பேய் ஆட்டம் ஆரம்பிப்பது முதல் அதனை விரட்ட முற்படுவது வரை அனைத்தும் கோவிட் ஊரடங்கு காலகட்டத்தில் நடக்கிறது என்பது மட்டுமே வித்தியாசம்.
அதே நேரத்தில், வெறுமனே ஒலி வடிவமைப்பு, விஷுவல் எபெக்ட்ஸில் மிரட்டாமல் முடிந்தவரை பேய் குறித்த பயத்தை மனதளவில் கடத்த முயற்சித்திருக்கிறார் இயக்குனர் அஸ்வின் சரவணன்.
அது அலையற்ற கடலில் இறங்கிக் குளிக்கும் அனுபவத்தையே நினைவூட்டுகிறது.
ஏமாற்றாத பேய்!
சில படங்களில் பேயைத் திரையில் காட்டுவதற்குள், நம்மை படாதபாடு படுத்திவிடுவார்கள்.
கேமிரா நகர்வையும் பின்னணி இசையையும் நடிப்புக் கலைஞர்களின் அட்டூழியத்தையும் பொறுக்க முடியாமல், ஒருகட்டத்தில் நாமே பயப்படத் தயாராகிவிடுவோம்.
அப்படியெல்லாம் துன்புறுத்தாமல், அவ்வப்போது ‘சவுண்ட்’ விட்டு, மறைவில் இருந்து எட்டிப் பார்த்து, கொஞ்சம் கொஞ்சமாக நம் பயத்தை அதிகப்படுத்தி திகிலில் ஆழ்த்துகிறது ‘கனெக்ட்’ பட பேய்.
இருளில்தான் பெரும்பாலான பேய் படங்களில் கதை நிகழும்.
இதிலும் அப்படியே. அதையும் மீறி, காட்சிகள் தெள்ளத்தெளிவாக திரையில் தென்படுவது அழகு.
மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரியின் ஒளிப்பதிவும் ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பும் அதற்குப் பெருமளவில் உதவியிருக்கிறது.
‘கனெக்ட்’ என்ற பெயரை வைத்துக்கொண்டு தெளிவற்ற பிம்பங்களைத் திரையில் காட்ட முடியும் என்றபோதும், இயக்குனர் அஸ்வின் சரவணன் அதனைச் செய்ய முற்படவில்லை.
பிருத்வி சந்திரசேகரின் பின்னணி இசை, கொஞ்சமாய் வெளிநாட்டு பேய் படங்கள் பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது. திரையில் நிறைந்திருக்கும் கலையம்சமும் கூட தமிழ் படம் பார்த்த உணர்வை ஏற்படுத்தவில்லை.
கதாபாத்திரங்களின் உயர்நடுத்தர வர்க்க வாழ்க்கைக்கு ஏற்ப வீடுகளின் உள்ளமைப்பை வடிவமைத்திருக்கின்றனர் கலை இயக்குனர்கள் சிவசங்கர் மற்றும் ஸ்ரீராமன்.
படத்தின் மிகப்பெரிய பலம் அற்புதமான நடிப்புக் கலைஞர்களின் பங்களிப்பு.
ஆர்ப்பாட்டமில்லாமல் மிகச்சாதாரணமாக ஒரு நடுத்தர வயதுப் பெண்ணாகத் திரையில் வந்து போயிருக்கிறார் நயன்தாரா. அவரே இதன் தயாரிப்பாளர் என்றபோதும், அந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது.
மிகச்சில நிமிடங்களே திரையில் வந்து போகிறார் வினய் ராய். இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாமே என்று எண்ண வைக்கிறார்.
அனுபம் கெர் என்ற முதிர்ச்சியான நடிகரின் இருப்பு வேண்டும் என்று விரும்பியிருக்கிறார் இயக்குனர். அதனாலேயே அவர் இதில் இடம்பெற்றிருக்கிறார்.
போலவே, சத்யராஜும் மிக இலகுவான பதின்ம வயதுச் சிறுமியின் தாத்தா பாத்திரத்தில் ‘செட்’ ஆகியிருக்கிறார்.
ஹனியா நபீஸாக்கு இது முதல் படம். ஆனாலும், ஆரம்ப காட்சிகளில் அவரிடம் தென்படும் பாவனைகள் பிந்தைய காட்சிகளில் இருளில் மறைக்கப்பட்டிருக்கின்றன.
அது ஏனோ? அதனை ஒரு உத்தியாகவே இயக்குனர் பயன்படுத்தியிருக்கிறாரா என்று தெரியவில்லை.
மற்றபடி இதர பாத்திரங்களில் நடித்தவர்கள் சில நொடிகளே வந்தாலும், முகத்தை குளோஸ்அப்பில் காட்ட வகை செய்கிறது கதையமைப்பு.
என்ன செய்யும் பேய்?
காவ்யா ராம்குமார் உடன் இணைந்து ‘கனெக்ட்’ கதை வசனங்களை எழுதி திரைக்கதை அமைத்திருக்கிறார் அஸ்வின் சரவணன்.
படம் முழுக்க தினம் 1, தினம் 2 என்று தொடங்கி கொரோனா கால ஊரடங்கு வாழ்க்கை காட்டப்படுகிறது.
அதேபோல, பலமுறை பயந்தபோதும் எதுவுமே நடக்கவில்லை என்பது போல நயன்தாரா வீட்டுக்குள் வளைய வருவது அலுப்பூட்டுகிறது; ‘இடைப்பட்ட நேரத்தில் பேய் தோட்டத்தில் புல் பூண்டு பிடுங்கிக் கொண்டிருக்குமா’ என்ற வார்த்தைகள் ரசிகர்கள் தரப்பில் இருந்து எழ வைக்கிறது.
அன்னாவைத் தேடி பேய் வருவது முதலாவது திரைக்கதை திருப்பம் என்றால், அனுபம் கெர் திரையில் தோன்றுவது இரண்டாவது திருப்புமுனை. ஆனால், படம் பார்க்கும்போது அதனை உணர முடியாத அளவுக்கே காட்சிகள் எழுதப்பட்டிருக்கின்றன.
போலவே, பெரிதாக ஆர்ப்பாட்டம் இல்லாத பேய் படம் என்றே முழுப்படமும் எண்ண வைக்கிறது. அதனால் திரைக்கதை கோர்வை பலவீனமாகத் தோற்றமளிக்கிறது.
சமீபத்தில் வெளியான செல்வராகவனின் ‘நானே வருவேன்’ கூட பேய் படம் தான்.
கூடவே, அதுவொரு சைக்கோ த்ரில்லர் ஆகவும் அமைந்தது.
அப்படிப்பட்ட அடுக்குகளோ, இடைச்செருகல் கதையோ, புரட்டிப் போடும் திருப்பமோ இதில் இல்லை.
அதனால் நயன்தாராவுக்காகவும் பேய்ப்படங்களைப் பார்க்கும் ஆர்வத்துக்காகவும் திரையரங்குகளில் குவிபவர்களை ‘என்ன பேய்ப்படம் இது’ என்றே சலிப்புற வைக்கிறது ‘கனெக்ட்’!
– உதய் பாடகலிங்கம்