– நடிகர் ராஜேஷ்
தமிழ் சினிமாவில் தனித்துவம் வாய்ந்த கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ராஜேஷ். தோற்றத்திலும் சரி, பழகுவதிலும் சரி சினிமாக்காரர்களின் வழக்கமான எந்தச் சாயலும் இல்லாதவர்.
கே.பாலசந்தரின் ‘அவள் ஒரு தொடர்கதை’யில் தொடங்கி இன்று வரை கண்ணியமான கதாபாத்திரங்களை மட்டுமே செய்து வருபவர்.
இவர் எம்.ஜி.ஆருடன் இணைந்து பணியாற்றவில்லை என்றாலும் ஒரு நடிகன் என்ற முறையில் 80-களில் அவருடன் பழகி இருக்கிறார்.
புரட்சித் தலைவரின் மிகப்பெரிய ரசிகன் என்ற முறையில் எம்.ஜி.ஆர் குறித்த தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் ராஜேஷ்.
“நான் சொந்த வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்தபோது அந்த வீட்டுக்கு புரட்சித் தலைவர் வந்து எங்களை ஆசிர்வதிக்க வேண்டும் என்று விரும்பினேன். அவரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் தருவதற்காக ராமவரம் தோட்டத்துக்கு என் மனைவியுடன் சென்றிருந்தேன்.
அது ஒரு சனிக்கிழமை காலை. வரவேற்பறையில் காத்திருந்தோம். யார் யாரோ வருகிறார்கள், அவர்களெல்லாம் உள்ளே அழைக்கப்படுகிறார்கள். எனக்கு மட்டும் அழைப்பு வரவே இல்லை. கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் ஓடிவிட்டது.
“என்னங்க… இவ்வளவு நேரம் காக்க வைக்கிறாரு” என்று என் மனைவி கேட்க ஆரம்பித்துவிட்டார்.
“எவ்வளவு பெரிய மனிதரை பார்க்க வந்திருக்கோம். அவருக்காக சாயந்திரம் வரை கூட காத்திருக்கலாம்… இரு” என்று சொன்னேன்.
பத்தரை மணிக்கு மேல் உள்ளே அழைத்தார். அழைப்பிதழை கொடுத்ததும், கண்டிப்பா வர்றேன் என்றார்.
1987 ஜனவரி 16 என் வீட்டு கிரஹப்பிரவேசம். அன்றைக்கு காலையில் இயக்குநர் கே.சுப்பிரமணியனின் மனைவி எஸ்.டி.சுப்புலட்சுமி காலமாகி விட்டார்.
துக்க வீட்டுக்கு சென்றுவிட்டு நல்ல காரியத்துக்கு வரக்கூடாது என்பதால் காலையில் என் வீட்டுக்கு வந்துவிட்டார். பட்டு வேட்டி, பட்டு சட்டையில் வந்தவர், என்னைப் பார்த்ததும் “என்ன… இப்ப திருப்தியா?” என்று கேட்டார்.
அப்போது நான் அடைந்த சந்தோஷம் இருக்கே அதற்கு ஈடு இணையே இல்லை. மற்றவர்களை சந்தோஷப்படுத்தி அதைப் பார்த்து அவர் சந்தோஷமடைவார். அது தான் தலைவர்.
எங்கள் வீட்டு கிரஹப்பிரவேசத்தை முடித்துக்கொண்டு பிறகு தி.நகர் அலுவலகத்துக்கு சென்று பட்டு வேட்டி, பட்டு சட்டையை மாற்றிக் கொண்டு டைரக்டர் கே.சுப்பிரமணியன் வீட்டுக்கு துக்கம் அனுசரிக்கச் சென்றார்.
இந்தச் சம்பவம் நடந்து பல வருடங்கள் கழித்து ஒரு நாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவரை சந்திக்க நேர்ந்தது.
அப்போது அவர் சொன்னார், “உங்க வீட்டு கிரஹப்பிரவேசத்துக்கு பத்திரிகை கொடுக்க வந்தபோது, தலைவர் உங்களை ரொம்ப நேரம் காக்க வச்சார் ஏன் தெரியுமா?”ன்னு கேட்டார்.
“தெரியலியேண்ணே” என்றேன்.
“அப்ப நான் தலைவர்கூட அவர் அறையில தான் இருந்தேன். நீங்கள் வந்தது சனிக்கிழமை. காலையில 8.30 மணிக்கு மேல வந்தீங்க. உங்களை உட்கார வச்சுட்டு மத்தவங்களை சந்திச்சுகிட்டு இருந்தாரு.
நான் கூட “அண்ணே… நடிகர் ராஜேஷ் வந்திருக்காரு”ன்னு சொன்னேன்.
“தெரியும்யா வெயிட் பண்ணட்டும். அவன் சொந்த வீடு கட்டி கிரஹப்பிரவேசத்துக்கு அழைக்க வந்திருக்கான். நல்ல விஷயம். அதனால 9 – 10.30 ராகுகாலம் முடிஞ்சதும் உள்ளே கூப்பிடு” என்றார்.
அப்படின்னா அந்தத் தொழிலதிபர் கொடுத்த கிரஹப்பிரவேச பத்திரிகையை மட்டும் வாங்கினீங்களே தலைவரே என்று கேட்டேன்.
அதற்கு அவர், “அவன் வாழ்ந்து முடிச்சவன்யா, ராஜேஷ் இப்ப தான் வாழ்க்கையைத் தொடங்குறான். அதனால தான் இந்த சென்டிமென்ட்” என்று தலைவர் சொன்னதை, பல வருடங்கள் கழித்து கேள்விப்பட்டபோது கண்கள் கலங்கிடுச்சு எனக்கு.
தன்னைச் சார்ந்தவர்களின் நலனில் எப்போதும் பெரும் அக்கறை கொண்ட மாமனிதராகவே வாழ்ந்தவர் வாத்தியார்” என்று சொன்ன ராஜேஷ், எம்.ஜி.ஆர். மீதிருந்த அதீதமான பற்றால் அவர் வாழ்ந்த வீடு, அவர் மனைவி பிறந்த வீடு என்று பல இடங்களுக்கும் சென்று அங்கு அவருடன் பழகிய பலரையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
“தலைவருடைய இரண்டாவது மனைவி சதானந்தவதி இறந்த பின்னர் ஒரு நாள் அவரது பீரோவை ஒழுங்குபடுத்தி இருக்கிறார் எம்.ஜி.ஆர். உள்ளே 25 பட்டுப் புடவைகள் இருந்துள்ளன. ஒவ்வொரு புடவையிலும் ஒரு 1000 ரூபாய் நோட்டு சொருகி வைக்கப்பட்டு இருந்ததாம்.
1962-ல் ஒரு பவுன் விலையே கிட்டத்தட்ட 120 ரூபாய் தான். அந்த பணத்தையும், பட்டுப் புடவைகளையும், அவர் பயன்படுத்திய பொருட்கள் அத்தனையும் எடுத்துச் சென்று எல்லாவற்றையும் சதானந்தவதி அம்மையாரின் சகோதரியிடம் கொடுத்துவிட்டு வந்தாராம் எம்.ஜி.ஆர்.
ஒரு முறை நான் எம்.ஜி.ஆர். அவர்களின் சொந்த ஊருக்குச் சென்றிருந்தபோது அங்கே சந்தித்த அவரது சகலை விஸ்வநாத பணிக்கர் என்பவர் என்னிடம் சொன்ன தகவல் இது.
அதேபோல முதல் முறை அமெரிக்க சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பிய பின் சதானந்தவதியின் சொந்த ஊருக்கு சென்றிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
அப்போது அங்கே பயங்கர மழை. வழி நெடுகிலும் போடப்பட்டு இருந்த செங்கற்களில் தாவித் தாவி நடந்து சென்று, வீட்டு வாசலில் நின்றிருந்த விஸ்வநாத பணிக்கரை தூக்கி மூன்று சுத்து சுத்தினாராம் எம்.ஜிஆர். என் உடம்புக்கு ஒன்றும் இல்லை. நான் நல்லா தான் இருக்கேன் என்று சொல்லத் தான் அப்படி செய்திருக்கிறார்.
பின்னர் வீட்டுக்குள் சென்றவர், சதானந்தவதி அம்மையாரின் படுக்கை அறைக்குள் சென்று அங்கே இருவரும் பயன்படுத்திய கட்டிலின் மேல் நீண்ட நேரம் மௌனமாகவே அமர்ந்திருந்தாராம்.
அப்போது அவர் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தபடி இருந்துள்ளது” என்றார் ராஜேஷ்.
ஒரு சமயம், எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது அவரை விமர்சித்து ஒரு கூட்டத்தில் பேசி இருக்கிறார் ராஜேஷ். அதன் பின்னர் என்ன நடந்தது என்பதை அவரே விவரிக்கிறார்.
‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘மக்கள் என் பக்கம்’ இந்த ரெண்டு படமுமே அரசியல்வாதிகளைத் தாக்கி எடுக்கப்பட்ட படங்கள். 80-களில் நிறையப் படங்கள் அரசியலையும், அரசியல்வாதிகளையும் தாக்கி எடுக்கப்பட்டது.
அதில் அதிகப் படங்களில் நடித்தவன் நான். அரசியல்வாதிகளைத் தாக்கி எடுக்கப்படும் படங்களை திரையிட்டால் அந்தத் தியேட்டரின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது பி.எச்.பாண்டியன் ஒரு சட்டம் கொண்டு வந்தார்.
அதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஆனந்த் தியேட்டர் அதிபர் உமாபதி, ‘தீபம்’ பார்த்தசாரதி ஆகியோரெல்லாம் சேர்ந்து தி.நகர் வாணி மஹாலில் ஒரு கூட்டம் நடத்தினார்கள்.
அதில் தி.மு.க. ஆதரவு நடிகர்கள் அத்தனை பேரும் கலந்து கொண்டனர். விதிவிலக்காக அதில் நானும் கலந்து கொண்டேன். “இருக்குற யதார்த்தத்தை தான் நாங்கள் படமாக எடுக்கிறோம்” என்று நான் அந்தக் கூட்டத்தில் பேசினேன்.
அதற்கு பிறகு சென்னை ஹைகோர்ட் அருகே உண்ணாவிரதம் நடந்தது. அதில் பேசிய எல்லோரும் மிகக் கடுமையாக எம்.ஜி.ஆர். அவர்களைத் தாக்கிப் பேசினார்கள். நானும் பேசினேன்.
இந்தச் சம்பவத்துக்கு பிறகு நான் அவரை சந்தித்தபோது கூட இதுபற்றி ஒரு வார்த்தை அவர் என்னிடம் கேட்டதில்லை.
இவ்வளவும் நடந்த பிறகு தான் அவர் என் வீட்டு கிரஹப்பிரவேசத்துக்கும், என் தங்கை கல்யாணத்துக்கும் வந்தார். தன்னை தாக்கிப் பேசுபவர்களையும், எதிர்ப்பவர்களையும் கண்டு கொள்ளாமல் மிக சாதாரணமாக அவர்களை கடந்து போய்விடுகிற மனோபாவம் கொண்டவர் புரட்சி தலைவர்.
இவன் அந்தக் கொள்கை உடையவன், அதனால் அந்தக் கூட்டத்தில் பேசினான் என்று தான் அதைப் பார்த்தாரே தவிர, அந்தக் கூட்டங்களை தனிப்பட்ட தாக்குதலாக அவர் பார்க்கவில்லை. அதனாலேயே அவரால் எல்லோரோடும் இயல்பாகப் பழக முடிந்தது.
“1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் தேதி, என் தங்கையின் திருமண பத்திரிகையை கொடுப்பதற்காக ராமாவரம் தோட்டம் சென்றிருந்தேன். அவர் மறைவதற்கு 22 நாட்கள் முன்னர் அவரைச் சந்தித்தேன். அப்போது கைக் குழந்தையான என் மகனை எடுத்துச் சென்று தலைவர் கையில் கொடுத்தேன்.
ஆசையாக அவனை அள்ளிக் கொண்டு அவன் கன்னத்தில் ஆறு முத்தங்கள் கொடுத்தார். 5 முத்தங்கள் வரை அமைதியாக இருந்தவன் 6-வது முத்தத்துக்கு பிறகு சிரிக்க ஆரம்பித்தான்.
அதைப் பார்த்து அவரும் குழந்தையைப் போல சிரித்தார். என் தங்கையின் திருமணத்துக்கு வந்திருந்து ஒரு மணி நேரம் இருந்து வாழ்த்திவிட்டுச் சென்றார்.
எம்.ஜி.ஆர். அவர்களிடம் நான் கண்ட இன்னொரு தனித்துவமான குணம், அவர் யார் யாருக்கெல்லாம் உதவி செய்துள்ளார், என்னென்ன உதவிகள் செய்துள்ளார் என்பது பற்றியெல்லாம் பொது வெளியில் அவர் கடைசி வரை பேசியதே இல்லை.
சின்ன உதவி செஞ்சாலே அதை காலத்துக்கும் சொல்லிக் காட்டுகிறவர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர் வாழ்ந்தார் என்பதை நினைத்தாலே சிலிர்ப்பாக இருக்கிறது” என்ற ராஜேஷின் நினைவுகளில் என்றும் வாழ்கிறார் புரட்சித் தலைவர்.
– அருண் சுவாமிநாதன்