மாரடைப்பைத் தடுக்கும் பச்சை மிளகாய்!

– இத்தாலிய ஆய்வில் கண்டுபிடிப்பு

அறுசுவைகளில் பலருக்கும் பிடிக்காத சுவை காரம். அதிலும் பச்சை மிளகாயின் காரம் என்றால் பலரும் தூரம் ஓடுவார்கள்.

ஆனால் அந்த பச்சை மிளகாய்க்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தைத் தடுக்கும் ஆற்றல் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

வாரத்தில் 4 நாட்கள் பச்சை மிளகாயை உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜியில் (American College of Cardiology) இருந்து வெளியிடப்படும் மருத்துவம் சார்ந்த பத்திரிகையில்தான் இந்த ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

இத்தாலி நாட்டின் 22,811 பேரின் வாழ்க்கை முறையை கடந்த 8 ஆண்டுகளாக ஆய்வு செய்ததில் பச்சை மிளகாயை அதிகம் சாப்பிடாதவர்களை விட அவற்றை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் 23 சதவீதம் குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளதாக இந்த ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.

மேலும் பச்சை மிளகாயை அடிக்கடி சாப்பிடுபவர்கள் இதய நோயால் இறப்பது 40 சதவீதம் குறைந்துள்ளதாகவும், இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இந்த ஆராய்ச்சி மட்டுமல்ல, சீனாவில் 2015-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியிலும் மனிதர்களின் ஆரோக்கியத்துக்கும், பச்சை மிளகாய்க்கும் இடையே தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

2015-ல் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் பச்சை மிளகாயை சாப்பிடுபவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் இதுபற்றிக் கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்தைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆய்வாளரான டாக்டர் இயான் ஜான்சன், “இத்தாலி நாட்டில் நிலவும் சீதோஷண நிலை, அங்குள்ள மக்களின் உணவுப் பழக்கம் மற்றும் ரத்தப் பரிசோதனைகள் ஆகியவற்றை மட்டும் ஆய்வு செய்து இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் மற்ற பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கை மற்றும் உணவு முறைகளைச் சோதித்துப் பார்க்காமல், இந்த ஆய்வு முடிவுகளை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது.

மனிதர்களின் உணவுப் பழக்கத்தில் காரத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற அம்சத்தை மட்டுமே இந்த ஆய்வில் இருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

மற்றபடி இன்னும் பல பகுதிகளில் வாழும் மக்களிடையே தீவிரமான ஆய்வை மேற்கொண்ட பிறகே மிளகாய்களை அதிகளவில் சாப்பிடுவதால், மாரடைப்பை குறைக்க முடியும் என்பதை நிரூபிக்க முடியும்” என்கிறார்.

– பிரேமா நம்பியார்

You might also like