மீண்டும் பரவத் தொடங்கிய கொரோனா!

சில ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் துவங்கிய கொரோனா அலை மறுபடியும் பரவிக் கொண்டிருப்பதை அலட்சியப்படுத்திவிட முடியாது.

அங்கிருந்து தான் உலகம் முழுக்கப் பரவிப் பல நாடுகளில் கோடிக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டார்கள். பல நாட்டு மக்களின் வாழ்வாதாரம் உருக்குலைந்து போனது.

இன்னும் அதன் தாக்கத்திலிருந்து பல நாடுகள் மீளாத நிலையில் தற்போது சீனாவில் மீண்டும் கொரோனா தாக்கமும், உயிர்ப்பலிகளும் அதிகரித்திருக்கின்றன.

மூன்று ஆண்டுகளுக்கு மேல் சீனாவில் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் மறுபடியும் கொரோனாப் பரவல் அதிகரித்தது. அதனால் அரசு மறுபடியும் சில கட்டுப்பாடுகளை விதித்தபோது மக்கள் தரப்பில் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

அதனால் சில தளர்வுகளை சீன அரசு அறிவித்த பிறகு கொரோனாப் பரவல் வேகம் எடுக்கத் தொடங்கியிருக்கிறது. உயிரிழப்புகள் மீண்டும் அதிகரித்திருக்கின்றன.

எந்த அளவுக்கு? அங்குள்ள மயானங்களில் சடலங்களை எரிக்க முடியாத அளவுக்குக் குவிந்து கொண்டிருக்கின்றன சடலங்கள்.

சடலங்களை வீடுகளில் இருந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லக்கூடப் போதுமான ஆட்களும், வாகனங்களும் கிடைக்காத அளவுக்கு நெருக்கடி நிலவுகிறது.

ஆனால் சீன அரசு கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பாதிப்பு குறித்து விபரங்களையும், உயிரிழப்பு குறித்த உண்மையான விபரங்களையும் வெளியிடாமல் மறைக்கிறது என்கிற விமர்சனங்கள் அங்கு வலுத்து வருகின்றன.

பெய்ஜிங் நகரில் ஒரே நாளில் ஆயிரக்கணக்கானவர்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளானாலும், அது குறித்த விபரங்கள் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

மறுபடியும் கொரோனா விஷயத்தில் சந்தேகங்கள் எழக்கூடிய சூழ்நிலை உருவாகியிருப்பது என்னவோ உண்மை.

சரி.. மற்ற நாடுகள் இதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன?
ஏற்கனவே சீனாவிலிருந்து கொரோனா பல நாடுகளுக்குப் பரவிய பிறகே சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

தடுப்பூசிகள் போடப்பட்டன. தற்காப்பு நடவடிக்கைகள் தீவிரம் அடைந்தன. அதையும் மீறிக் கொரோனா பரவியதை நடைமுறையில் பார்த்தோம்.
இப்போது மறு ரவுண்டுக்குத் தயாராகி இருக்கிறது கொரோனா.

மறுபடியும் முன்பு துவங்கிய இடமான சீனாவில் இருந்தே பாதிப்பு துவங்கியிருக்கிற நிலையில், நாம் எல்லோருமே எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது.

கொரோனா மற்ற நாடுகளுக்குப் பரவுவதற்கு முன்பே சில தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.

கடந்த முறை இந்தியாவில் கேரளாவில் இருந்தே முதல் கொரோனா பாதிப்பு துவங்கியது. பிறகு மற்ற மாநிலங்களில் தீவிரமாகியது.

மறுபடியும் முதலில் இருந்தா என்கிற மாதிரி இம்மாதிரியான தருணங்களில் யாரும் யோசிக்க வேண்டியதில்லை.

இந்தியச் சுகாதாரத்துறை எச்சரிக்கையுடன் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நேரம் இது.

மறுபடியும் முகக் கவசம், சமூக இடைவெளி போன்ற வாசகங்களை கேட்க வேண்டிய நிலை வரலாம்.

கொரோனா சீன மயமாகி இருக்கும் போதே, உலகமயமாகி விடாமல் இருக்கும்படி கவனமாக இருப்போம்.

– யூகி

You might also like