சாலை மாற்றங்கள் பற்றி முன்பே சொல்லக் கூடாதா?

ஊர் சுற்றிக்குறிப்புகள் : 

சென்னையில் தற்போது இரு சக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் தவித்துப் போகிறார்கள். சாலைகள் அந்த அளவுக்கு மேடு, பள்ளத்துடனும், சரளைக் கற்களுடனும் காட்சி அளிக்கின்றன.

அண்மையில் இங்கு பெய்த கன மழை சாலைகளின் இந்தச் சீர்கேட்டிற்கு ஒரு காரணம் என்று சொன்னாலும், சென்னை எங்கும் எழைநீர் வாய்க்கால் பணிகளும், மெட்ரோ ரயில் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

நேர் கொண்ட பாதையில் செல்ல முடியாமல் பல பகுதிகளிலும் சுற்றி வளைத்துத் தான் வாகன ஓட்டிகள் செல்ல வேண்டியிருக்கிறது.

மைலாப்பூர் பகுதியில் மெட்ரோ பணிகள் நடப்பதால், ஒரு கி.மீ.க்கு மேல் சுற்றி வளைத்து வர வேண்டியிருக்கிறது.

அங்கங்கே வடமாநிலத் தொழிலாளர்கள் கலர் கலரான வண்ணங்கள் அணிந்த உடைகளுடன் நின்று வாகன ஓட்டிகளைத் திசை மாற்றிச் செல்லப் பணிக்கிறார்கள்.

எத்தனை காலம் இந்தப் பாதை மாற்றம்? எப்போது இந்தப் பணிகள் நிறைவு பெறும்?- என்பதெல்லாம் யாருக்கும் தெரியவில்லை.

கேரளாவின் சில பகுதிகளில் எந்தப்பணிகள் நடக்கிறதோ, அது குறித்த தெளிவான தகவல்கள் அடங்கிய அறிவிப்புப் பலகைகள் அங்கங்கே வைக்கப்பட்டிருக்கும்.

அதில் குறிப்பிட்ட பணிக்கான திட்ட மதிப்பீடு, ஒப்பந்த தாரர்கள் பற்றிய விபரம், பணிக்கான காலக்கெடு உள்ளிட்ட  விபரங்கள் எல்லாமே இருக்கும்.

அதனால் அந்தப் பணிகளினால் தற்காலிகமாகச் சிரமங்களைச் சந்திக்க நேர்கிறவர்களும் குழப்பம் அடைய வாய்ப்பிருக்காது.

இதே பாணியை சென்னை போன்ற பெரு நகரத்தில் மெட்ரோ பணியோ, மழை நீர் வடிகால் பணியோ அது குறித்த தகவல் பலகை அந்தப் பகுதியில் வைக்கப்பட்டால், வீண் குழப்பங்களைத் தவிர்க்க முடியுமே!

You might also like