இயக்குநர் அமீர் விமர்சனம்
தமிழ்த் திரையுலகில் பல படங்கள் இயக்கி முன்னணி இயக்குநராக இருக்கும் அமீர் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
தற்போது ஆதம்பாவா இயக்கி தயாரித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ படத்தில் நாயகனாக நடித்து இருக்கிறார்.
இதனிடையே திரைப்படங்கள் குறித்து பேசிய அமீர், “நான் தமிழ் திரையுலகில் மௌனம் பேசியதே படம் மூலம் அடி எடுத்து வைத்து இருபது வருடம் ஆகிவிட்டது. இது ஒரு சாதனை தான்.
சமீப காலமாக இந்தித் திணிப்பு, வட மாநில மக்களின் வருகை என தமிழ் மொழிக்கு எதிரான அநீதிகள் நடப்பதால் உயிர் தமிழுக்கு என்ற தலைப்பு தற்போது அவசியமாகிறது.
நான் எப்போதும் கதையின் நாயகனாகத்தான் இருப்பேன். சினிமாவுக்கு இயக்குநர்கள்தான் முக்கியம். கதாநாயகர்களால்தான் சினிமா என்ற பிம்பத்தை உடைக்க விரும்புகிறேன். இயக்குநர்களே…. கதையின் நாயகர்களாகவே இருக்க வேண்டும்.
பான் இந்தியா படங்கள் என்கிற கலாசாரம் இப்போது வருவதற்கு முன்பே மணிரத்னத்தின் ரோஜா, பம்பாய் ஆகிய படங்கள் அதை சாதித்து காட்டிவிட்டன.
இந்தியில் இருந்தும் ஷோலே, ஹம் ஆப் கே போன்ற படங்கள் எல்லாம் இங்கே ஒரு வருடம் ஓடின.
கிழக்கு சீமையிலே, ஆட்டோகிராப், பருத்திவீரன், சுப்பிரமணியபுரம் படங்கள் எல்லாம் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ற படம். அதனால் பான் இந்தியா படம் எடுப்போம் என்பதே ஒரு பைத்தியக்காரத்தனம்” என்றார்.