முதல்வர் பாதுகாப்புப் பிரிவில் பெண் கமாண்டோக்கள்!

முதல்வருக்கான பாதுகாப்பு பிரிவில் பிரிவில் 9 பெண் கமாண்டோக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாநில போலீஸார் சார்பில் துணை ஆணையர் ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ் தலைமையில் ‘கோர்செல்’ என்றபெயரில் முதல்வர் பாதுகாப்பு பிரிவு என்ற தனி பிரிவும் உள்ளது.

இதுதவிர பாதுகாப்பு பிரிவு, ஆயுதப்படை, வெடிகுண்டு பிரிவை சேர்ந்தவர்கள், சட்டம் – ஒழுங்கு, குற்றப்பிரிவு போலீஸார் என பல்வேறு பிரிவை சேர்ந்தவர்களும் தேவைக்கு ஏற்ப, முதல்வர் பாதுகாப்பு பணிகளில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

முதல்வர் பயணத்தின்போது சபாரி உடை அணிந்து முதல்வருடனேயே பாதுகாப்புக்காக பயணிக்கும் தனிப் பாதுகாப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகளும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.  அந்த பிரிவில் தற்போது 9 பெண் கமாண்டோக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் அந்தஸ்து கொண்ட பெண் கமாண்டோக்கள் சிறப்பு தேர்வு மற்றும் சிறப்பு பயிற்சி பெற்று இக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எக்ஸ் 95 வகை துப்பாக்கி, ஏகே 47 மற்றும் பாதுகாப்பு உடை, அதற்கு மேல் சபாரி சூட் என சினிமாவில் வருவதுபோல துடிப்புடன் இவர்கள் வலம் வருகின்றனர்.

தினமும் காலையில் முதல்வரின் பணிகள் தொடங்குவதில் இருந்து இரவு அவர் ஓய்வு எடுக்கச் செல்லும்வரை உடனிருந்து பாதுகாப்பு பணிகளை பெண் கமாண்டோக்கள் மேற்கொள்கின்றனர்.

முதல்வர் எங்கே சென்றாலும் அங்கே செல்வது, அவர் செல்லும் வழியில் பாதுகாப்பை உறுதி செய்வது, கூட்டத்தை கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை இவர்கள் செய்து வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் இவர்கள் முதல்வர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீஸில் பல்வேறு பிரிவில் இருந்த இவர்கள், தேர்வு எழுதி,கடும் பயிற்சிக்கு பிறகு முதல்வரின் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் துல்லியமாக துப்பாக்கியால் சுடும் திறன், வேகமாக ஓடுதல், கையில் துப்பாக்கி இல்லாமலே 5 பேருக்கும் மேற்பட்டவர்களுடன் சண்டை போடும் திறன், தற்காப்பு கலை ஆகிய பயிற்சி பெற்றவர்கள் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like