அதிர வைக்கும் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை!

விவசாயிகளின் போராட்டக்குரல் டெல்லித் தலைநகரில் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறது.

தாங்கள் விளைவிக்கும் விவசாயப் பொருட்களுக்கு உரிய விலையைச் சட்டப்பூர்வமாக வழங்கக் கோரி டெல்லியில் பல மாதங்களுக்கு முன்பு போராடிப் பார்த்தார்கள். அந்தப் போராட்டத்தில் பல விவசாயிகள் உயிரையும் இழந்தார்கள்.

அதை நினைவூட்டும் விதமாக நேற்று டெல்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு குறைந்த பட்சக் கோரிக்கைகளோடு போராட்டம் நடத்தினார்கள்.

வேளாண் சட்டத்தில் உள்ள எதிரான அம்சங்களை மீண்டும் பட்டியலிட்டார்கள். போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீட்டை வழங்கச் சொல்லி வற்புறுத்திய போது வெளிப்பட்ட ஒரு செய்தி.

போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கையோ, உயிரிழந்தவர்களின் பெயர்களோ கூட அரசிடம் இல்லை என்றிருக்கிறார்கள்.

அதே நேரத்தில் மத்திய வேளாண்துறை அமைச்சரான நரேந்திரசிங் தோமர் மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு அளித்திருந்த பதில் அதிர வைக்கும்படி இருக்கிறது.

இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 572 என்றிருக்கிறார்.

இதில் மராட்டிய மாநிலத்தில் தான் அதிக எண்ணிக்கையில், அதாவது  12 ஆயிரத்து 552 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 171 விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள்.

இவ்வளவு எண்ணிக்கையில் விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதை அரசே வெளிப்படையாக  ஒப்புக் கொண்டிருக்கிறது.

விவசாயத்தை நம்பியிருந்தவர்கள் இவ்வளவு பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பதற்கு என்ன காரணம்? ஏன் விவசாயத்தின் மீது அவர்கள் நம்பிக்கை இழந்தார்கள்? உரிய வருமானம் வந்திருந்தால், அவர்கள் இந்த முடிவுக்குச் சென்றிருப்பார்களா?

தற்கொலைகளின் எண்ணிக்கையைத் தெரிவித்திருக்கிற அரசு பரவலான தற்கொலைகளுக்கான மூல காரணங்கள் குறித்தும் பரிசீலிக்கலாம்.

You might also like