புயல் கடந்தபோது எதிர்கொண்ட அரசு  ஊழியர்கள்!

ஊர் சுற்றிக்குறிப்புகள் : 

‘மாண்டஸ் புயல்’ ஒருவழியாகத் தமிழகத்தைக் கடந்து போயிருக்கிறது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதன் பாதிப்பு தெரிய வந்தாலும், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் அதன் பாதிப்பு சற்றே அதிகம் என்று சொல்லலாம்.

புயல் கரையைக் கடந்த நேற்றைய தினம் மழை தொடர்ந்து பெய்த பாதிப்பை விட, குளிரின் பாதிப்பு தான் அதிகம்.

அந்த அளவுக்கு அடர்ந்த நிலையில் இருந்தது குளிர். கனமான குளிரும், வீசிய காற்றும் மக்களைப் பாடாய்ப் படுத்திவிட்டன.

குறிப்பாகச் சென்னையில் புயல் கரையைக் கடக்கும் இரவு நேரத்தில் பல மரங்கள் சாய்ந்து விழுந்திருப்பதைப் பரவலாகவே பார்க்க முடிந்தது.

சாலையில் வைத்திருத்த இரும்புத் தடுப்புப் பலகைகள் காற்றின் வேகம் தாங்காமல் பறந்திருந்தன. பல கடலோரத்து வீடுகளும் சேதமடைந்திருந்தன. மீனவர்கள் அடைந்த பாதிப்பு அதிகம்.

சென்னையில் பெரம்பூர், கொளத்தூர், அண்ணா நகர் என்று பல பகுதிகளில் மரங்கள் விழுந்ததை அடுத்து இரவு நேரத்தில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.

காலை நேரத்தில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் துரிதமாகச் செயலாற்றிய விதம் சென்னை வாசிகள் பலரையும் ஆச்சர்யப்படுத்தியது.

அந்த அளவுக்குச் சுறுசுறுப்புடன் மழைச் சாரல் நிற்காத காலை நேரத்திலும் விழுந்து கிடந்த பெரிய மரங்களை அறுத்து அப்புறப்படுத்தினார்கள்.

மின்சாரக் கம்பிகளைச் சீரமைத்து மின்விநியோகத்தையும் சீராக்கினார்கள். அந்தந்தப் பகுதி கவுன்சிலர்களின் மேற்பார்வையில் இவை எல்லாம் நடந்தன.

சென்னை மாநகராட்சி ஊழியர்களும், மின்வாரிய ஊழியர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் ஒருங்கிணைந்து விரைந்து செயலாற்றி பெருநகரத்தில் இயல்பு வாழ்க்கையை மீட்டிருக்கிறார்கள்.

அந்த விரைவுத் தன்மைக்குப் பாராட்டுக்கள்!

*

You might also like