தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
தமிழகத்தில் கடந்த 15 மாதங்களில் 10 பில்லியன் டாலர் முதலீடு கொண்டு வரப்பட்டு, அதன்மூலம் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பிலான 12-வது வருடாந்திர நிதிநிலை மாநாடு சென்னையில் நேற்று நடந்தது. மாநாட்டை தொடங்கிவைத்து தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “திமுக ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் முடிந்துள்ளன.
கொரோனா நோய்த்தொற்று, கனமழை உட்பட பல்வேறு சிக்கல்கள் இருந்தபோதும் பொருளாதாரத்தை சீராக வைத்துள்ளோம். வருவாய் பற்றாக்குறை ரூ.16 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
தொழில் தொடங்க உகந்த மாநிலமாக 14-வது இடத்தில் இருந்த தமிழகத்தை 3-வது இடத்துக்கு முன்னேற்றியுள்ளோம்.
கடந்த 15 மாதங்களில் 10 பில்லியன் டாலர் முதலீட்டை தமிழகத்துக்கு கொண்டு வந்துள்ளோம். இதன்மூலம் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
‘ஃபின்டெக்’ போன்ற வளர்ந்து வரும் நிறுவனங்கள் மூலம் அதிக முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளாக குறைந்திருந்த ஜிடிபி வளர்ச்சி விகிதம் தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.
அடுத்த 3 ஆண்டுகளில் தமிழகத்தின் முதலீட்டை மூன்று மடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்” என்று அமைச்சர் பேசினார்.