எல்.ஆர்.ஈஸ்வரியாக மாறிய லூர்துமேரி ராஜேஸ்வரி!

எல்.ஆர். ஈஸ்வரி – மிகப் பிரபலமான ஒரு திரைப்படப் பின்னணிப் பாடகி.
1958 ஆம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் பாடி வரும் இவர் ஆயிரக்கணக்கான பாடல்களை பல மொழிகளில் பாடியுள்ளார்.

பரமக்குடிக்கு அருகே இளையான்குடி என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட தேவராஜ், ரெஜினாமேரி நிர்மலா ஆகியோருக்கு சென்னையில் பிறந்தார் ஈசுவரி.

இவரது தாயார் எம். ஆர். நிர்மலா ஜெமினி ஸ்டூடியோவில் குழுப்பாடகியாக இருந்தவர். ஈஸ்வரியின் இயற்பெயர் “லூர்துமேரி ராஜேஸ்வரி”.

எழும்பூரில் உள்ள மாநிலப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இளம் வயதிலேயே தந்தை (36) இறந்து விட்டார். அமல்ராஜ் என்ற தம்பியும், எல்.ஆர். அஞ்சலி என்ற தங்கையும் இவருக்கு உண்டு.

மனோகரா (1954) படத்திற்காக எஸ். வி. வெங்கட்ராமன் இசையமைப்பில் “இன்ப நாளிலே இதயம் பாடுதே” என்ற பாடலை ஜிக்கி குழுவினர் பாடினர். அப்பாடலில் தாய் நிர்மலாவுடன் இணைந்து ஈஸ்வரியும் குழுவினருடன் சேர்ந்து பாடினார். அன்று முதல் இவரும் குழுப் பாடகியானார்.

முதன் முதலில் தனியாகப் பாடும் சந்தர்ப்பம் நல்ல இடத்துச் சம்பந்தம் (1958) திரைப்படத்துக்காக கே.வி. மகாதேவனின் இசையமைப்பில் “இவரே தான் அவரே அவரே தான் இவரே” என்ற பாடலைப் பாடினார்.

இதுவே இவரது முதல் பாடலாகும். இப்படத்தில் ஈஸ்வரி நான்கு பாடல்களைப் பாடினார்.

இதனையடுத்து 1959-ல் வெளிவந்த நாலு வேலி நிலம் படத்துக்காக திருச்சி லோகநாதனுடன் இணைந்து “ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே” என்ற பாடலைப் பாடினார். இதனையும் கே.வி.மகாதேவனே இசையமைத்திருந்தார்.

1961-ல் வெளிவந்த பாசமலர் திரைப்படத்தில் இவர் பாடிய “வாராயென் தோழி” என்ற பாடல் இவருக்கு மிகவும் புகழைத் தேடித்தந்த பாடல். இது இன்றும் திருமண விழாக்களில் ஒலிக்கும் பாடலாகும்.

“எலந்தப் பழம் எலந்தப்பழம்”, முத்துக்குளிக்க வாரியளா, அம்மனோ சாமியோ, வந்தால் என்னோடு இங்கே வா, நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், வருஷத்தைப் பாரு அறுபத்தி ஆறு, சிங்கப்பூரு மச்சான் சிரிக்கச் சிரிக்க வச்சான், இவ்வளவு தான் உலகம் இவ்வளவு தான் போன்ற பாடல்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்த ஏனைய பாடல்கள்.

பிற்காலத்தில் இவர் துள்ளிசைப் பாடல்களையே நிறையப் பாடினார். எண்பதுகளின் பிற்பகுதியில் ஈஸ்வரிக்கு திரைப்பட வாய்ப்புக் குறைந்தது. எனினும் இளையராஜாவைத் தவிர பெரும்பாலான இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் 1990-கள் வரை தொடர்ந்து பாடிவந்தார்.

அதன் பின் சில இசையமைப்பாளர்களின் கைங்கரியத்தால் படிப்படியாக திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு குறைந்தது. இருந்தாலும் பக்திப் பாடல்களை திரைப்படங்களிலும், வெளியிலும் அதிகம் பாடி வருகிறார்.

இப்போதும் ஏ.ஆர்.ரகுமான் போன்ற பிரபல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏராளமான தெலுங்கு, கன்னடம், மலையாள திரைப்படங்களிலும் பாடியுள்ளார். இதற்கு கீழ் வரும் பகுதி திரு ப.கவிதா குமார் அவர்கள் எழுதியது அவருக்கு எனது மனமார்ந்த நன்றி .

“இசைகேட்டால் புவி அசைந்தாடுகிறதோ” இல்லையோ இவர் பாடும் பாடலைக் கேட்டால் நாம் ஆடுவோம். லூர்து மேரி ராஜேஸ்வரி என்ற எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடல்கள் பெரும்பாலும் கேட்போரை ஆட்டம் போட வைப்பவை.

இவரைப் போல உச்சஸ்தாயில் பாடும் பாடகிகள் குறைவு. குரலின் மூலம் பல பாவங்களைக் காட்டுபவர்.

பட்டத்து ராணி பார்க்கும் பார்வை பாடலுக்கு இப்படி ஒரு பாடகி பாடமுடியுமா என யோசிக்க வைத்தவர். வாராய் என் தோழி வாராயோ பாடல் முழுவதும் தமிழர்களின் குடும்பங்களுக்குள் குடியேறியவர்.

கேபரே வகை பாடல் என்றால் அதில் கூட தனது தனிமுத்திரையை எல்.ஆர்.ஈஸ்வரி பதிக்கத் தவறவில்லை.

அதிசய உலகம் ரகசிய இதயம் அழகிய உருவம் இளகிய பருவம் பெண்ணுலகில் நான் உன்னை அழைத்தேன் என்ற பாடலை இவ்வளவு வேகமாக எந்த பாடகியாலும் பாட முடியாது.

பளிங்கினால் ஒரு மாளிகை. பருவத்தால் மணி மண்டபம் உயரத்தில் ஒரு கோபுரம் என்ற பாடலை இவரைப் போல மெதுவாகப் பாடி புகழ் பெற வைக்க முடியாது.

இசைக்கலைஞர்கள் மதங்களைக் கடந்தவர்கள் என்பதற்கு எல்.ஆர்.ஈஸ்வரி மிகச்சிறந்த உதாரணம்.

கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இவர் பாடிய பக்தி பாடல்கள் ஏராளம். குறிப்பாக, அம்மனை வேண்டி எல்.ஆர். ஈஸ்வரி பாடிய பாடல்கள் இல்லாமல் கோயில் திருவிழாக்கள் நடைபெறுவதில்லை.

எத்தனை ஆயிரம் பாடல்களைப் பாடினார் எனத் தெரியவில்லை.

1958-ம் ஆண்டு முதல் இன்றுவரை கிட்டத்தட்ட 63 ஆண்டுகளாக பாடி மக்களை உற்சாகப்படுத்தி வரும் எல்.ஆர்.ஈஸ்வரி பாடகி என்பது தான் உங்களுக்குத் தெரியும். அவர் ஒரு பாடலாசிரியர். அது மட்டுமல்ல அவர் இசையமைப்பாளர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து ஐயப்பன் பாடல்களுக்கு எல்.ஆர்.ஈஸ்வரி இசையமைத்துள்ளார். அத்துடன் பாடல்களையும் எழுதியுள்ளார்.

You might also like