யோகிபாபுவுக்கு என்னாச்சு?

இப்போதெல்லாம் யோகிபாபுவின் பெயரையும் முகத்தையும் நிரப்பி விளம்பரப்படுத்தப்படும் படங்களை விட, சக நடிகர் நடிகைகளைப் போல அவரது இருப்பையும் சாதாரணமாக வெளிக்காட்டும் படங்களே நல்ல வரவேற்பைப் பெறுகின்றன.

அதையும் மீறி அவரை முன்னிலைப்படுத்துகின்றன சில திரைப்படங்கள்; பல நேரங்களில் தனது அனுமதியின்றி அவ்வாறு நடப்பதாக அமைகிறது யோகிபாபு தரும் விளக்கம்.

அந்த வரிசையில், ரொம்பவும் காத்திரமாக அமைந்திருக்கிறது ‘தாதா’ படம் தொடர்பான சர்ச்சை.

ஜெட் வேக வளர்ச்சி!

விஜய் தொலைக்காட்சியில் வெளியான ’லொள்ளுசபா’ நிகழ்ச்சியில் உதவி இயக்குனராகப் பணியாற்றியபோதும் சரி; திரைப்படங்களில் வில்லனின் அடியாளாகத் தோன்றியபோதும் சரி, கொஞ்சமாக முகம் தெரிந்தாலும் போதும் என்றுதான் நினைத்திருப்பார் பாபு.

அதனால், எத்தகைய வாய்ப்புகளாக இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றுதான் முயன்றிருப்பார்.

அமீரின் ‘யோகி’யில் தலை காட்டியபிறகு ‘கலகலப்பு’, ‘மான் கராத்தே’, ‘யாமிருக்க பயமே’, ‘காக்கிச்சட்டை’, ‘காக்கா முட்டை’ என்று அவரை அடையாளம் காட்டிய படங்களின் எண்ணிக்கை வெகு சிலவே.

ஷாரூக்கான் தயாரிப்பான ‘சென்னை எக்ஸ்பிரஸு’ம் அவற்றில் ஒன்று. இடைப்பட்ட காலத்தில் சிறு வேடங்களையும் பாபு தவிர்க்கவில்லை.

அதன் தொடர்ச்சியாக, அவர் நடிக்காத படங்களே இல்லை எனும் அளவுக்கு நிலைமை மாறியது. அவருக்கான முக்கியத்துவம் பெருகியது.

திரையில் அவர் தோன்றினாலே ரசிகர் கூட்டம் சிரிக்கத் தொடங்கியது. ஜெட் வேகத்தில் எகிறியது அவரது திரை வளர்ச்சி.

அதன் தொடர்ச்சியாக, யோகிபாபு நடித்து நீண்ட காலமாக முடங்கியிருந்த சில படங்கள் வெளியாகின.

விளம்பரங்களில் முக்கியத்துவம்!

‘ஆண்டவன் கட்டளை’, ‘பரியேறும் பெருமாள்’ போன்ற நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் வாய்ப்புகள் வெகு அரிதாகவே யோகிபாபுவுக்குக் கிடைத்தன.

ஆனாலும் விஜய், அஜித் உட்பட முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் அவருக்கும் ஒரு இடம் தரப்பட்டது.

‘தர்மபிரபு’ திரைப்படம் யோகிபாபுவை முதன்மைப்படுத்தி தயாரான முதல் திரைப்படம். அந்த ஒரு காரணத்தால் மட்டுமே, அதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது.

தொடர்ந்து ‘கூர்க்கா’, ’ஜாம்பி’, ‘மண்டேலா’ உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே பிரதான பாத்திரத்தில் யோகிபாபு தோன்றியிருந்தார்.

வேறு சில படங்களில் முக்கியப் பாத்திரத்தை ஏற்றிருந்தார். இன்னும் சிலவற்றில் இரண்டொரு காட்சிகளில் நடித்தார்.

ஆனாலும் கூட, குறிப்பிட்ட சில பட விளம்பரங்களில் யோகிபாபுவே முதன்மையாக இடம்பெற்றார்.

இந்த முக்கியத்துவத்தால், அவரே நாயகன் என்று நம்பி திரையரங்குகளுக்குச் சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

பத்திரிகையாளர்கள் அது பற்றிக் கேள்விகள் எழுப்பினர்.

அப்போது, “தான் அதனை விரும்பவில்லை” என்றே பதில் சொன்னார் யோகிபாபு. சில மாதங்களுக்கு முன்னர் ரிப்பீட் ஷு வந்தபோது, அதில் ”வத்திக்குச்சி திலீபன் தான் ஹீரோ; நான் அல்ல” என்று பதில் சொன்னார்.

‘தா தா’ பர்ஸ்ட் லுக் வெளிவந்தபோதும் கூட ”அதில் நிதின் சத்யா தான் நாயகன்” என்றார். ”நான்கு காட்சிகளே நடித்த படத்தில் நான் ஹீரோ என்பது போல விளம்பரம் செய்கிறார்கள்” என்று புகார் கூறியிருந்தார்.

எந்த ‘தா தா’ பட விளம்பரத்தில் யோகிபாபு பிரதானமாக இருந்தாரோ, அப்பட பாடல் வெளியீட்டு விழாவிலேயே ‘யோகிபாபு படங்களில் நடிக்கத் தடை விதிக்க வேண்டும்’ என்ற குரல் எழுந்ததுதான் ஆச்சர்யமான விஷயம்.

அதுவே ‘யோகிபாபுவுக்கு என்னாச்சு’ என்ற எண்ணத்தை உருவாக்கியது.

வரும் டிசம்பர் 9ஆம் தேதியன்று ‘தா தா’ வெளியாகும் நிலையில், இப்படம் வியாபாரம் ஆகவிடாமல் யோகிபாபு தடுப்பதாகப் புகார் கூறினார் அதன் தயாரிப்பாளர் கின்னஸ் கிஷோர்.

டப்பிங் பேசாமல் அலைக்கழித்த காரணத்தால், யோகிபாபுவை தாக்கினேன் என்று அவர் தன் பேச்சில் குறிப்பிட்டதாகச் செய்திகள் வெளியாகின.

சில யூடியூப் தளங்களில் ’தாதா’ தயாரிப்பாளரின் பேச்சு ‘எடிட்’ செய்யப்பட்டு வெளியானதால், அதன் உண்மைத்தன்மையை அறிய முடியவில்லை.

அந்த மேடையில் பேசிய பலர் வாழ்வில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்திருப்பதை யோகிபாபு மறந்துவிட்டு நன்றியில்லாமல் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினர்.

’யோகிபாபுவுக்கு எங்களது கண்டனம்’ என்றிருந்த சில தயாரிப்பாளர்களின் பேச்சு கொஞ்சம் எல்லை மீறியதையும் காண முடிந்தது.

தயாரிப்பாளரை மட்டுமல்லாமல், அப்படத்தில் பணியாற்றிய 200-க்கும் மேற்பட்டோரின் குடும்பங்கள் பாதிக்கப்படும் ஒரு செயலை யோகிபாபு செய்யக்கூடாது என்று ‘மிக அன்பாக’ அமைந்தது அவர்களது பேச்சு.

நாயகனாக நடித்தாலும் நடிக்கவிட்டாலும், அதனைப் பகிரங்கமாகச் சொல்வது நல்லதல்ல, நாகரிகமல்ல என்றே தொனியே அதில் தெரிந்தது.

’தா தா’ விழா வீடியோக்கள் வெளியாகத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, அந்த படம் ‘மணி’ என்ற பெயரில் உருவானது என்று இயக்குனர் ஒருவர் புகார் தெரிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியானது.

உடனே, அவர் வெறும் படத்தொகுப்பாளர் தான் என்று ‘தா தா’ பட தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் தரப்பட்டதாகப் பதில் வந்தது.

தயாரிப்பாளரும் நடிப்புக்கலைஞர்களும் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டுவது புதிதல்ல என்பதால், யார் சொல்வது உண்மை என்பது படம் வெளியாகும்போது தெரிந்துவிடும்; இன்னொரு தரப்பின் நோக்கம் என்னவென்பதும் புரிந்துவிடும்.

ஆனால், இப்பிரச்சனையில் அதிகமும் பாதிக்கப்படுவது ரசிகர்கள் என்பதாலேயே இதனை அதிகமும் கூர்ந்து நோக்க வேண்டியிருக்கிறது.

திரைப்படம் பார்ப்பதொன்றே முதன்மையான பொழுதுபோக்கு என்பவர்களால் மட்டுமே இப்பிரச்சனையின் பாதிப்பை உணர முடியும்.

வியாபார தந்திரம்!

பிரபலமாக இருக்கும் சில நடிப்புக் கலைஞர்களை விளம்பரங்களில் முன்னிறுத்துவது ஒவ்வொரு காலகட்டத்திலும் வியாபார தந்திரமாகவே நோக்கப்படுகிறது.

சம்பந்தப்பட்டவர்கள் மிகச்சில காட்சிகளில் வந்தாலும் கூட, அதுவே படத்தில் பிரதானம் என்பது போன்ற தோற்றம் ரசிக வெளியில் ஏற்படுத்தப்படுகிறது.

தொண்ணூறுகளில் ரஜினி, கமல் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் வேறு மொழிகளில் நடித்த படங்கள் அவர்களது ஒப்புதல் இல்லாமல் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.

அப்போதெல்லாம் அவர்களே ‘இதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்று விளக்கமளித்திருக்கின்றனர்.

2000களில் ‘என்னை தாலாட்ட வருவாளா’ என்ற படம் வந்தபோது அஜித்தும், தூள் மற்றும் சாமி வெளியானபோது தான் நடித்த சில மலையாள, தெலுங்கு, கன்னட படங்கள் தமிழில் அவசர அவசரமாக ‘டப்’ செய்யப்பட்டதை விக்ரமும் விரும்பவில்லை என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இது போன்ற விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு திரையரங்குகளுக்குச் சென்று வெளியே வரும் ரசிகர்கள் மனதில் சில கேள்விகள் எழும்.

திரைப்படத்திற்கும் விளம்பரம் செய்யப்பட்டதற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லையே என்பது அவற்றில் ஒன்று. அதற்குப் பதில் சொல்வது யார் பொறுப்பு? இதே போன்ற கேள்விதான் ‘தா தா’ விவகாரத்தையும் துரத்துகிறது.

அதீத விளம்பரத்துடன் வெளியாகும் இது போன்றதொரு படைப்பு ரசிகர்களைத் திருப்திப்படுத்தினால் எந்தப் பிரச்சனையும் இல்லை.

பல நேரங்களில், இப்படிப்பட்ட படைப்புகள் அப்படிப்பட்ட திருப்தியைத் தருவதில்லை என்பதே உண்மை.

2000-களில் ஒரு முன்னணி காமெடி நடிகர் ஒரு மாபெரும் இயக்குனரின் ‘ட்ரெண்ட் செட்டர்’ படத்தில் குணசித்திர பாத்திரமாக வந்துபோனது கூட ரசிகர்களிடம் ஏமாற்றத்தைக் கிளப்பியது.

அப்படியிருக்க, ஒரு படத்தின் அங்கமாக இருக்கும் ஒரு நடிகரை அதன் முகம் போல அடையாளப்படுத்துவது எப்படி சரியாக இருக்க முடியும்? சக நடிகர் நடிகைகளைவிட இச்செயலால் அதிகமும் காயப்படுவது ரசிகர் கூட்டம்தான் என்பது எப்போது உணரப்படும்?

-உதய் பாடகலிங்கம்

You might also like