இளம் ஆட்சியர்களுக்கு இறையன்புவின் கவித்துவ கடிதம்!

ஒவ்வொரு ஆண்டும் மாவட்டங்களில் கொடி நாள் வசூல் நடைபெறும். அதில் சேகரமாகும் தொகை முன்னாள் படைவீரர்களின் நலன்களுக்குப் பயன்படுத்தப்படும். 

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் கவித்துவமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “மாவட்டத்தின் மையமாகச் செயல்படும் இளம் தோழர்களே, நாட்டிற்காக தங்கள் இன்றை, நம்முடைய நாளைக்காக அர்ப்பணித்த விரைப்பான சீருடையுடனும் வீறுகொண்ட நடையுடனும் சீருடன் வாழ்ந்த ஒப்பற்றவர்களுக்கு உயரிய நாள் கொடிநாள்.

கொடியைக் காப்பாற்ற மடிந்த மகத்தான மனிதர்களின் குருதியால் எழுதப்பட்டது தேசிய கொடியின் வரலாறு. 

முப்படை வீரர்கள் தங்களிடம் ஒப்படைத்தக் கொடியை உயிருக்குயிராய் நேசித்து கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் உறையும் பனியிலும் நடுங்கும் குளிரிலும் போராடிவருகிறார்கள்.

துப்பாக்கியைத் தூக்கவும் எதிரிகளைத் தாக்கவும் எல்லையைக் காக்கவும் மாண்டுவிடுபவர்கள் சிலர். மீண்டு வருபவர்கள் பலர்.

இளமைப் பருவத்தை இனிய நாட்டிற்காக ஈந்துவிட்டு ஊருக்குத் திரும்பி வருகிறவர்கள் நம் விருந்தினர்கள்.

அவர்கள் வாழ்வில் வசந்தத்தையும் வருமானத்தில் சுகந்தத்தையும் இதயத்தில் இளைப்பாறுதலையும் முகத்தில் புன்னகையையும் வரவழைக்கவேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு. கிளைகள் கனி தருவதற்கு வேருக்குத்தான் நீர்வார்க்கிறோம்.

அப்படி வேருக்கு நீர்வார்க்க வேண்டிய நாள் கொடி நாள்.  கொடிநாளுக்கு நாம் அளிக்கும் நன்கொடையே நம் நாட்டுப்பற்றின் அடர்த்திக்கு அத்தாட்சி. கொடிநாளில் தமிழ்நாடு எப்போதும் முதலிடம். காரணம் தேசப்பற்றுக்கு நம் மாநிலம் இருப்பிடம்.

கொடிநாள் தொகை முன்னாள் படைவீரர்கள் வாழ்வில் தென்றல் வீசச் செய்யப் பயன்படும் முதலீடு. நீங்கள் உங்கள் மாவட்டத்தில் சென்றமுறை பெற்ற நன்கொடையை விட இரண்டு மடங்கு பெற்று சாதனை படைக்கவேண்டும் என்பதற்கே இம்மடல்.

நம்மால் இயன்றதை மட்டுமல்ல இன்னும் கொஞ்சம் திரட்டித்தந்து கொடையாய் கொடுப்போம் கொடி நாளுக்கு. முன்னாள் படைவீரர்கள் எந்நாளும் ஏற்றம் பெற உள்ளதை அளிப்போம். 

உள்ளத்தையும் அளிப்போம்” என்று கவித்துவமான மொழியில் எழுதியுள்ளார் தலைமைச்செயலாளர் இறையன்பு.

பா. மகிழ்மதி

You might also like