தமிழகத்தில் இரண்டு நாட்களில் 1,800 பிச்சைக்காரா்கள் மீட்கப்பட்டதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதைத் தடுக்கும் வகையில் ‘ஆப்ரேஷன் புதுவாழ்வு’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் கடந்த சனிக்கிழமை முதல் 37 மாவட்டங்களிலும், 9 காவல் ஆணையரங்களிலும் முக்கிய சாலை சந்திப்புகள், சுங்கச்சாவடிகள், வழிப்பாட்டுத் தலங்கள் ஆகியவற்றில் திடீா் சோதனை நடத்தப்பட்டது.
இந்த இரண்டு நாட்களில் மாநிலம் முழுவதும் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 1,800 போ் மீட்கப்பட்டனா்.
இவா்களில் 255 போ் அரசு இல்லங்களிலும், 953 போ் தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் ஒப்படைக்கப்பட்டனா்.
அதோடு 27 சிறார்கள் சிறுவா் சீா்திருத்தப் பள்ளியிலும், 367 போ் பெற்றோரிடமும் ஒப்படைக்கப்பட்டனா். மேலும், 198 பிச்சைக்காரா்கள் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டனா்.
அதிகபட்சமாக தாம்பரத்தில் 207 பேரும், .காஞ்சிபுரம் மாவட்டத்தில் 190 பேரும், ரயில்வே காவல் துறையில் 139 பேரும், சேலம் மாவட்டத்தில் 122 பேரும் மீட்கப்பட்டுள்ளனா் எனவும் அந்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
பெண்கள், குழந்தைகளை அழைத்து வந்து பிச்சையெடுக்க வைக்கும் நபா்கள் குறித்து தெரிந்தால் 044-28447701 என்ற தொலைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். சரியான தகவல் அளிப்போருக்கு வெகுமதி அளிக்கப்படும். தகவல் தெரிவிப்பவரின் ரகசியம் காக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.