இந்தியா முழுவதும் ஒரே மொழி என்ற திணிப்பை எதிர்க்கிறேன்!

– மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு

சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் 12வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இதில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, 5,176 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களும், சிறப்பாகப் பயின்ற 41 பேருக்கு தங்கப் பதக்கங்களும்  வழங்கி கவுரவித்தனர். 

இதில், டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் வழக்கறிஞர் குமார் ராஜேந்திரன் அவர்களுக்கும் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

டாக்டர் எஸ்.கே.அசோக்குமார், டாக்டர் ஹரிதாதேவி ஆகியோரின் நெறிகாட்டுதலின் கீழ் ‘இந்திய அரசியலில் குற்றவியல் நடைமுறை குறித்த விமர்சன ஆய்வு’ (Criminalization of politics in India – A critical study) என்ற தலைப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கி ஐந்து ஆண்டுகளாக முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்ட இவர், 2020 ஆம் ஆண்டு ஆய்வேட்டைச் சமர்ப்பித்தார். இதையொட்டி வழக்கறிஞர் குமார் ராஜேந்திரனுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

பின்னர் விழாவில் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “இந்தியாவிற்கு பொதுவான ஒரே மொழி என்ற திணிப்பை தான் எதிர்ப்பதாகவும், மாநில மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் பேசினார்.

சட்டப் படிப்புகளில் தாய்மொழி கொண்டு வரப்படும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பேசிய அமைச்சர்,

வழக்காடும் மொழியை சாமானியர்களும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் சாமானியருக்கும் நீதித்துறைக்குமான இடைவெளியை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, துறைச் செயலர் பி.கார்த்திகேயன், அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக துணைவேந்தர் சந்தோஷ் குமார், பதிவாளர் ரஞ்சித் ஓமன் ஆபிரகாம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

You might also like