ஆட்டம் காணும் அழகிரி பதவி!

திருநெல்வேலிக்கு வரும் போதெல்லாம் கலைஞர் கருணாநிதி, “நெல்லை எனக்கு தொல்லை’’ என தனது வேதனையை வேடிக்கையாக குறிப்பிடுவார்.

இப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு, தொல்லை ஆகி இருக்கிறது நெல்லை.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக ஜெயக்குமார் என்பவர் அண்மையில் நியமிக்கப்பட்டார்.

இந்த நியமனம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும், நாங்குநேரி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரனுக்கு பிடிக்கவில்லை.

ஜெயக்குமாரை மாற்றக்கோரி மனோகரன் ஆதரவாளர்கள் கடந்த 15-ம் தேதி, நெல்லையில் இருந்து ஐந்தாறு பஸ்களில் சென்னை புறப்பட்டு வந்து காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் திரண்டனர்.

அழகிரியின் காரை அவர்கள் முற்றுகையிட்டனர். அப்போது அவர்களை சிலர் அடித்து உதைத்தனர்.

“அழகிரி, குண்டர்களை ஏவி காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை தாக்கினார்” என பகிரங்கமாக குற்றம் சாட்டினார் மனோகரன்.

“சத்தியமூர்த்தி பவனில் நடந்த களேபரத்துக்கு மனோகரனே காரணம்” என்கிறார் அழகிரி.

“கட்சி தொண்டர்களை தாக்கிய அழகிரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனோகரன் நெல்லையில் உயர்த்திய போர்க்கொடி, இப்போது டெல்லி வரை பட்டொளி வீசி பறக்க ஆரம்பித்துவிட்டது.

அழகிரிக்கு எதிராக மூத்த தலைவர்கள் ஒன்று சேர்ந்து விட்டனர். இதற்கு பிள்ளையார் சுழி போடுவது போல், இந்திராகாந்தியின் பிறந்த நாள் விழா அமைந்தது.

இந்திரா பிறந்தநாளையொட்டி கடந்த 19-ம் தேதி சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள இந்திரா சிலைக்கு அழகிரி தனது ஆதரவாளர்களுடன் வந்து மாலை அணிவித்தார்.

இதனை புறக்கணித்த மூத்த தலைவர்கள் கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி ஆகியோர் தனி அணியாக வந்து மாலை அணிவித்தார்கள். (இவர்கள் அனைவருமே முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள்)

அன்றைய தினமே எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் இவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஆலோசனை நடத்தினர்.

“கட்சித் தலைவர் பதவியிலிருந்து அழகிரியை மாற்றியே தீருவது” என அவர்கள் சபதம் மேற்கொண்டனர். அதன் பின்னர் விறுவிறுவென காட்சிகள் அரங்கேறின.

அண்மையில் டெல்லி சென்ற இளங்கோவன், தங்கபாலு உள்ளிட்ட தலைவர்கள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவைச் சந்தித்தனர்.

அழகிரியை தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனால் அழகிரி பதவி ஆட்டம் கண்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதும் நிலையில் அழகிரி தரப்பு நடப்பதை மவுனமாக பார்த்துக் கொண்டிருக்கிறது.

மக்களவைத் தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே இருப்பதால், அழகிரியை தலைவர் பதவியில் இருந்து மாற்ற மாட்டார்கள் என்பது அழகிரி ஆதரவாளர்கள் கருத்து.

என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

– பி.எம்.எம்.

You might also like