– நெகிழ்ந்த கருணாஸ்
கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் டைரக்சனில் உருவாகியுள்ள இரண்டாவது படம். சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். இன்னும் பல புதுமுகங்களும் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ள இந்த படத்திற்கு கருணாஸ் மகன் நடிகர் கென் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வர் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.
படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “உண்மைக்கு நெருக்கமான இந்த நிகழ்வுகளை சினிமாவாக எடுக்க தைரியம் வேண்டும்.
அதை பணம் போட்டு தயாரிக்க இன்னும் அதிக தைரியம் வேண்டும். சவாலான இந்த விஷயத்தை இயக்குநர் கிட்டு, கருணாஸ் இருவரும் இணைந்து சாதித்துள்ளனர்” என்று வாழ்த்தினார்.
அசுரன் படத்தில் ஒரு அறிமுக நடிகராக அனைவரையும் கவர்ந்த கருணாஸின் மகன் கென் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். அவர் பேசும்போது, “என்னுடைய நண்பன் ஈஸ்வர் தான் இந்த படத்திற்கு மெயின் இசையமைப்பாளர். நான் அவருக்கு பக்கபலமாக இருந்து பணியாற்றியுள்ளேன்.
இந்த சல்லியர்கள் படம் பற்றி சொன்னபோது ஆரம்பத்தில் எதுவும் புரியவில்லை. ஒருவேளை தலைமுறை இடைவெளி காரணமாக இருக்கலாம். இதைப்பற்றி புரிந்து கொள்ளவே எங்களுக்கு ஒரு மாதம் ஆகிவிட்டது” என்றார்.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திருமுருகனை வரவேற்று இயக்குனர் திட்டு பேசும்போது, “படத்திற்குள் இவர் வந்ததும் இந்த படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளில் உதவியாக இருந்து, கிட்டத்தட்ட ஸ்கிரிப்ட்டையே மாற்றிவிட்டார்” என்று பாராட்டினார்.
தொடர்ந்து பேசிய திருமுருகன், “ஈழத்தில் துயரப்பட்டவர்களைப் பார்த்து நான் கதறி அழுது இருக்கிறேன். ஆனால் இந்த படத்தில் அவர்களை துயரப்படுத்தும் ஒருவராக நடித்துள்ளேன்.
இந்த படத்தில் கருணாஸ் நடித்த ஒரு காட்சியை பார்த்தபோது என்னை அறியாமல் கதறிவிட்டேன். படம் பார்க்கும் அனைவருக்குமே இந்த அழுகை நிச்சயம் வரும்” என்றார்.
இயக்குனர் சீனுராமசாமி, “வசிப்பிடம் இழந்து வாழும் ஆன்மாக்கள் இயக்குனர் கிட்டுவையும் கருணாஸையும் பாராட்டுவார்கள். மருத்துவராக இருப்பதே மாபெரும் போராட்டம்.
அதிலும் எதிரிகள் சுற்றிலும் இருக்கையில் மண்ணுக்காக போராடிய மனிதர்களைக் காப்பாற்றும் மருத்துவர்களின் பணி ரொம்பவே சவாலானது.
பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வுக்காக போராடிய, சமூகத்திற்காக போராடிய அந்த மருத்துவர்களை பெருமைப்படுத்திய கருணாஸ், கிட்டு இருவருக்கும் என் நன்றிகள்” என்றார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புலட்சுமி ஜெகதீசன், “இந்த படத்தின் இயக்குனர் பெயரை கேட்டபோது முன்பு கிட்டு அண்ணாவுடன் பழகிய ஞாபகங்கள் நினைவுக்கு வந்துவிட்டன.
எண்பதுகளின் மத்தியில் இலங்கையில் போர் நடைபெற்றபோது காயம்பட்ட பெண் போராளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் நான் ஈடுபட்டிருந்தேன். அந்த ஞாபகம் வந்துவிட்டது.
பிரதமராக இந்திரா காந்தி இருந்தவரை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தான் இருந்தார். எப்படி பாகிஸ்தானிடம் இருந்து பங்களாதேசை தனித்தனியாக பிரித்து கொடுத்தாரோ, அதேபோல தனி ஈழத்தை பிரித்து தரும் எண்ணத்தில்தான் அவர் செயல்பட்டு வந்தார்.
ஆனால் அவரது மரணம் எதிர்பாராத ஒரு தேக்கத்தை கொண்டு வந்துவிட்டது. அவரது மகன் ராஜீவ் காந்தியும் அதை நோக்கித்தான் நகர்ந்தார்.
ஆனால் இங்குள்ள சிலர் தங்களது சுயநலம் காரணமாக தனி ஈழம் பெற்றுத்தந்து விட்டால் அதேபோல இங்கு இருப்பவர்கள் தனித்தமிழ்நாடு கேட்க ஆரம்பித்து விடுவார்கள் என்கிற குறுகிய நோக்கத்தில் சிந்தித்து ராஜீவ்காந்தியை திசைதிருப்பி விட்டனர்.
அதன் காரணமாக தனி ஈழம் என்கிற கனவு நிறைவேறாமலேயே போய்விட்டது. இங்கே தமிழர் வரலாறு குறித்த அறிவு பல பேருக்கு இல்லை. இதுபோன்ற பல படங்கள் வந்தால்தான் அந்த நிலை மாறும் ” என்றார்.
நடிகர் சேது கருணாஸ், “1985லிருந்து ஈழத்தமிழர்களுக்காக என்னால் இயன்றவரை ஏதாவது செய்துகொண்டுதான் இருக்கிறேன். எனது சொந்தப்பணத்தில் 153 இலங்கை அகதி மாணவர்களை படிக்க வைத்தேன் என்பதை பெருமையாக சொல்கிறேன்.
இன்று அவர்கள் நல்ல வேலைகளில் இருக்கிறார்கள். வெளிநாடுகளில்கூட பணிபுரிந்து வருகிறார்கள். இப்படி ஒரு கட்டமைப்பை உருவாக்கி பின்னால் வரும் கென், ஈஸ்வர் போன்ற இளைஞர்களிடம் கொடுத்துவிடுகிறேன். அவர்கள் அதை பார்த்துக்கொள்ளட்டும்.
இதுதான் என்னுடைய விஷன். இதற்கு எவ்வளவு செலவானாலும் பத்து பேரிடம் பிச்சை எடுத்தாவது அந்த பணத்தைக் கொடுப்பேன்” என்று நெகிழ்ந்தார்.
மேலும் சிறப்பு விருந்தினர்களான கொளத்தூர் மணி, பெ.மணியரசன், திருமுருகன் காந்தி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் போன்றவர்களும் இந்த சல்லியர்கள் படத்தை வாழ்த்தி பேசினார்கள்.