53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, அதன் பிரதிநிதிகள் அனைவருக்கும் ஒரு இனிமையான மெக்சிகன் விருந்தை தயார் செய்துள்ளது. இந்த விழாவில் பல்வேறு பிரிவுகளில் நாட்டின் பல படங்கள் திரையிடப்படுகின்றன.
மெக்சிகோ அரசின் சுற்றுலாத் துறை அமைச்சர் மிகுவல் டோருகோ மார்க்யூஸ், காணொலி செய்தியில், “கோவாவில் நடைபெறும் வியத்தகு இந்தியாவின் 53வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்த மிக முக்கியமான தருணத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமை அடைகிறேன்.
மெக்ஸிகோ அதன் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்றது. இந்த பாரம்பரியத்தின் மிக முக்கியமான பகுதி நம் சினிமா.
ஜாம்பவான்களாகக் கருதப்படும் சிறந்த திரைப்பட இயக்குநர்கள் மற்றும் நடிகர்களைக் கொண்ட எங்கள் நாட்டின் திரைப்படங்கள் உலகம் முழுவதும் பல விருதுகளைப் பெற்றுள்ளன.” என்றார்.
மெக்சிகன் சினிமா நாட்டின் சமூக மற்றும் கலாச்சார சூழலின் வெளிப்பாடாகப் பிறந்தது என விவரித்த அவர், தனது தாயார் மரியா எலினா மார்க்யூஸ் மற்றும் தந்தை மிகுவல் டோருகோ ஆகியோர் மெக்சிகன் சினிமாவின் பொற்கால நடிகர்கள் என்று தெரிவித்தார்.
“மக்களுக்கு இடையிலான வேறுபாடுகளை நீக்குவதற்கும், நாடுகளுக்கு இடையில் பாலங்களை அமைப்பதற்கும் திரைப்படங்களே சிறந்த வழி என்று நான் எப்போதும் எண்ணியிருக்கிறேன்.
மெக்ஸிகோ தற்போது சர்வதேச திரைப்படத் துறையில் அற்புதமானப் படைப்பாற்றல் மற்றும் தயாரிப்பு திறனைக் கொண்டுள்ளது, இது சினிமாவில் ஒரு புதிய சகாப்தத்திற்கு நம்மை இட்டுச் செல்கிறது.
இந்த தனித்துவமான விழாவில் மெக்சிகன் திரைப்படங்கள் பங்கேற்பதில் பெருமிதம் கொள்கிறோம்” என்றும் அவர் கூறினார்.
டேபிள் டாக்’ அமர்வின்போது, ரெட் ஷூஸ் படத்தின் தயாரிப்பாளர் அலெஜான்ட்ரோ டி இகாசா, “மெக்சிகன் அரசாங்கத்திடம் சினிமாவுக்கான நிதி உள்ளது.
அதன்கீழ் அவர்கள் எங்களைப் போன்றவர்களுக்கு உதவுகின்றனர். இதுபோன்ற திரைப்படங்களை வணிகமயமாக்குவது சிரமம் என்பதால் அரசின் சலுகைகள் இல்லாமல் தயாரிப்பது கடினம்.
நாங்கள் உண்மையில் ஒரு திருமணத்தைப் பற்றிய திரைப்படத்தை கூட்டாக உருவாக்க முயற்சிக்கிறோம். இரு நாடுகளிலும், திருமணங்கள் பெரியதாகவும், வண்ணமயமாகவும், பல நாட்கள் நீடிக்கும். இந்த வகையான கலாச்சார ஒற்றுமைகள் எதிர்காலத்தில் மற்ற திட்டங்களுக்கு வழிவகுக்கும்’’ என்றார்.
2022 ஆம் ஆண்டு மெக்சிகன் திரைப்படமான ரெட் ஷூஸ் சர்வதேச போட்டிப் பிரிவில் 14 படங்களுடன் போட்டியிடுகிறது. அதில் வெற்றி பெறுபவருக்கு கோல்டன் பீகாக் வழங்கப்படும்.
கார்லோஸ் எய்ச்சல்மான் கைசர் இயக்கிய ரெட் ஷூஸ், தனிமையாக வாழும் ஒரு விவசாயியைப் பற்றிய திரைப்படமாகும். இப்படம் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளர்கள் விருதுக்கான போட்டியில் இருந்தது. பல விழாக்களில் பல பரிந்துரைகளைப் பெற்றது.
‘சிறந்த அறிமுக இயக்குநர் ‘விருதுக்கான போட்டியில் மெக்சிகோ மற்றும் அமெரிக்கா கூட்டுத் தயாரிப்பான, ஐலேண்ட் ஆஃப் லாஸ்ட் கேர்ள்ஸ் உள்ளது.
ஆன்-மேரி ஷ்மிட் மற்றும் பிரையன் ஷ்மிட் ஆகியோரால் இயக்கப்பட்ட இப்படம், கடல் குகையில் சிக்கி, பிரம்மாண்டமான அலைகள் மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட உயிரினங்களுடன் போராடும் மூன்று சகோதரிகளின் பரபரப்பான கதையாகும். இப்படம் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவிலும், ஃபேன்டாசியா விழாவிலும் திரையிடப்பட்டது.
மெக்சிகோ மற்றும் அர்ஜென்டினா இடையேயான இணைத் தயாரிப்பான மாண்டோ டி கெமஸ் (ராப் ஆஃப் ஜெம்ஸ்) கலைடஸ்கோப் பிரிவின் கீழ் திரையிடப்பட்டது.