‘காரி’ – பார்க்கும்படியாக ஒரு சசிகுமார் படம்!

‘ஏய்.. என்ன லந்தா’ என்று தெனாவெட்டாகப் பேசும் வசனமாகட்டும், ‘அஹ அஹ அஹ..’ என்று வெள்ளந்தியாகச் சிரிப்பதாகட்டும், தாடியைத் தடவிக்கொண்டு ஆக்‌ஷன் காட்சிகளில் அதகளம் செய்வதாகட்டும், இன்னொரு டி.ராஜேந்தர் என்று வர்ணிக்கத்தக்க அளவுக்கு அமர்க்களமாய் அமைந்தது இயக்குனர் சசிகுமாரின் அறிமுகம்.

யார் கண்பட்டதோ, அடுத்தடுத்து வந்த படங்கள் ஒரு வாரத்தைக் கூட தாண்டவில்லை.

ஒருகாலத்தில் நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், வெற்றிவேல், கிடாரி போன்ற படங்களின் வழியே நம்மைப் பிரமிக்கவைத்தவர் சசிகுமார். பி அண்ட் சி சென்டரில் செல்வாக்கு அதிகம் என்று புகழப்பட்டவர்.

காலம் சட்டென்று மாறி, ’அவர் படமாங்க’ என்று தலையைச் சொறிவது அதிகமாகிவிட்டது.

இந்த சூழலில் சசிகுமார், பார்வதி அருண், நாகி நீடு, ஜே.டி.சக்ரவர்த்தி, பாலாஜி சக்திவேல், ராம்குமார், ரெடிங் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்த ‘காரி’ வெளியாகியிருக்கிறது. இப்படமாவது பழைய சசிகுமாரை கண்ணில் காட்டியிருக்கிறதா?

எத்தனை கதை!

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காரியூர், சிவனேந்தல் என்ற இரு ஊர்களுக்குப் பொதுவாக ஒரேயொரு கருப்பன் கோயில். இரு ஊர்களுக்கும் இடையே பிரச்சனை வர, தனித்தனியே கொடை விழா நடத்த முடிவாகிறது.

இந்த நிலையில், பாழடைந்து கிடக்கும் கோயிலை சீர்செய்யும் விவகாரத்தில் இரண்டு ஊராரும் அடித்துக் கொள்கின்றனர்.

அப்போது, ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் ஊரைச் சேர்ந்தவர்களே கோயில் நிர்வாகத்தை நடத்தலாம் என முடிவாகிறது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்க, காரியூரை விட்டு சென்னை சென்ற வெள்ளைச்சாமியை மீண்டும் அழைக்க அவ்வூரார் முடிவு செய்கின்றனர். இதுவொரு கதை.

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மொத்தக் குப்பையையும் சாக்கடை நீரையும் காரியூர் கிராமத்தில் கொட்ட முடிவு செய்கிறது அரசு நிர்வாகம்.

ஆற்றில் நீர் பாயாத காரணத்தாலும், ஊரில் வெள்ளாமை இல்லாததாலும் மக்களால் அதனை எதிர்த்துக் குரல் கொடுக்க முடியாத நிலைமை.

காவல் தெய்வம் கருப்பன் மட்டுமே இவ்விஷயத்தில் துணை நிற்கும் என்பது அவ்வூராரின் நம்பிக்கை.

சென்னையில் குதிரைகளைப் பழக்கி வளர்த்து வரும் பண்ணையில் வேலை செய்து வருகிறார் வெள்ளைச்சாமி (ஆடுகளம் நரேன்). பொதுப்பிரச்சனை எதுவாக இருந்தாலும் முதல் ஆளாகத் தமது எதிர்ப்பைப் பதிவு செய்பவர்.

வெள்ளைச்சாமியின் மகன் சேது (சசிகுமார்). தகப்பனுக்கு நேரெதிரான குணம் கொண்டவர். ஒவ்வொருவரும் அவரவர் வாழ்வைப் பார்த்துக் கொண்டாலே போதுமானது என்ற எண்ணமுடையவர்.

குதிரை ஜாக்கியான சேது, ஒருமுறை தனது நண்பனுக்காக வேண்டுமென்றே பந்தயத்தில் தோற்க, அதன் காரணமாக அந்த குதிரையைச் சுட்டுக் கொன்றுவிடுகிறார் உரிமையாளர் (ராம்குமார்).

அதன் தொடர்ச்சியாக, வெள்ளைச்சாமியும் மரணமடைகிறார். இது இன்னொரு கதை.

துக்கத்தில் உழலும் சேது, தந்தையைத் தேடி வரும் உறவினர்களோடு காரியூர் செல்கிறார். மிகச்சில நாட்களிலேயே அவர்களில் ஒருவராகிறார்.

அங்கிருக்கும்போது, முட்காட்டில் மயங்கிக் கிடக்கும் ஒரு பெண்ணை ஊருக்குள் தூக்கிச் செல்கிறார். மீண்டும் அவரைப் பார்க்கும்போது சேது மனதில் காதல் முளைக்கிறது.

சேது காப்பாற்றிய பெண்ணின் பெயர் மீனா (பார்வதி அருண்). அவரது தந்தை (பாலாஜி சக்திவேல்) ஒரு முரட்டுத்தனமான ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வருகிறார். அதன் பெயர் காரி.

சிவனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காரியை பெரிய விலை கொடுத்து வாங்க முன்வர, அதற்குள் மகளின் திருமணத்திற்காக அந்த காளையை அடிமாடாக விற்றுவிடுகிறார் மீனாவின் தந்தை.

காரியை இழந்து மீனா கதறி அழ, அதனைத் தேடிச் செல்கிறார் சேது. எஸ்கேஆர் என்பவருக்குச் சொந்தமான ஆலையில் பலியாகப் போகும் காரியை மீட்கிறார். இது மற்றுமொரு கதை.

தொழிலதிபர் எஸ்கேஆர் (ஜேடி சக்ரவர்த்தி), ஜல்லிக்கட்டு காளைகளைத் தேடிப் பிடித்து உணவாக்கத் துடிக்கும் வக்கிர மனநிலை கொண்டவர். அதையே ‘த்ரில்’ என்று எண்ணுபவர்.

அவரது பிடியில் இருந்த காரியைத்தான் சேது காப்பாற்றுகிறார். அதனால், காரியூர் சென்று அந்த காளையைத் தந்தால்தான் ஆயிற்று என்று தகராறு செய்கிறார். அதற்காகத் தனது பணபலத்தை, அதிகாரத்தைப் பிரயோகிக்கிறார். இதுவும் ஒரு கதை.

’காரி’ படத்தில் இப்படி எத்தனையோ கதைகள் இருக்கின்றன. இக்கதைகளைத் தொகுத்தால், எஸ்கேஆரின் சதியை முறியடித்து காரியைக் காப்பாற்றுவதோடு காரியூர் குப்பைக் கிடங்காக மாறும் அபாயத்தை சேது தவிர்த்தாரா என்பதைச் சொல்கின்றன மீதமுள்ள காட்சிகள்.

பல நூறாண்டுகளுக்கு முன் பிழைப்பு தேடி வந்த மக்களின் கண்ணில் கருப்பனைக் காட்டிய காட்டு மாடு தொடங்கி ஊரின் அமைதி பாழ்படக் கூடாது என்று நினைக்கும் பைத்தியக்கார பாத்திரம் வரை இன்னும் பல கதைகளையும் சொல்ல முனைந்திருக்கிறார் இயக்குனர் ஹேமந்த். அதுதான் இந்த படத்தின் பலமும் பலவீனமும்..

மீண்டும் சசிகுமார்!

’காரி’ எனும் ஜல்லிக்கட்டுக் காளையை வளர்ப்பவராக பாலாஜி சக்திவேலுவும் அவரது மகளாக பார்வதி அருணும் வருகின்றனர். இருவரது நடிப்புமே ‘ஏ’ கிளாஸ்.

காளையை விற்றுவிட்டதை அறிந்து கதறுமிடத்தில் பார்வதி அருண் நடிப்பு அபாரம். நாயகியை மையமாக கொண்ட பழைய தமிழ் படக் கதைகளை ‘ரீமேக்’ செய்வதாக இருந்தால், தாராளமாக பார்வதியை ‘புக்’ செய்யலாம்.

ஆடுகளம் நரேன் நடிப்பு அருமையாக இருந்தாலும், அவரது ‘விக்’ மட்டும் துருத்தலாகத் தெரிகிறது. காரியூர் மக்களின் நம்பிக்கை குறித்து சசிகுமாரிடம் தெலுங்கு நடிகர் நாகி நீடு கிளாஸ் எடுக்குமிடம் ‘வாவ்’ சொல்ல வைக்கும்.

சிவனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவராக மூணார் ரமேஷ் சில பிரேம்களில் வர, அவரோடு சேர்ந்து மீசையை முறுக்குபவராக வரும் நபர் நன்றாக வில்லத்தனம் காட்டியிருக்கிறார்.

ஆனால், அந்தளவுக்கு கூட தெலுங்கு நடிகர் ஜே.டி.சக்ரவர்த்திக்கு வாய்ப்பளிக்கவில்லை இயக்குனர். அவரது மனைவியாக வரும் சம்யுக்தா சண்முகநாதனுக்கும் அதே கதைதான்.

அம்மு அபிராமி, ராம்குமார், ரெடின் கிங்ஸ்லி, பிரேம் போன்றவர்கள் ஆங்காங்கே தலைகாட்டியிருந்தாலும், இந்தக் கதையில் அவர்கள் எதற்கு என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

கிட்டத்தட்ட படம் தொடங்கி பத்து நிமிடம் கழித்தே சசிகுமார் திரையில் தோன்றுகிறார். அதன்பின், பெரும்பாலான காட்சிகளில் அவர் மட்டுமே பிரதானமாக இருக்கிறார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, எந்த உறுத்தலும் இல்லாமல் பார்க்கும்படியாக ஒரு சசிகுமார் படம். அந்த திருப்தி மட்டுமே இப்படம் தரும் ஆச்சர்யம்.

சண்டைக்காட்சிகளை அன்பறிவ் சகோதரர்கள், ஸ்டண்ட் சில்வா, தினேஷ் சுப்பராயன் என மூன்று கலைஞர்கள் கையாண்டிருக்கின்றனர். அவர்களின் பங்கு இக்கதையில் கணிசம்.

கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவில் ராமநாதபுரத்தின் வறட்சி கூட அழகாகத் தெரிகிறது. அதேநேரத்தில், கூவம் நதியோரம் காட்டப்படும் வீடு செட்டப்பை காட்டுவதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மிலன் கலையமைப்பில் கிராமப்புறக் காட்சிகள் இயல்பாகத் தெரிந்த அளவுக்கு சென்னைப்புறக் காட்சிகள் அமையவில்லை.

சிவா நந்தீஸ்வரன் படத்தொகுப்பு ‘காரி’யின் மாபெரும் பலம். கிளைமேக்ஸ் ஜல்லிக்கட்டு காட்சியில் அருமையாக ஆக்கம் செய்யப்பட்ட விஎஃப்எக்ஸுக்கு ஏற்ப அமைந்திருக்கிறது அவரது உழைப்பு.

டி.இமான் இசையில் ’கொப்பம்மவனே’ நெகிழ வைக்க, ‘சாய்ஞ்சிக்கவா’ கொஞ்சமாய் நெளிய வைக்க, ’எங்கும் ஒளி பிறக்கவே’ துள்ளலை விதைக்கிறது.

பின்னணி இழை வழக்கம் போல என்று சொல்ல வைத்தாலும், அதுதான் திரையோடு ஒன்ற வைக்கிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

நேர்த்தியான காட்சியமைப்பு!

ஜல்லிக்கட்டு எனும் தமிழர் அடையாளத்தைச் சுற்றி கதை அமைக்கப்பட்டிருந்தாலும், திரைக்கதை எங்கெங்கோ அலைபாய்கிறது.

காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் நன்று என்ற காரணம் மட்டுமே முழுப்படத்தையும் ரசிக்க வைக்கிறது.

நாயகன் சசிகுமாரை நாயகி பார்வதி இரண்டாம் முறையாக பார்க்கும் இரவு நேரக் காட்சி அற்புதமாக ஆக்கப்பட்டுள்ளது.

போலவே, கிராமத்திற்கு வருவதைப் பற்றி சிறிதும் யோசிக்காத சசிகுமார் பாத்திரம் அதற்குச் சம்மதிப்பதும் திரைக்கதையில் அருமையாக கையாளப்பட்டுள்ளது.

இதையெல்லாம் மீறி. சில காட்சிகள் இப்படத்திற்குத் தேவையா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.

வெள்ளைச்சாமி வெளியூர் சென்றதற்கான காரணம், சிவனேந்தல் – காரியூர் பிரச்சனையின் ஆணிவேர், முட்காட்டில் சிறை வைக்கப்பட்ட நாயகி உட்பட சில இடங்களில் சில கதைகள் சொல்லப்படாமல் விடுபட்டிருக்கின்றன அல்லது கத்தரிக்கப்பட்டிருக்கின்றன. அந்த துருத்தல்களை கவனமாகக் கையாண்டிருக்கலாம்.

மாட்டுக்கறி சாப்பிடுவதை எதிர்ப்பது போன்ற கருத்துகள் வசனங்களில் அமைந்துவிடக் கூடாது என்பதில் கவனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ஹேமந்த்.

ஆடுகளம் நரேன், பாலாஜி சக்திவேல், நாகி நீடு பேசும் வசனங்கள் பல இடங்களில் ‘நல்லா இருக்கே’ என்று எண்ண வைக்கின்றன.

அதே நேரத்தில் ‘இவங்கள்லாம் போரே வாழ்க்கைன்னு வாழ்ந்தவங்க’ என்பது போன்ற வசனங்களில் சாதிப்பெருமை மேலிடுவதைக் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.

காட்சியின் தன்மை ஆழமிக்கதாக இருக்க மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர்.

அதற்காக, ஒவ்வொரு பாத்திரங்களுக்கும் ஒரு பின்னணியைத் தர முயன்றிருக்கிறார்.

ஆனால், சந்தர்ப்ப சூழல் காரணமாக சில நடிப்புக்கலைஞர்கள் இடம்பெறாமல் போயிருப்பது ஹேமந்தின் முயற்சிகளுக்கு ‘பெப்பே’ காட்டியிருக்கிறது.

தடைகளைத் தாண்டி, ஒரு நல்ல கமர்ஷியல் படமாக ‘காரி’யைத் தர முயன்றிருப்பது அருமையான விஷயம். அடுத்த படத்தில் இயக்குனர் ஹேமந்த் மற்றும் குழு இன்னும் பெரிதாகச் சாதிக்கும் என்று நம்புவோம்!

– உதய் பாடகலிங்கம்

You might also like